செய்தி வெளியான இதழ்: 2018 மே.
கோடை வெய்யில் தற்போது அதிகளவில் உள்ளதால், கால்நடைகள் வெப்ப அயர்ச்சியில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதனால், கால்நடைகளின் உற்பத்தித் திறன் குறைவதுடன், சில சமயம் இறப்பும் ஏற்படலாம். எனவே, கால்நடைப் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்துவது மிக அவசியம்.
கால்நடைகள் தங்களது உடல் வெப்ப நிலையைச் சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு சீராக வைத்துக் கொள்ளும். ஆனாலும், குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் போகும் போது, உடல் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ள இயலாமல் வெப்பத் தாக்குதலுக்கு உள்ளாகும்.
இதனால், உடல் வெப்ப நிலையும் சுவாசமும் கூடும். மூச்சு வாங்கும். நீரை நிறையக் குடிக்கும். தள்ளாடி நடக்கும். முறையான பராமரிப்பு இல்லா விட்டால் இறப்பு நேரிடும்.
எனவே, வெய்யில் மிகுதியாக உள்ள போது, மேய்ச்சலைத் தவிர்க்க வேண்டும். கொட்டகையில் ஒரு மாட்டுக்கு நான்கு சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும். கொட்டகைக் கூரை உச்சி, 12-14 அடி உயரம் இருக்க வேண்டும். சிறந்த காற்றோட்ட வசதி இருந்தால், வெய்யிலின் தாக்கம் குறையும். கழிவுகளை முறையாகச் சுத்தம் செய்தால் தொற்று நோய்கள் வராது.
வெய்யிலின் தாக்கம் மிகுந்துள்ள நாட்களில் கால்நடைகளின் உடல் வெப்ப நிலையைத் தணிக்க, தினமும் ஐந்து தடவை பூவாளியில் நீரை எடுத்து மாடுகளின் மீது தெளிக்கலாம்.
கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் எப்போதும் கிடைக்க வேண்டும். ஒரு கறவை மாட்டுக்குத் தினமும் குறைந்தது 70-80 லிட்டர் குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெப்பநிலை காரணமாகத் தீவனம் உண்பது குறையும். இதனால், சத்துக்குறை ஏற்பட்டு, உற்பத்தித் திறன் குறையும். சினைப் பிடிக்கும் தன்மை குறையும். வெய்யில் குறைவாக உள்ள காலை மாலை மற்றும் இரவில் தீவனத்தை அளிக்க வேண்டும்.
உதாரணமாக, 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு, தினமும் 15-20 கிலோ பசுந்தீவனம் 5-7 கிலோ உலர் தீவனம், 4-5 கிலோ கலப்புத் தீவனம் அளிக்க வேண்டும். பசுந்தீவனம், புல் வகையில் கோ.4, தானிய வகையில் கோ.எஃப். எஸ்.29, பயறு வகையில் வேலிமசால், மர வகையில் சூபாபுல், அகத்தி, கிளைரிசிடியா போன்றவற்றை உள்ளடக்கிய கலப்புப் பசுந்தீவனமாக இருக்க வேண்டும்.
மேலும், அடர் தீவனத்தில் கட்டாயம் தானுவாஸ் தாதுப்புக் கலவை 2 சதவீத அளவில் இருக்க வேண்டும். அல்லது ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 40 கிராம் வீதம் குடிநீரில் கலந்து தரலாம். அசோலா பாசியைத் தினமும் ஒரு மாட்டுக்கு 1.5 கிலோ அளிக்கலாம். இதன் மூலம் புரதச்சத்துத் தேவையை ஈடு செய்யலாம்.
வறட்சிக் காலத்தில் ஹைட்ரோபோனிக் மூலம் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து கால்நடைகளுக்குத் தரலாம். நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, தகுந்த நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள்வது அவசியம்.
வெப்ப அயர்விலிருந்து கோழிகளைப் பாதுகாத்தல்
கால்நடைகளைப் போல, கோழிகளையும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். தற்சமயம் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்ப அயர்ச்சி, நச்சுயிரி நோய்களால் கோழிகள் இறப்பும், உற்பத்தித் திறன் குறைவும் ஏற்படலாம். ஆகையால், தகுந்த எச்சரிக்கை செயல்களை எடுக்க வேண்டும்.
வெய்யிலின் தாக்கம் மிகுந்துள்ள நேரங்களில், நிழலான இடம் மிக அவசியம். நல்ல காற்றோட்டமான இட வசதி மிக அவசியம். நாள் முழுவதும் சுத்தமான, குளிர்ந்த குடிநீர் இருக்க வேண்டும். வெய்யில் நேரத்தில் தீவனம் அளிக்காமல் இரவு நேரத்தில் அல்லது அதிகாலையில் தீவனம் அளிக்க வேண்டும்.
வளர்ந்த கோழிகள் வெப்ப அயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்படும். கோடையில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால், நச்சுயிரி நோய்களால் கோழிகள் பாதிக்கப்படும். எனவே, தகுந்த நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டுக்கோழிகளுக்கான தடுப்பூசி அட்டவணை
7 ஆம் நாள்: இராணிக்கெட் F1 தடுப்பூசி, கண், நாசி மூலம் 1-2 சொட்டு.
14 ஆம் நாள்: கம்போரா தடுப்பூசி(தேவைப்படின்), கண், நாசி மூலம் 1-2 சொட்டு.
28 ஆம் நாள்: இராணிக்கெட் லசோட்டா தடுப்பூசி, கண், நாசி, நீர் மூலம்.
56 ஆம் நாள்: இராணிக்கெட்ADVK/R2P தடுப்பூசி, அரை மில்லி, இறக்கை தோலுக்கடியில்.
கோழியம்மை ஓர் நச்சுயிரி நோய். இந்நோயால் தொண்டை அயர்ச்சி, தோல் பாதிப்புகள் ஏற்படும். கொண்டை, தாடை மற்றும் கண் அருகில் கொப்புளங்கள் தோன்றும். மேலும், முட்டையிடும் திறன் பாதிக்கப்படும்.
மஞ்சளையும் வேப்ப இலையையும் நன்கு அரைத்து வேப்ப எண்ணெய்யில் கலந்து கொப்புளங்களில் பூச வேண்டும். மேலும், வேப்ப இலையைக் குடிநீரில் போட்டு வைக்க வேண்டும். மேலும், இந்த நீரைப் பண்ணையில் தெளித்தால் கோழியம்மைப் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
வெப்ப அயர்ச்சி நீக்கிகள்: கோடைக் காலத்தில் எலுமிச்சைச் சாற்றை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். பெருநெல்லிச் சாற்றைக் குடிநீரில் அல்லது தீவனத்தில் அரைத்துக் கொடுக்கலாம். மேலும், மதிய வேளையில் குடிநீரில் மோரைக் கலந்து கொடுக்கலாம்.
மருத்துவர் வ.குமரவேல், முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி – 630 206.
சந்தேகமா? கேளுங்கள்!