My page - topic 1, topic 2, topic 3

சூரியகாந்தி சாகுபடி உத்திகள்!

சூரியகாந்தி சாகுபடி

சூரியகாந்தி, முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதில், கொழுப்புக் குறைவாக இருப்பதால், இந்த எண்ணெய் இதய நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் தமிழ்நாட்டில் பெருமளவில் சூரியகாந்தி விளைகிறது.

குறைவாக மழை பெய்யும் இடங்களில், நெற்பயிருக்குப் பதிலாகச் சூரியகாந்தியை விதைக்கலாம். 90-100 நாட்களில் விளைந்து விடும். ஆள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், குறைந்த ஆட்களைக் கொண்டு அதிக வருவாயைப் பெறலாம்.

மண்வகை

நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண்ணிலும் சூரியகாந்தி விளையும். கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து, அதிக விளைச்சலைத் தரும்.

பருவம்

சூரியகாந்தியை மானாவாரியில் சாகுபடி செய்ய, ஆடி மற்றும் கார்த்திகைப் பட்டமும், இறவையில் பயிரிட, மார்கழி மற்றும் சித்திரைப் பட்டமும் ஏற்றவை.

இரகங்கள்

மார்டன்: வயது 75 நாட்கள். மகசூல் மானாவாரியில் எக்டருக்கு 900 கிலோ, இறவையில் 1,000 கிலோ, எண்ணெய் 36 சதம், கறுப்பு விதை, ஆயிரம் விதைகளின் எடை 44 கிராம்.

கோ.4: வயது 80-85 நாட்கள். மகசூல் மானாவாரியில் எக்டருக்கு 1,500 கிலோ, இறவையில் 1,750 கிலோ, எண்ணெய் 39.7 சதம், கறுப்பு விதை, ஆயிரம் விதைகளின் எடை 56 கிராம்.

டி.சி.எஸ்.எச்1: வயது 85 நாட்கள். மகசூல் மானாவாரியில் எக்டருக்கு 1,800 கிலோ, இறவையில் 2,500 கிலோ, எண்ணெய் 41 சதம், கறுப்பு விதை, ஆயிரம் விதைகளின் எடை 60 கிராம்.

கலப்பினம்: கோ.2: வயது 90-95 நாட்கள். மகசூல் மானாவாரியில் எக்டருக்கு 1,950 கிலோ, இறவையில் 2,250 கிலோ, எண்ணெய் 38-40 சதம், கரும்பழுப்பு விதை, ஆயிரம் விதைகளின் எடை 50-60 கிராம்.

கலப்பினம்: கோ.3: வயது 90-95 நாட்கள். மகசூல் மானாவாரியில் எக்டருக்கு 2,280 கிலோ, இறவையில் 2,750 கிலோ, எண்ணெய் 42 சதம், கறுப்பு விதை, ஆயிரம் விதைகளின் எடை 58 கிராம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை டிராக்டரால் இருமுறை உழு வேண்டும். அல்லது நாட்டுக் கலப்பையால் நான்கு முறை உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் வீதம் மட்கிய தொழுவுரத்தை இட்டு, புழுதி புரள ஆழமாக உழ வேண்டும்.

வீரிய ஒட்டு இரகங்களுக்கு 60 செ.மீ. இடைவெளியில், இரகங்களுக்கு 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். செலவைக் குறைக்க, பார் அமைக்கும் கருவியைப் பயன்படுத்தலாம். பயிர் இடைவெளி 30 செ.மீ. இருக்க வேண்டும்.

விதையளவு

இரகங்கள்: மானாவாரியில் விதைக்க, எக்டருக்கு 7 கிலோ, இறவையில் விதைக்க, 6 கிலோ.

ஒட்டு இரகம்: மானாவாரியில் விதைக்க, எக்டருக்கு 6 கிலோ, இறவையில் விதைக்க, 4 கிலோ.

விதைநேர்த்தி

மானாவாரியில் விதைகளைக் கடினப்படுத்தி விதைக்க வேண்டும். இதற்கு, விதைகளை 2 சத ஜிங்க் சல்பேட் கரைசலில் 12 மணி நேரம் ஊற வைத்து, பிறகு நிழலில் உலர்த்த வேண்டும்.

பிறகு, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம்.

மேலும், ஒரு பொட்டலம் அசோஸ் பைரில்லம் 3 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் அசோபாசை, கஞ்சியில் கலந்து நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்யலாம். நேர்த்தி செய்த விதைகளை 15 நிமிடம் உலர்த்தி உடனடியாக விதைக்க வேண்டும்.

விதைப்பு

ஒரு குழிக்கு இரண்டு விதை வீதம், பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் நட வேண்டும். நடவு செய்த 10-15 நாட்களில் வளர்ச்சியற்ற செடிகளை அகற்றி விட்டு, குழிக்கு ஒரு செடி வீதம் பராமரிக்க வேண்டும்.

உரமிடுதல்

மண்ணாய்வு முடிவின்படி தழை மணி சாம்பல் சத்துகளை இட வேண்டும். இறவைப் பயிரில், வீரிய ஒட்டு இரகத்துக்கு எக்டருக்கு, 60:90:60 கிலோ தழை மணி சாம்பல் சத்தை இட வேண்டும்.

இதுவே, இரகமாக இருப்பின், 60:30:30 கிலோ தழை மணி சாம்பல் சத்தை இட வேண்டும். மானாவாரியில் பயிரிடப்படும் இரகம் மற்றும் ஒட்டு இரகத்துக்கு, 40:50:40 கிலோ தழை மணி சாம்பல் சத்தை இட வேண்டும்.

நுண்ணுரம் இடுதல்

விதைப்புக்கு முன், எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணுரக் கலவையை, 40 கிலோ மணலில் கலந்து சாலில் இட வேண்டும். நிலத்தில் மாங்கனீசு பற்றாக்குறை இருந்தால், விதைத்த 30, 40, 50 நாட்களில் இலைவழியாக 0.5 சதக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி

களைகளைக் கட்டுப்படுத்த, விதைப்புக்கு முன் எக்டருக்கு, 2 லிட்டர் வீதம் புளூ குளோரோலின் களைக் கொல்லியைக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அல்லது விதைத்த மூன்றாம் நாள் எக்டருக்கு, 3.25 லிட்டர் வீதம் பென்டி மெத்தலின் களைக் கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

களைக் கொல்லியைத் தெளிக்கும் போது, நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். பிறகு, 30-35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும். களைக் கொல்லியைத் தெளிக்காத நிலையில், விதைத்த 15 மற்றும் 30 நாளில் கொத்து மூலம் களைகளை அகற்ற வேண்டும்.

இலைவழி நுண்ணுரம்

என்.ஏ.ஏ. கரைசல் தெளிப்பு: எக்டருக்கு 224 கிராம் என்.ஏ.ஏ. வினையூக்கி வீதம் எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து, 30 மற்றும் 60 நாளில் தெளிக்க வேண்டும்.

போரான் தெளிப்பு: பூக்கொண்டையில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலரத் தொடங்கும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் போரான் வீதம் கலந்த கலவையை, பூக்கொண்டைகள் நனையுமாறு தெளித்தால், மணிகள் நன்கு பிடிக்கும்.

அதிக மணிகள் பிடிக்க

அதிகளவில் மணிகள் பிடிக்க, மகரந்தச் சேர்க்கை நிகழும், காலை 9-11 மணிக்குள், மெல்லிய துணியால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பூக்களின் மேல்பாகத்தை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். 8-10 நாட்களில் இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

எக்டருக்கு 5 தேனீப் பெட்டிகள் வீதம் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும். பூக்களை, ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து லேசாகத் தேய்த்து விட்டாலும் சிறந்த பலன் கிடைக்கும்.

பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தலைத் துளைப்பான்: தாக்குதல் அறிகுறிகள்: நன்கு வளர்ந்த விதைகளை உண்டு, தலைப் பகுதியைத் துளைக்கும். இதனால், பூசணம் உருவாகித் தலைப்பகுதி அழுகத் தொடங்கும். வளர்ச்சி நிலையில் இப்புழு இலைகளை அதிகமாக உண்ணும்.

கட்டுப்பாடு: பச்சைப்பயறு, உளுந்து, கடலை மற்றும் சோயா மொச்சையை ஊடுபயிராக இடலாம். சூரியகாந்தி நிலத்தைச் சுற்றி, 3-4 வரிசைகளில் மக்காச்சோளம் அல்லது சோளத்தை விதைக்கலாம்.

ஏக்கருக்கு 50 துளுக்க சாமந்திச் செடிகள் வீதம் வளர்க்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி மற்றும் நான்கு இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம்.

ஏக்கருக்கு 20,000 வீதம் டிரைக்கோ கிரம்மா ஒட்டுண்ணிகளை விடலாம். எக்டருக்கு என்.பி.வி.250 எல்ஈ + பி.டி. 0.5 கிலோ வீதம் தெளிக்கலாம். இப்பூச்சி முட்டைகளை இடுமுன் 5 சத வேப்ப எண்ணெய் அல்லது 5 சத வேப்பங் கொட்டைச் சாற்றைத் தெளிக்கலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மோனோ குரோட்டோபாஸ் அல்லது 3 மில்லி குயினால்பாஸ் அல்லது 2.5 மில்லி குளோர் பைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.

பிஹார் கம்பளிப்பூச்சி: தாக்குதல் அறிகுறிகள்: இளம் புழுக்கள் இலையின் அடியில் இருக்கும். இலைகளைத் தீவிரமாகத் தின்னும். தாக்குதல் மிகுந்தால் இலைகள் உதிர்ந்து விடும்.

கட்டுப்பாடு: கோடையில் ஆழமாக உழ வேண்டும். நன்றாக மட்கிய உரங்களை இட வேண்டும். பட்டாணிப் பயிரை 2:1 என ஊடுபயிராக இடலாம். புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். எக்டருக்கு ஒரு லிட்டர் வீதம் பேசலோன் 35 கிகி மருந்தைத் தெளிக்க வேண்டும்.

புகையிலைப்புழு: தாக்குதல் அறிகுறிகள்: இளம் இலைகள், கிளைகள் மற்றும் இதழ்களை உண்ணும். பிறகு, நிலம் முழுவதும் பரவுவதால், இலைகள் உதிரும். வளர்ந்த விதைகளையும் புழுக்கள் உண்ணும்.

கட்டுப்பாடு: ஏக்கருக்கு 4 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம். முட்டைகளை இடுமுன் 5 சத வேப்ப எண்ணெய் அல்லது 5 சத வேப்பங் கொட்டைச் சாற்றைத் தெளிக்கலாம்.

எக்டருக்கு எஸ்.எல்.என்.பி.வி.250 எல்ஈ வீதம் தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குயினால்பாஸ் அல்லது 2 மில்லி குளோர் பைரிபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

இலைக்கருகல் நோய்: அறிகுறிகள்: இலைகளில் அடர் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் வட்டப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகளைச் சுற்றியுள்ள செல்கள் இறந்து விடும். வளையம் போன்ற கோடுகளும், மத்தியில் வெண் பகுதியும் இருக்கும்.

புள்ளிகள் முதலில் அடியிலையிலும், பிறகு, மேல் மற்றும் மத்திய இலைகளிலும் பரவும். அடுத்து, இலைக்காம்பு, தண்டு மற்றும் பூக்களிலும் பரவும்.

கட்டுப்பாடு: விதைப்புக் காலத்தைப் பொறுத்து, நோயின் நிலை மாறுபடும். செப்டம்பர் மாத இடையில் விதைத்தால் இதன் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேங்கோசெப் 0.3 சதக் கலவையை நான்கு முறை, பத்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

துருநோய்: அறிகுறிகள்: இந்நோய் சம்பாப் பருவத்தில் அதிகமாகவும், குறுவைப் பருவத்தில் குறைவாகவும், மெதுவாகவும் உருவாகும். இதனால், 40 சத மகசூல் குறையும்.

முதலில் அடியிலைகளை, பிறகு இளம் இலைகளை, அடுத்து, தண்டு, இலைக்காம்பு மற்றும் பூக்களைத் தாக்கும். மேங்கோசெப் 0.3 சதக் கலவையை, 2-3 முறை தெளிக்க வேண்டும்.

சார்கோல் அழுகல் நோய்: அறிகுறிகள்: செடிகள் திடீரென்று காய்ந்து விடும். நோயுற்ற செடிகள் காய்ந்து விடும். அடித்தண்டில் கறுப்புக் கோடுகள் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில், சிறிய கிளிரோசியஸ் இருக்கும். சில நேரங்களில், நாற்றழுகல், வேரழுகல் ஏற்படும்.

கட்டுப்பாடு: கோடையில் ஆழமாக உழ வேண்டும். பயிர்ச் சுழற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். எக்டருக்கு, 12.5 டன் தொழுவுரம் இட வேண்டும். முந்திய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது 2.5 கிலோ சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

அடிச்சாம்பல் நோய்: அறிகுறிகள்: இந்நோய் விதையின் மூலம் பரவும். இதனால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில், பழுப்புக் கோடுகளும், வேர்களில் அல்லது தண்டுகளில் முடிச்சுகளும் காணப்படும். முதல் அறிகுறியாக மேல் இரண்டு இலைகள் மஞ்சளாக மாறும்.

தீவிரமாகத் தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றியும், இலைகள் முழுதும் வெளிர் பச்சையாகவும் காணப்படும். தண்டுகள் ஒடியும் தன்மையில், இலைகள் திருகி இருக்கும். இலைகளின் அடியில் பூசணம் வளரும்.

கட்டுப்பாடு: ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் மெட்டாலாக்சிஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நோயுற்ற செடிகளை அகற்ற வேண்டும்.

அறுவடை

விதைகள் நன்கு முற்றி உலர்ந்த பூக்களை அறுவடை செய்து களத்தில் உலர்த்தி, விதைகளைப் பிரிக்க வேண்டும். இதற்கு, கையால் இயக்கப்படும் சூரியகாந்தி விதைகளைப் பிரிக்கும் கருவியைப் பயன்படுத்தலாம். அறுவடையின் போது, விதையில் 20 சதம் ஈரம் இருக்கும். அதனால், விதைகளை 8-9 சதம் ஈரப்பதம் வரும் வரையில் காய வைத்துச் சேமிக்க வேண்டும்.


முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் சு.சங்கீதா, முனைவர் செ.திருவரசன், வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம், விழுப்புரம் – 604 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks