கால்நடைகளைப் பாதிக்கும் தீவன நச்சுகள்!

கால்நடை

சுந்தீவனப் பயிர்கள் மூலம் கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நச்சு, ஹைட்ரோ சைனைடு அல்லது புருசிக் அமில நச்சு ஆகும். இது, முக்கியத் தீவனப் பயிர்களான, சோளம், மக்காச்சோளம், கரும்புத்தோகை, மரவள்ளித் தழை ஆகியவற்றில் உள்ளது. இந்த நச்சு, 100 கிலோ தீவனத்தில் 250 மி.கி. அளவில் இருக்கும்.

இந்நச்சு, தீவனப் பயிர்களில் சைனோஜெனிக் கிளைகோசைடு என்னும் நச்சற்ற நிலையில் இருக்கும். தாவரத்தின் செல்களில் உள்ள சைனோஜெனிக் கிளைகோசைடு செல்கள், கால்நடைகள் மெல்லும் போது அல்லது அறுக்கும் போது அல்லது வறட்சியின் போது, உடைந்து வெளியேறிக் கால்நடைகளைப் பாதிக்கும்.

பாதிக்கப்படும் விலங்குகள்

ஹைட்ரோ சைனைடு நச்சால் அசை போடும் விலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படும். ஏனெனில், அவற்றின் இரைப்பையில் உள்ள அமில காரத் தன்மை, அதிகளவு நீர்ச்சத்து மற்றும் நுண்ணுயிர் நொதிகள், எளிதில், சைனோஜெனிக் கிளைக்கோசைடை, ஹைட்ரோ சைனைடு நச்சாக மாற்றும். இதனால், ஆடுகளை விட மாடுகளே அதிகளவில் பாதிக்கப்படும்.

தாவரக் காரணிகள்

ஒவ்வொரு தீவனப் பயிரும் ஹைட்ரோ சைனைடை வெளியேற்றும் அளவில் வேறுபடும். மற்ற தீவனப் பயிர்களை விட, சோளம் அதிகளவில் இந்நச்சை வெளியேற்றும். தீவனப் பயிர்களின் இலைகளில் தான் இந்நச்சு அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, இளம் இலைகள் மற்றும் தாவரத்தின் மேல் பகுதியில் உள்ள இலைகளில் அதிகளவில் இருக்கும். ஒருசில தீவனப் பயிர்களின் விதைகளிலும் இந்நச்சு இருக்கும்.

முதிர்ந்த தீவனப் பயிர்களை விட, விரைவாக வளரும் இளம் பயிர்களில், குறிப்பாக, அறுவடைக்குப் பிறகு துளிர்க்கும் இலைகளில் அதிகமாக நச்சுத் தன்மை இருக்கும். மகரந்தச் சேர்க்கைக்குப் பின் நச்சுத் தன்மை குறையும்.

தீவனப் பயிர்கள் வாடும் போதும், அறுக்கும் போதும், அதிகளவு இந்நச்சு வெளியேறும். பீட்டா கிளைகோசைடேஷ் நொதிகள் உள்ள தாவரத்தில், அதிகளவில் ஹைட்ரோ சைனைடு வெளியேறும்.

வறட்சியிலும் வறட்சிக்குப் பின் பெய்யும் மழையிலும் வளரும், தீவனப் பயிர்களிலும் அதிகளவில் நச்சுத் தன்மை இருக்கும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், இளம் இலைகள் மற்றும் தாவரத்தின் நுனியை அதிகளவில் மேய்வதால் இந்நச்சுக்கு உள்ளாகும். ஆனால், தீவனப் பயிர்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கினால், இலைகளில் இருக்கும் நச்சுத் தன்மை நீர்த்துக் குறைந்து விடும்.

மதியம் மற்றும் மாலையில் அறுக்கப்படும் தீவனப் பயிர்களை விட, காலையில் அறுக்கப்படும் தீவனத்தில் அதிகளவில் நச்சுத் தன்மை இருக்கும். அதிகளவு நைட்ரஜன் மற்றும் குறைந்தளவு பாஸ்பரஸ் உள்ள மண்ணில் வளரும் தீவனத்தில் ஹைட்ரோ சைனைடு நச்சு மிகுந்திருக்கும்.

அதிகப் பசியுடன் மேயும் கால்நடைகள் தீவிர நச்சுக்கு உள்ளாகும். மேலும், நஞ்சுள்ள தீவனப் பயிரை மேய்ந்து விட்டு, நீரை நிறையக் குடித்தாலும் நச்சுத் தன்மை கூடும்.
ஹைட்ரோ சைனைடு பாதிக்கும் விதம்

ஹைட்ரோ சைனைடு நச்சு, செல் சுவாசத்துக்குத் தேவையான நொதிகளைச் செயலிழக்கச் செய்யும். எனவே, ஆக்சிஜன் கிடைக்காமல் செல்கள் இறந்து விடும். இரத்தக் குழாயில் உள்ள ஆக்சிஜனைப் பயன்படுத்த முடியாமல் போவதால், திசுக்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்.

நச்சு அறிகுறிகள்

நச்சு அறிகுறிகள் கால்நடைகள் உண்ணும் நச்சின் அளவைப் பொறுத்தது. குறைந்தளவு ஹைட்ரோ சைனைடை உண்டால், அவை எவ்வித அறிகுறியும் இல்லாமல் எளிதாக வெளியேறி விடும். ஆனால், அதிகளவு நச்சைக் குறுகிய காலத்தில் உண்பதால் பாதிப்புகள் ஏற்படும். தீவிர நச்சேற்றத்தில் சில நிமிடங்களில் கால்நடைகள் இறந்து விடும்.

அறிகுறிகள்

மூச்சு வாங்குதல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம். தடுமாறி நடத்தல். எச்சில் வடிதல். கண்களில் நீர் வடிதல். இதயத்துடிப்பு அதிகரித்தல். இமையிலுள்ள சவ்வுப் படலம் செங்கல் சிவப்பாக மாறுதல். சிறுநீரும் சாணமும் வெளியேறுதல். தசைகள் துடித்தல். வலிப்பு உண்டாதல். வயிறு வீங்குதல். இறுதியில் மூச்சு விட முடியாமல் இறத்தல்.

பெரும்பாலும் நச்சு அறிகுறிகள் 30-45 நிமிடங்களில் ஏற்பட்டு விலங்குகள் இறந்து விடும். ஆனால், 2 மணி நேரத்துக்கு மேல் அறிகுறிகள் தெரிந்தால் விலங்குகள் குணமடைய வாய்ப்புண்டு.

சிகிச்சை முறைகள்

ஒரு கிலோ எடைக்கு 20 மி.கி. வீதம் ஒரு சத சோடியம் நைட்ரேட்டை, இரத்த நாளத்தில் மெதுவாகச் செலுத்த வேண்டும். பிறகு, ஒரு கிலோ எடைக்கு 500 மி.கி. வீதம் 25 சத சோடியம் தயோ சல்பேட்டை, இரத்த நாளத்தில் மெதுவாகச் செலுத்த வேண்டும்.

நான்கு லிட்டர் வினிகரை 12-20 லிட்டர் குளிர்ந்த நீரில் கலந்து வாய்வழியாகக் கொடுக்கலாம். இதனால், இரைப்பையில் உள்ள சைனைடு செயலிழந்து விடும்.

முன்னெச்சரிக்கை

வறட்சிக்காலம் முடிந்து இரண்டு வாரம் கழித்து, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மறுதாம்புச் சோளப்பயிரில் கால்நடைகளை மேயவிடக் கூடாது. 18-24 அங்குல உயரம் வளர்ந்த சோளப் பயிர்களைத் தான் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

காலை நேரத்தில் சைனைடு நச்சுள்ள தீவனப் பயிர்களில் கால்நடைகளை மேயவிடக் கூடாது. நெடுநேரம் பட்டினி கிடந்த கால்நடைகளை, சோளம் போன்ற சைனைடு நச்சுள்ள தீவனப் பயிர்களை மேயவிடக் கூடாது.

சைனைடு நச்சுள்ள இளம் தீவனப் பயிர்களைக் கால்நடைகளுக்குத் தரக் கூடாது. தீவனப் பயிர்களைச் சிறு துண்டுகளாக நறுக்கித் தர வேண்டும். வறண்ட தீவனப் பயிர்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து அல்லது இரண்டு மாதத்துக்கு மேல் சேமித்து வைத்துத் தர வேண்டும்.


கால்நடை P.SUMITHA 1 e1643028495985

மரு. ப.சுமிதா, கு.சுகுமார், ம.அர்த்தநாரீஸ்வரன், கால்நடை நுண்ணுயிரியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading