தாவர நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

தாவர நூற்புழு

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

மது நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றிருந்தாலும், சரிவிகிதச் சத்தை அளிக்க முடியவில்லை. இக்குறையைச் சரி செய்வதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், நூற்புழுக்களின் தாக்கம் உழவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இவற்றில் நூற்புழுக்களின் தாக்குதல் குறைத்தே மதிப்பிடப்படுகிறது.

ஏனெனில், இப்புழுக்கள், அளவில் மிகவும் சிறுத்து, கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். மேலும் இவற்றின் தாக்குதலை எளிதில் அறிந்து கொள்ள முடியாது.

உலகளவில் தாவர நூற்புழுக்களால் மட்டும் 12.3 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்குச் சுமார் ரூ.2,106 கோடி அளவிலான பொருளாதார இழப்பைத் தாவர நூற்புழுக்கள் ஏற்படுத்துகின்றன.

தாவர நூற்புழுக்களின் நீளம் சுமார் 1 மி.மீ. முதல் 10 மி.மீ. வரை இருக்கும். இவை மண்ணிலும் செடியின் வேர்ப் பகுதியிலும் மறைந்து வாழும். இந்தப் புழுக்களுக்கு ஊசி போன்ற அலகு உண்டு. அதன் மூலம் பயிர்களின் வேர்களில் உள்ள செல் இரசத்தை உறிஞ்சிக் குடிக்கும்.

மேலும், அலகினால் வேரைத் துளைக்கும் போது, எண்ணற்ற காயங்களையும் வேரில் ஏற்படுத்தும். இந்தப் புழுக்களால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

தானியப் பயிர்கள், பயறுவகைப் பபயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், வணிகப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், மலைப் பயிர்கள் என்று, எல்லாப் பயிர்களிலும் இவை மிகுந்த சேதத்தை உண்டாக்கும்.

பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்தை, நூற்புழுக்கள் உறிஞ்சி விடும். இதனால், பயிர் வீரியமின்றி, வளர்ச்சிக் குன்றி, தோகை வெளுத்து, இலை, பூ, காய் சிறுத்து, காய்தல், உதிர்தல், கிளை மற்றும் நுனி கருகுதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.

மேலும் நூற்புழுக்கள் தனியாகப் பயிர்களைத் தாக்குவதுடன், நோய்களை உண்டாக்கும் பூசணம், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகளுக்குச் சாதகமான சூழலைப் பயிர்களில் ஏற்படுத்திக் கொடுக்கும். இதனால் மகசூல் இழப்புப் பன்மடங்கு கூடும்.

உருளைக் கிழங்கு, கேரட் போன்ற பயிர்களில் கிழங்குகளின் தோற்றத்தைச் சிதைத்து, அவற்றின் சந்தை மதிப்பைக் குறைத்து விடும். பொதுவாக, நூற்புழுக்கள் தாக்கிய பயிர்கள், சத்துக்குறை ஏற்பட்டதைப் போலத் தெரியும்.

பழப் பயிர்கள்

வாழை, திராட்சை, எலுமிச்சை, பப்பாளி, ஆப்பிள், பேரி, பீச், ப்ளம்ஸ், கிவி ஆகியவற்றில், வேரழுகல், வேர் முடிச்சு, குடையும் சுருள் வடிவ மற்றும் எலுமிச்சை நூற்புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.

காய்கறிகள்

முட்டைக்கோசு, பூக்கோசு, உருளைக் கிழங்கு, காரட் ஆகிய பயிர்களில் மிகுந்த சேதத்தை வேர் முடிச்சு நூற்புழுக்கள் ஏற்படுத்தும். இந்தப் புழுக்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளன. இவற்றால் 30 முதல் 60 சதம் வரை மகசூல் இழப்பு உண்டாகும்.

உருளைக் கிழங்கு முட்டைக்கூடு நூற்புழு நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ளது. இந்தப் புழுக்களால் 40 சதம் வரை மகசூல் குறைகிறது. மேலும், உருளைக் கிழங்குகளின் தோற்றம் சிதைவதால், அவற்றின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகிறது.

மலர்ப் பயிர்கள்

கனகாம்பரம், மல்லி, ரோஜா, சம்பங்கி போன்றவற்றை, வேர்க்கருகல், மொச்சை வடிவ மற்றும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் வெகுவாகத் தாக்கும். இப்புழுக்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கொண்டு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குளிர் மண்டலப் பயிர்களில் தாவர நூற்புழுக்கள ஏற்படுத்தும் சேத மதிப்பீடு அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலுமாக அழிப்பது கடினம். ஏனெனில், இரைச் செடிகள் வயலில் இல்லாத காலத்திலும் நூற்புழுக்கள் வெகு காலம் உயிரோடு இருக்கும்.

எனவே, இவற்றின் தாக்குதலைத் தொடக்க நிலையிலேயே அறிந்து கட்டுப்படுத்த வேண்டும். இந்தப் புழுக்களின் தாக்குதலை அறிய, மண் மற்றும் வேர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

மண் மாதிரி எடுக்கும் முறை

காய்கறி மற்றும் மலர்ப் பயிர்களில் 15-20 செ.மீ ஆழத்தில், பழப்பயிர்கள் மற்றும் வாசனைப் பயிர்களில் 30-40 செ.மீ. ஆழத்தில், 250 கி.கி. ஈர மண்ணை எடுக்க வேண்டும்.

வரப்பு ஓரங்கள், நிழலோர மண், அளவுக்கு அதிகமாக நீர்த் தேங்கிய மண், காய்ந்த மண் உள்ள இடங்களில் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது. நிலத்தின் அமைப்பு, மண் வகை போன்றவற்றைப் பொறுத்து 3-4 இடங்களில் மண்ணை எடுக்க வேண்டும்.

பிறகு, இவற்றை ஒன்று சேர்த்து, நெகிழிப் பையில் நிரப்பி, பெயர், முகவரி, பயிர், இரகம், முந்தைய பயிர், பயிரிடப்படும் பயிர், தேதி முதலியவற்றைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ள நூற்புழுவியல் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

நூற்புழுக்கள் தாக்கும் குளிர் பகுதிப் பயிர்களும் சேத நிலையும்

கேரட்: வேர் முடிச்சு நூற்புழுவால் ஏற்படும் சேதம் 10 சதம்.

பூக்கோசு, முட்டைக்கோசு: வேர்முடிச்சு, சுருள் நூற்புழுவால் ஏற்படும் சேதம் 8-12 சதம்.

உருளைக் கிழங்கு: முட்டைக்கூடு, வேர்முடிச்சுப் புழுவால் ஏற்படும் சேதம் 20-40 சதம்.

வாழை: வேர்முடிச்சு, வேரழுகல், குடையும் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழுவால் ஏற்படும் சேதம் 12.30 சதம்.

எலுமிச்சை வகைகள்: எலுமிச்சை நூற்புழுவால் ஏற்படும் சேதம் 12.60 சதம்.

ரோஜா: வேரழுகல், வேர்முடிச்சு, ஈட்டி வடிவ நூற்புழுவால் ஏற்படும் சேதம் 11.10 சதம்.

கார்னேசன், ஜெர்பரா: வேர்முடிச்சு நூற்புழு, வேரழுகல் நூற்புழுக்கள் தாக்கும்.

சம்பங்கி: வேரழுகல், வேர்முடிச்சு, கிரீடப் புழுக்கள் தாக்கும்.

ஆர்கிட், பூண்டு: அபிலென் காய்டஸ் தாக்கும்.

ஆந்தூரியம்: குடையும், வேர்முடிச்சு வேரழுகல் புழுக்கள் தாக்கும்.

லில்லி: வேரழுகல் நூற்புழுக்கள் தாகும்.

மிளகு: வேர்முடிச்சு, மொச்சை நூற்புழுக்களால் ஏற்படும் சேதம் 5.10 சதம்.

ஏலக்காய்: வேர்முடிச்சு, மொச்சை நூற்புழுக்களால் ஏற்படும் சேதம் 3.50 சதம்.

காபி, தேயிலை: வேரழுகல், சுருள், வேர்முடிச்சு நூற்புழுக்கள் தாக்கும்.

அறிகுறிகள்

நூற்புழுத் தாக்குதலுக்கு உள்ளான பயிர், வளர்ச்சியின்றி இருக்கும். இலைகள் வெளிர் மஞ்சளாகும். இலை, பூக்கள் வாடியிருக்கும். பெரும்பாலும் மண்வளக் குறையால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஒத்திருக்கும். எனினும், பயிரில் ஏற்படும் அறிகுறிகள் மூலம் நூற்புழுக்களின் வகைகளை அறிய முடியும்.

வேர் முடிச்சு நூற்புழுக்கள் தாக்கினால், வேர்ப் பகுதியில் வேர் முடிச்சுகள் இருக்கும். வேர் முடிச்சுகளின் அளவுகள் பயிருக்குப் பயிர் வேறுபடும். முட்டைக்கூடு நூற்புழுக்கள் தாக்கினால், பயிர்கள் திட்டுத் திட்டாக வெளிர் நிறமடைந்து, வளர்ச்சிக் குன்றியிருக்கும்.

நூற்புழுக்கள் அதிகமாக இருந்தால், பின்னோக்கிக் காய்தல், பகல் வாட்டம் போன்ற அறிகுறிகள் பயிர்களில் தென்படும். நூற்புழுவின் முட்டைக் கூடுகள் 20 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும்.

வேரழுகல் நூற்புழுக்கள் தாக்கினால், வேரின் வளர்ச்சிக் குன்றியும், வேர்கள் கறுப்பாகி அழுகியும் காணப்படும். குடையும் நூற்புழுக்கள் தாக்கினால், வேர்களில் கருமை அல்லது சிவப்புக் கோடுகளும், அழுகலும் காணப்படும். வேர்கள் அழுகிப் போவதால், மரங்கள் ஆழமாக வேர் ஊன்றாமல் காற்றில் எளிதாகச் சாய்ந்து விடும்.

எலுமிச்சை வேர் நூற்புழுக்கள் தாக்கினால், மரங்கள் வளர்ச்சிக் குன்றும். இலைகள் வெளிர் மஞ்சளாகியும், உள்நோக்கிச் சுருண்டும், எண்ணிக்கை குறைந்தும், சிறுத்தும் காணப்படும். இறுதியில் மகசூல் பாதிக்கும். மரத்தில் பின்னோக்கிக் காய்தல் நோய்க்கு இப்புழுக்களே காரணம்.

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள், பூசண நோய்க் கிருமிகளுடன் சேர்ந்து கூட்டு நோயையும் ஏற்படுத்தும். இத்தகைய நிலையில் வேரழுகல் மற்றும் வாடல் நோயின் தாக்குதல் அதிகமாகிச் செடிகள் விரைவில் பட்டு விடும்.

மேலாண்மை முறைகள்

தோட்டக்கலைப் பயிர்களில் நாற்றுகள் மூலம் நூற்புழுக்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, நாற்றங்காலில் தேவையான பாதுகாப்பு முறைகளைக் கையாளுவது அவசியம்.

நாற்றங்கால்

மண் வெப்ப மூட்டல்: சூரிய வெப்பம் அதிகமாக உள்ள மார்ச் முதல் ஜூன் மாதங்களில் 800 காஜ் பருமனுள்ள நிறமற்ற நெகிழித் தாளால் 30 நாட்கள் நாற்றங்காலை மூடி வைத்தல். நூற்புழுக்களுக்கு எதிர்ப்புள்ள அல்லது தாங்கி வளரும் இரகங்களைத் தேர்ந்தெடுத்தல்.

விதை நேர்த்தி செய்தல்: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடியைப் பயன்படுத்துதல். நாற்றங்காலில் வேர் உட்பூசணத்தைச் சதுர மீட்டருக்கு 100 கிராம் வீதம் இடுதல்.

இது, வேர்களின் உட்புறம் பரவி இருப்பதால் நூற்புழுக்கள் வேர்களுக்குள் புகுவதைத் தடுத்து விடும். நாற்றங்காலில் கார்போ பியூரான் 3ஜி குருணை மருந்தை, சதுர மீட்டருக்கு 10 கிராம் இடுதல்.

நில மேலாண்மை

கோடை உழவு: கோடையில் 2-3 முறை நிலத்தை ஆழமாக உழுவதால் நூற்புழுக்களின் முட்டைகள், வளர்ச்சியில்லா மற்றும் வளர்ச்சியுற்ற நூற்புழுக்கள் மண்ணுக்கு மேலே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்கப்படும்.

தரிசாக விடுதல்: இரண்டு பயிர்களுக்கு இடையில் சுமார் 2-3 மாதம் நிலத்தைத் தரிசாக விடுவதால், நூற்புழுக்கள் இரைச் செடியின்றிப் பட்டினியால் இறந்து அழிந்து விடும்.

பயிர்ச்சுழற்சி: காய்கறிப் பயிர்களைத் தொடர்ந்து பயிரிடாமல், தானியப் பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட்டால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

தரமான நாற்றுத் தேர்வு: நூற்புழுக்களால் தாக்கப்படாத, தரமான வளர்ச்சி அடைந்த நாற்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.

பசுந்தாள் பயிர்கள்: கொளுஞ்சி, சணப்பை, கிளைரிசிடியா போன்றவற்றைச் சாகுபடிக்கு முன்பு தனிப்பயிராக வளர்த்து மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணிலுள்ள அங்ககப் பொருள்களின் அளவும் பயிர்ச்சத்தும் மிகுந்து நூற்புழுக்களை எதிர்க்கும் உயிரினங்கள் பெருகி, இப்புழுக்களைக் கட்டுக்குள் வைக்கும்.

நூற்புழுக்களைக் கவரும் பயிர்கள்: சாகுபடிக்கு முன், தட்டைப் பயற்றை விதைத்தால், மண்ணிலுள்ள நூற்புழுக்களை அப்பயிர் கவர்ந்திழுக்கும். பிறகு, ஒரு மாதத்தில் அதை அகற்றி விட்டுப் பயிர் செய்யலாம்.

நூற்புழுக்களை அழிக்கும் பயிர்கள்: கேந்தி, கடுகு போன்ற பயிர்களின் வேர்களில் இருந்து வெளிப்படும் கசிவுப் பொருள்கள் நூற்புழுக்களை அழிக்கும். எனவே, இப்பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுட்டால், நூற்புழுக்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

புண்ணாக்கு: வேம்பு, ஆமணக்கு, புங்கம், காட்டாமணக்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 500- 1000 கிலோ வரை எடுத்து, நிலத்தில் இடுவதால் உண்டாகும் வெப்பமும், சில அங்கக அமிலங்களும் நூற்புழுக்களை அழித்து விடும்.

அங்கக உரங்கள்: மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழியெச்சம், மீன் கழிவுகள் ஆகிய விலங்கினக் கழிவுகள், முட்டைக்கோசு இலைகள், யூகலிப்டஸ் இலைகள், அன்னாசிக் கழிவு, ஆகாயத் தாமரை இலை போன்ற பயிர்க் கழிவுகள்,

கரும்பாலை, தேயிலை ஆலை, மரவள்ளி ஆலை போன்ற தொழிலகக் கழிவுகளை, தேவைக்கேற்ப இடவேண்டும். இதனால், மண்ணின் தன்மையும், சத்தும் மிகுவதுடன், நூற்புழுக்களும் கட்டுப்படுத்தப்படும்.

உயிரினக் கலவைக் கொல்லிகள்: சூடோமோனாஸ் புளுரசனஸ் உயிரினக் கலவையை எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து, இரண்டு நாட்கள் நிழலில் வைத்து, காலை, மாலையில் நீரைத் தெளித்து நிலத்தில் இட்டால், நூற்புழுக்களையும், மண் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழுக் கொல்லிகள்: நூற்புழுக்களின் எண்ணிக்கை, சேத நிலையைப் பொறுத்து, மருந்துகளின் அளவு, பயிருக்குப் பயிர் மாறுபடும். பொதுவாக, எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ கார்போ பியூரான் 3ஜி குருணை மருந்தை இடலாம்.

உருளைக் கிழங்கு சாகுபடி நிலத்தில் 66 கிலோ இட வேண்டும். மலர்ப் பயிர்களுக்கு போரேட் 10 ஜி குருணை மருந்தை 10 கிலோ வீதம் இடலாம். இந்த மருந்துகள், நூற்புழுக்கள் மற்றும் தக்காளியைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.


நூற்புழு SATHISH G 2

முனைவர் கோ.சதீஸ், முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் விஜயசாந்தி, முனைவர் பி.யோகமீனாட்சி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் – 602 025.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading