My page - topic 1, topic 2, topic 3

கோடையில் கால்நடைகள் பராமரிப்பு!

கால்நடை

கோடையில் கால்நடைகளைப் பாதுகாப்பது, சவாலான ஒன்று. ஏனெனில், இந்தக் காலத்தில் தான் கால்நடைகளின் இனப்பெருக்கத் திறன் கடுமையாகப் பாதிக்கும். பாலுற்பத்தி குறையும்.

கொழுப்பு மற்றும் எஸ்என்எப் போன்ற பால் கலவை பாதிக்கப்படும். அதனால், உணவு, குடிநீர் மற்றும் மேலாண்மைத் திட்டத்தை திடீரென்று மாற்றக் கூடாது. இது, கால்நடைகளில் மேலும் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தும். வெப்பக் காற்றில் இருந்து பாதுகாக்கத் தேவையான இடங்களை விலங்குகளுக்கு வழங்க வேண்டும்.

வெப்ப அழுத்தம் காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில் பாலுற்பத்தி, கடுமையாகப் பாதிக்கிறது. பாலிக்குலார் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க சுழற்சியும் பாதிக்கிறது.

இது, கால்நடை இனப்பெருக்கத்தில் பருவ வெளிப்பாடு மற்றும் சினைப் பிடிப்பைக் குறைக்கும். மேலும் சேவைக் காலமும் உலர் காலமும் (60 நாட்கள்) நீடிக்கும்.

இவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

கால்நடைகளை வெய்யிலில் நிறுத்தாமல், நல்ல மர நிழலில் அல்லது கூரை நிழலில் வைத்திருக்க வேண்டும். கூரையின் உயரம் 9 அடி இருப்பது நல்லது. கூரைக்கு வைக்கோல் நல்லது. அல்லது வெப்பம் ஊடுருவ முடியாத வெள்ளைப் பூச்சைக் கூரையில் பூசலாம்.

வெப்பக்காற்றுப் புகாத வகையில் சுவர் எழுப்பலாம். அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, கால்நடைகளின் மேல் நீரைத் தூவி, வெப்ப அழுத்தத்தைக் குறைக்கலாம். 1-5 நிமிட இடைவெளியில் அதிகமான நீரைத் தூறுவதைத் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில், இதனால் படுக்கை ஈரமாகி, மடிவீக்கம் மற்றும் சில நோய்கள் வரலாம். காற்றோட்ட வசதி மிகவும் அவசியம். எருமைகளில் வெப்ப அழுத்தத்தை ஈடு செய்ய, ஒரு தொட்டியில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

கோடையில் கால்நடைகளுக்குத் தேவையான அளவில் சுத்தமான நீரை வழங்க வேண்டும். சிறிய இடத்தில் அதிகளவில் கால்நடைகளை வைக்கக் கூடாது. ஏனெனில், இதனால் கோடையில் இன்னும் வெப்பம் கூடும்.

கோடையில் கால்நடைகளின் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். திடீர் மாற்றம் அதிகமான சிரமத்தை கால்நடைகளுக்கு ஏற்படுத்தும். காலை, மாலை மற்றும் இரவில் உணவளிக்க வேண்டும்.

அதிகாலை மற்றும் மாலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது நல்லது. இதன் மூலம் கால்நடைகளை அதிக வெப்பத்தில் இருந்து காக்கலாம். கோடையில் உலர் பொருள்களைத் தருவதைத் தவிர்த்து, நீர்ச் சத்துள்ள உணவைத் தருவது நல்லது. அளவு முறைகளையும் மாற்றலாம்.

மேலும், வெப்பநிலை மிகும் போது, மாடுகள் பொட்டாசியத்தை அதிகளவில் இழக்கும். அதனால் உணவில் கனிமச் சத்துகளைக் கூட்டினால், பொட்டாசிய குறையைத் தடுக்கலாம்.

தீவனமும் செறிவூட்டல் உணவும், மொத்தச் சத்தில் 70:30 வீதம் இருக்க வேண்டும். தானியங்கள் மற்றும் எண்ணெய் கேக்குகளின் வடிவத்தில் கூடுதல் உணவைக் கொடுப்பது நல்லது. கோடையில், 35 சதம் புரதம் நிறைந்த செறிவூட்டல் கலவை, ஒருநாளில் 5-6 முறை வழங்கப்பட வேண்டும்.

சரியான சத்து மற்றும் நிர்வாகம் மூலம் கோடை வெய்யிலின் எதிர் விளைவுகளைக் குறைக்கலாம்.


வெ.வருதராஜன், ம.செல்வராஜு, சு.பிரகாஷ், கா.இரவிக்குமார், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் – 637 002.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks