சம்பா நெற்பயிருக்கு ஏற்ற உர நிர்வாகம்!

சம்பா

மிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் ஏக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27 சதப் பரப்பில், சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது.

தற்போது சம்பா நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது, பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் தற்போதைய உற்பத்திக் குறியீட்டு அளவைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, எதிர்வரும் ஆண்டுகளில் எக்டருக்குச் சராசரியாக 9 டன் விளைச்சல் என்னும் இலக்கைக் கட்டாயம் அடைய வேண்டும்.

சீரான விளைச்சல் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமெனில், வேளாண் உத்திகளைச் சீரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

இதற்கு, உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சீரிய முறையில் உழவியல், நீர் மற்றும் களை நிர்வாகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும்.

நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஏனெனில், நெல் விளைச்சலில் சுமார் 40 சதம் உர நிர்வாகத்தைப் பொறுத்தே உள்ளது. ஒருங்கிணைந்த உர நிர்வாகம் என்பது, இயற்கை உரங்களான பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க் கழிவு;

செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்; உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் பைரில்லம் மற்றும் நுண்ணுரங்களைச் சேர்த்து, சமச்சீர் உணவாக அளிப்பதாகும்.

இதனால், நிலவளம் காத்து விளைச்சலைப் பெருக்கலாம். கோடையில் சணப்பை, தக்கைப் பூண்டைப் பயிரிட்டு மடக்கி உழுதால், மண்ணில் கரிமப் பொருள்களின் அளவு கூடும், பயிருக்கு வேண்டிய தழைச் சத்தும் கிடைக்கும்.

அடியுரம்

உற்பத்தித் திறனைப் பெருக்க, ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 2 டன் மட்கிய குப்பை அல்லது மண்புழு உரத்தை இட்டு, மண்ணின் அங்ககத் தன்மையை நிலை நிறுத்த வேண்டும். இராசயன உரங்களை மண்ணாய்வு அடிப்படையில் வயலில் இட வேண்டும்.

மண்ணாய்வு மூலம் மண்ணில் இருந்து பயிருக்குக் கிடைக்கும் உரத் தேவையைத் தீர்மானிக்கலாம். இதனால், தேவைக்குக் குறைவாக அல்லது அதிகமாக உரமிடுவதைத் தவிர்க்கலாம்.

மண்ணாய்வைச் செய்யாத நிலையில், பொதுப் பரிந்துரைப்படி உரங்களை இட வேண்டும். காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் பயிரிடப்படும் குறுவை நெல் இரகங்களுக்கு, ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும்.

இதர பகுதிகளில், ஏக்கருக்கு 48 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 16 சாம்பல் சத்து இடப்பட வேண்டும்.

இளம் நெற்பயிர் வேர்விட்டு வளர்ந்து, பூத்து, நன்கு மணிகள் பிடித்து, சீராக முதிர்ந்து மகசூல் பெருக மணிச்சத்து உதவுகிறது. இவ்வகையில், காவிரி டெல்டா மற்றும் கோவைப் பகுதியில் உள்ள குறுவைப் பயிர்களுக்கு, ஏக்கருக்கு 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 32 கிலோ யுரியா, 8 கிலோ பொட்டாஷை இட வேண்டும்.

இதர பகுதிகளில், ஏக்கருக்கு 100 கிலோ சூப்பர் பாஸ்பேட், 26 கிலோ யூரியா மற்றும் 6.6 கிலோ பொட்டாஷை இட வேண்டும்.

நுண்ணுரம்

இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக்குறை உள்ள நிலத்தில், ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட் மற்றும் 10 கிலோ சிங்க் சல்பேட்டை, விதைப்பின் போது இடலாம். அல்லது வேளாண்மைத் துறை நுண்ணுரக் கலவை 5 கிலோவை, 20 கிலோ மணலில் கலந்து, நடவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

உயிர் உரம்

ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ் பைரில்லம், 4 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரம் மற்றும் 10 கிலோ மணலில் கலந்து வயலில் இட வேண்டும். நட்ட 3-5 நாட்களில் ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை இட்டு, களையெடுக்கும் போது மண்ணில் மிதித்து மட்கச் செய்ய வேண்டும். இது, காற்றிலுள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தி நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.

மேலுரம்

நெல் வளர்ச்சியில் தூர்க்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில், பயிர்களுக்கு அதிகளவில் சத்துகள் தேவைப்படும். அதிகத் தூர்கள், அதிக மணிகள் மற்றும் மணிகள் சீராக முதிர்வதில், தழைச்சத்து முக்கியப் பங்காற்றுகிறது.

இலைவழி உரம்

இலைவழி உரமாக, யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாசியம் குளோரைடு 1 சதம் அடங்கிய கரைசலை, குருத்து உருவாகும் போதும், அடுத்துப் பத்து நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இந்த முறைகளை ஒருங்கே கடைப்பிடித்து விலையுயர்ந்த இரசாயன உரங்களைச் சரியாகப் பயிருக்குத் தந்தால், திட்டமிட்ட நெல் மகசூலைப் பெற முடியும்.


PB_Anuradha

முனைவர் அ.அனுராதா, முனைவர் மு.இராமசுப்ரமணியன், துரை நக்கீரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading