My page - topic 1, topic 2, topic 3

சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

சம்பா

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

லகளவில் முக்கிய உணவுப் பயிராக விளங்கும் நெற்பயிர், தமிழ்நாட்டில் 18-20 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. குறுவையில் 15.7 சதம், சம்பா பருவத்தில் 74.7 சதம், நவரையில் 9.6 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரிப் படுகையில், சம்பாவில் அதிகளவாக 4.1 இலட்சம் எக்டரிலும், தாளடியில் 1.2 இலட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது.

1920 இல் தமிழ்நாட்டில் எக்டருக்கு 805 கிலோவாக இருந்த மகசூல், 1965 இல், 1400 கிலோவாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் சாகுபடி உத்திகளால், தற்போது தமிழகத்தின் நெல் உற்பத்தித் திறன் எக்டருக்கு 3,040 கிலோவாகவும், பெரும்பாலான இடங்களில் எக்டருக்கு 5 டன்னுக்கு மேலாகவும் உள்ளது.

தமிழகத்தின் சராசரி நெல் உற்பத்தித் திறன் எக்டருக்கு 4123 கிலோவாகும். தமிழ்நாட்டில் 2013-14 இல், 17.26 இலட்சம் எக்டரில் 71.15 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இதை, 2025க்குள் 130 டன்னாகப் பெருக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

சம்பா, தாளடிக்கு ஏற்ற நெல் வகைகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடியில் நெல் பயிரிடப்படுகிறது.

ஜூலை- ஆகஸ்ட் முதல் ஜனவரி- பிப்ரவரி வரை முன்சம்பா பட்டமாகும். இந்தப் பட்டத்துக்கு 150-160 நாட்கள் வயதுள்ள, நீண்ட கால நெல் இரகங்கள் ஏற்றவை.

பின்சம்பா மற்றும் தாளடிப் பருவம், செப்டம்பர்- அக்டோபர் முதல் ஜனவரி-பிப்ரவரி 15ஆம் தேதி வரை உள்ளது. இதற்கு, 125-140 நாட்கள் வயதுள்ள, மத்திய கால நெல் இரகங்கள் ஏற்றவை.

நீண்ட கால வகைகள் (140-165 நாட்கள்)

ஆடுதுறை 40: வயது 145-150 நாட்கள். கதிர்கள் நீண்டு, மணிகள் நெருக்கமாக இருக்கும். பயிர் சாய்வதில்லை. அரிசி உருண்டையாக, பருமனாக இருக்கும். நீர்த் தேங்கும் பள்ளக்கால் பகுதிக்கு ஏற்றது. எக்டருக்கு 5.5 டன் விளைச்சல் கிடைக்கும்.

ஆடுதுறை 44: வயது 145-150 நாட்கள். நடுத்தர உயரம் உடையது. சாய்வதில்லை. அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். முழு அரிசித் திறன் 61.5 சதம். சமைக்கும் போது 1.68 சதம் நீளும்.

எக்டருக்கு 6.2 டன் நெல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 23.9 கிராம் இருக்கும். பச்சைத் தத்துப்பூச்சி, குலை நோயைத் தாங்கியும், இலைச் சுருட்டுப் புழுக்களை ஓரளவு தாங்கியும் வளரும்.

பொன்மணி: இதைச் சாவித்திரி என்றும், சிஆர் 1009 என்றும் சொல்வர். வயது 160 நாட்கள். கதிர்கள் நீண்டு, மணிகள் பருத்து இருக்கும். எக்டருக்கு 6 டன் நெல் கிடைக்கும். ஆயிரம் மணிகளின் 23.5 கிராம் இருக்கும். நேரடி விதைப்புக்கு ஏற்றது. புகையானைத் தாங்கி வளரும். சம்பா பருவத்தில் இந்த நெல்லே கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.

ஆடுதுறை 50: இது, 2012 இல் வெளியிடப்பட்டது. வயது 150 நாட்கள். அரிசி மத்திமமாக, சன்னமாக இருக்கும். ஆயிரம் மணிகள் 15.9 கிராம் இருக்கும். எக்டருக்கு 6.1 டன் விளைச்சல் கிடைக்கும். பயிர்கள் சாயும். இலை மடக்குப் புழுவை எதிர்த்து வளரும். குலை நோயைத் தாங்காது.

ஆடுதுறை 51: இது, 2017 இல் வெளியிடப்பட்டது. பிபிடி 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னியை ஆதாரமாகக் கொண்டது. வயது 155-160 நாட்கள். அரிசி மத்திமமாக, சன்னமாக இருக்கும்.

எக்டருக்கு 6.5 டன் நெல் கிடைக்கும். பயிர்கள் சாயும். இலை மடக்குப்புழு, குருத்துப்பூச்சி மற்றும் பாக்டீரிய கருகல் நோயை ஓரளவுக்குத் தாங்கும். குலை நோயை முழுமையாகத் தாங்கி வளரும்.

மத்திய கால இரகங்கள் (125-140 நாட்கள்)

ஆடுதுறை 46: வயது 135 நாட்கள். நன்கு தூர்ப் பிடித்து வளரும். அரிசி நீண்டு சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 6.1 டன் விளைச்சல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 23.8 கிராம் இருக்கும். முழு அரிசித் திறன் 63 சதம். இலை மடக்குப்புழு, குருத்துப் பூச்சி, குலைநோய், இலைக்கருகல் மற்றும் துங்ரோ நோயைத் தாங்கி வளரும்.

ஆடுதுறை 49: இது, 2011 இல் வெளியிடப்பட்டது. சிஆர் 1009 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. முத்துகளைக் கோர்த்ததைப் போல் மணிகள் இருக்கும். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும்.

எக்டருக்கு 6.2 டன் மகசூல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 14 கிராம் இருக்கும். அறுவடையின் போது மணிகள் உதிராது. முழு அரிசித்திறன் 71.3 சதம். சோறு ஒன்றுக்கொன்று ஒட்டாமல் சுவையாக இருக்கும். குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் மற்றும் துங்ரோ நோயை ஓரளவு தாங்கி வளரும். பாக்டீரிய கருகல் நோயைத் தாங்காது.

கோ.45: வயது 135-140 நாட்கள். அரிசி நீண்டு சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.5 டன் மகசூல் கிடைக்கும். துங்ரோ வைரஸ் நோயைத் தாங்கி வளரும்.

கோ.48: இது, 2007 இல் வெளியிடப்பட்டது. கோ.43 மற்றும் ஏஎஸ்டி 19 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். மிக உயரமாக வளரும். அரிசி, மத்திமமாக, சன்னமாக இருக்கும்.

எக்டருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும். குருத்துப்பூச்சி, குலை நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய் மற்றும் துங்ரோ வைரஸ் நோயை ஓரளவு தாங்கி வளரும். பாக்டீரிய கருகல் நோயைத் தாங்காது.

கோ.49: இது, 2007 இல் வெளியிடப்பட்டது. வயது 130-135 நாட்கள். குட்டையாக இருக்கும். நன்கு தூர்க் கட்டும். அரிசி மத்திமமாக, சன்னமாக, நுனி சற்று வளைந்து இருக்கும். பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பான், குலை நோய் மற்றும் துங்ரோ நோயை ஓரளவு தாங்கி வளரும். எக்டருக்கு 6.3 டன் மகசூல் கிடைக்கும்.

கோ.50: இது, 2010 இல் வெளியிடப்பட்டது. கோ.43 மற்றும் ஏடிடீ 38 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 135-140 நாட்கள். சாயாத இரகம். நீண்ட கதிர்களில் மத்திமமாக, சன்னமாக மணிகள் இருக்கும்.

எக்டருக்கு 6.4 டன் விளைச்சலைத் தரும். குலை நோய், இலையுறை அழுகல், பாக்டீரிய கருகல், துங்ரோ மற்றும் தத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது.

டிகேஎம் 13: வயது 130 நாட்கள். உயரம் நடுத்தரமாக இருக்கும். நன்கு தூர்க் கட்டும். சாயாது. அரிசி மத்திமமாக, சன்னமாக இருக்கும். எக்டருக்கு 5.9 டன் மகசூல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 13.8 கிராம் இருக்கும். அரவைத் திறன் 75.5 சதம். முழு அரிசித் திறன் 71.7 சதம். சமைக்கும் போது அரிசி நீளும்.

சோறு உதிரியாக, மென்மையாக இருக்கும். இலைச் சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி மற்றும் தத்துப்பூச்சித் தாக்குதலை ஓரளவும், குலை நோய், துங்ரோ, செம்புள்ளி மற்றும் இலையுறை அழுகலைத் தாங்கும் திறன் நடுத்தரமாகவும் இருக்கும்.

கோ.52 (எம்ஜிஆர் 100): இது, 2017 இல் வெளியிடப்பட்டது. பிபிடி 5204 மற்றும் கோ 50 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். நடுத்தர உயரம் கொண்டது. எக்டருக்கு 6.2 டன் மகசூல் கிடைக்கும்.

களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இரகங்கள்

கோ.43: இதன் வயது 135-140 நாட்கள். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.2 டன் விளைச்சல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 20 கிராம் இருக்கும். நெற்பழ நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்.

திருச்சி 1: இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும்.

திருச்சி 3: இது, 2010 இல் வெளியிடப்பட்டது. ஏடிடீ 43 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. அரிசி நடுத்தரப் பருமனாக, வெள்ளையாக இருக்கும். இட்லி தயாரிக்க ஏற்றது.

தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு மற்றும் குலை நோயைத் தாங்கி வளரும். எக்டருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும். அரவைத் திறன் 82 சதம். முழு அரிசித் திறன் 66 சதம்.

பள்ளக்கால் பகுதிக்கு ஏற்ற இரகங்கள்

சிஆர் 1009 சப் 1: இதன் வயது 155-160 நாட்கள். நீர்த் தேங்கும் பகுதிக்கு ஏற்றது. 15 நாட்கள் வரை வெள்ளப் பாதிப்பைத் தாங்கி வளரும். நீண்ட கதிர்களில், மணிகள் குறுகியும் பருத்தும் இருக்கும். எக்டருக்கு 6 டன் விளைச்சலைத் தரும். ஆயிரம் மணிகள் 23.5 கிராம் இருக்கும். அரவைத் திறனும் முழு அரிசித் திறனும் அதிகம்.

மாவுச்சத்து கூடுதலாக இருப்பதால், இட்லி தயாரிப்புக்கு ஏற்றது. நேரடி விதைப்புக்கும் ஏற்ற இரகம். புகையானைத் தாங்கி வளரும். இலைப்புள்ளி நோய், குலைநோய், வெண்முதுகுத் தத்துப்பூச்சி ஆகியவற்றை ஓரளவு தாங்கி வளரும். சம்பா பருவத்தில் இந்த இரகமே கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.

வீரிய ஒட்டு இரகம்

கோ வீரிய ஒட்டு 4: வயது 130-135 நாட்கள். எக்டருக்கு 7.4 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். குலை நோய், பழுப்புப் புள்ளி நோயை முழுதாகவும், இலையுறைக் கருகல், இலையுறை அழுகல் மற்றும் துங்ரோ நோயை ஓரளவும் தாங்கி வளரும்.


முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks