செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர்.
இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில் தான் கிடைக்கின்றன. அந்தப் பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவைப்பழம் எனப் பல உள்ளன. இந்தப் பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம்.
சீமை இலந்தையின் தாவரப் பெயர் சிசீப்பஸ் ஜீஜீபா. ரம்னசேயவை என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இலந்தையின் பிறப்பிடம் சீனம். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. சுமார் 30 அடி உயரம் வளரும் மரத்தில், கூரிய முட்களும், முட்டையைப் போல மூன்று இலைகளும் இருக்கும்.
இராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. இலந்தையில், வைட்டமின் சி, ஏ, புரதம், கால்சியம், பிளவனாய்டுகள், பாஸ்பரஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், இரும்பு போன்ற சத்துகள் அதிகமாக உள்ளன. அதனால், இப்பழம் ஏழைகளின் ஆப்பிள் எனப்படுகிறது. இதற்கு, குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி எனப் பல பெயர்கள் உண்டு.
சீமை இலந்தையின் மருத்துவப் பயன்கள்
இலந்தை இலை, தசை, நரம்பைச் சுருங்கச் செய்யவும், மஞ்சள் காமாலை, கண் நோய் மற்றும் தோல் புண்ணைக் குணமாக்கும் புற மருந்தாக உள்ளது. இலந்தை வேர், பசியைத் தூண்டவும், காய்ச்சல், காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
வேர்ப்பட்டைச் சாறு, கீல்வாதம் மற்றும் வாத நோயைத் தணிக்க உதவுகிறது. பழம், சளியை நீக்க, மிலமிளக்க, இரத்தச் சுத்தியாக, முதுகுவலி, இதயநோய், ஆஸ்துமா, கழுத்துவலி, கண்ணொளிக்கு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலிக்கு, மன உளைச்சலைப் போக்க என, பல வழிகளில் பயன்படுகிறது.
விதை, கர்ப்பக்காலக் குமட்டல், வாந்தி, வயிற்றுவலிக்கு மருந்தாக உள்ளது. இதைச் சீனம், கொரியா, வியட்னாம், ஜப்பானில் தேநீராகக் குடிக்கிறார்கள். மேற்கு வங்கம் மற்றும் வங்காள தேசத்தில் ஊறுகாயாக உண்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்பழத்துடன், புளி, வற்றல், உப்பு, வெல்லத்தைச் சேர்த்து, நன்கு இடித்து வெய்யிலில் காய வைத்து, இலந்தை வடை செய்கிறார்கள்.
மண் மற்றும் தட்பவெப்பம்
இரு சமன்பாடு செம்மண், களிமண் நிலங்கள் மிகவும் உகந்தவை. உவர் நிலத்திலும் வறட்சிப் பகுதிகளிலும் இலந்தையைப் பயிரிடலாம். இதில், பனாரசி, உம்ரான், கோலா, கைத்தளி, கோமா, கீர்த்தி உமர், செப், சானோர் 2, கரகா, இலாச்சி, மெஹ்ரூன் என, பல வகைகள் உள்ளன.
நடவு
எட்டு மீட்டர் இடைவெளியில், ஒரு மீட்டர் ஆழ, அகல, நீளத்தில் குழிகளை எடுத்து ஆறவிட வேண்டும். பின்பு, மட்கிய தொழுவுரம் 25 கிலோ மற்றும் மேல் மண்ணைக் குழிகளில் இட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். ஆணிவேர் விரைவாகத் தோன்றுவதால், குழிக்கு 2-3 விதைகளை 3 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
இதனால், விதைத்த 90 நாட்களில் இந்த நாற்றுகள் மொட்டுக் கட்டுக்குத் தயாராகி விடும். அதனால், விருப்பமான இரகங்களில் ஓராண்டு முதிர்ச்சியுள்ள குச்சியில், திரட்சியான மொக்குகளைத் தேர்வு செய்து, மூடி மொட்டுக் கட்டும் முறையில் மொட்டுக் கட்ட வேண்டும்.
இதையடுத்து, ஒரு வாரத்தில் முளைகள் தோன்றத் தொடங்கும். இப்படி இல்லாமல், நாற்றங்காலில் மொட்டுக் கட்டியும் நடலாம். ஆண்டு முழுதும் மொட்டுக் கட்டலாம் எனினும், மார்கழி மாதம் சிறந்தது.
பாசனம்
இளம் கன்றுகளுக்கு வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மானாவாரியில் நீர்த் தேங்கும் வகையில் பெரியளவில் சாய்வுப் பாத்திகளை அமைக்க வேண்டும். காய்ப்பில் உள்ள மரங்களுக்கு, குறைந்தளவில் நீர்க் கிடைத்தால் போதும். எனினும், காய்ப்பு நேரத்தில் பாசனம் செய்தால், மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.
உரம்
ஓராண்டு மரத்துக்கு, ஆண்டுக்கு, 20 கிலோ தொழுவுரம், தழை: மணி: சாம்பல் சத்தை, 200: 100: 200 கிராம் வீதம் இட வேண்டும். ஈராண்டு மரத்துக்கு, 30 கிலோ தொழுவுரம், தழை: மணி: சாம்பல் சத்தை, 500: 200: 500 கிராம் வீதம் இட வேண்டும். கவாத்துக்குப் பிறகு உரங்களை இட வேண்டும்.
கவாத்து
பிப்ரவரி, மார்ச்சில் கவாத்து செய்ய வேண்டும். நோயுற்று நலிந்த, குறுக்காக வளரும் கிளைகளை அகற்ற வேண்டும். நான்கு பக்கமும் தரையிலிருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலே கிளைகள் தோன்ற வேண்டும்.
கன்றுகள் நேராக வளர்வதற்குத் துணையாக, குச்சிகளை நட்டு வைக்க வேண்டும். ஓராண்டு மரங்களில் நுனியை வெட்டிவிட வேண்டும். பின்பு, 6-8 முக்கியக் கிளைகளை, 15-30 செ.மீ. இடைவெளியில் வளரவிட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
பழ ஈ: இதன் புழுக்கள் தாக்குவதால், பழங்கள் பயனற்றுப் போகும். அதனால், இத்தகைய பழங்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மானோ குரோட்டோபாஸ் அல்லது டைமெத்தோயேட் வீதம் கலந்து தெளித்து, பழ ஈக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
லேக் பூச்சி: கவாத்து செய்யும் போது, இப்பூச்சியால் தாக்கப்பட்டுக் காய்ந்த குச்சிகளை வெட்டி எரித்துவிட வேண்டும். பின்பு, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி பாஸ்போமிடான் அல்லது மீத்தைல் டெமட்டான் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைக் கரும்புள்ளி நோய்
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பென்டாசிம் அல்லது குளோரோ தலானில் வீதம் கலந்து, 14 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்
இலந்தையில் அதிகச் சேதத்தை விளைவிப்பது சாம்பல் நோய். தாக்குதல் அதிகமானால் மகசூல் குறைந்து விடும். பழங்கள் வெடித்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கந்தகத் தூள் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மென்மை அழுகல்
பழங்களில் துருப்பிடித்த சிவப்பு நிறத்தில் வடிவமற்ற புள்ளிகள் தோன்றும். பிறகு, இவை பழம் முழுதும் பரவ, அந்தப் பழம் கூழைப் போலாகி விடும். இந்நோயை, 0.5 சத கார்பன்டாசிம்மை தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
பழங்கள் 3-4 ஆண்டிலிருந்து கிடைக்கும். பத்தாம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகள் வரை அதிகமான மகசூல் கிடைக்கும். முதிர்ச்சியின் நிலை இரகத்துக்கு இரகம் மாறுபடும்.
உம்ரான் இரகம் தங்க மஞ்சளாக இருக்கும். கைத்தலி இரகம் பச்சை மஞ்சளாக இருக்கும். கோலா இரகம் பச்சை மஞ்சள் அல்லது மஞ்சளாக இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 70-80 கிலோ பழங்களைக் கொடுக்கும்.
ஆ.இராஜ்குமார், வி.சங்கீதா, மு.வைதேகி, அ.இராமச்சந்திரன், ஜி.மதன்குமார், மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!