நீடித்த நிலையான கரும்பு சாகுபடி!

கரும்பு சாகுபடி

செய்தி வெளியான இதழ்: 2018 மே.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்பது, கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் மற்றும் நீர்ச் சேமிப்பில் புதிய முயற்சி ஆகும். குறைவான விதை நாற்றுகள், குறைந்தளவு பாசனம், சரியான அளவு சத்து மற்றும் பராமரிப்பின் மூலம் கூடுதல் மகசூலுக்கு வழிகாட்டும் சாகுபடி முறை.

முக்கியக் கூறுகள்

ஒரு விதைப்பரு சீவல்களைக் கொண்டு நாற்றங்கால் தயாரித்தல். 25-30 நாள் வயதுள்ள இளம் நாற்றுகளை நடுதல். வரிசைக்கு வரிசை 5 அடி, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளி விடுதல். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் உரமிடுதல். ஊடு பயிரிட்டு மண்வளம் மற்றும் மகசூலை அதிகரித்தல். இயற்கை உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

கரும்பு – பயன்கள்

நீர்ப் பயன்பாட்டுத் திறன் கூடுகிறது. சரியான அளவில் உரங்களை இடுவதால், சத்துப் பராமரிப்புச் சிறப்பாக அமைகிறது. காற்றும் சூரிய ஒளியும் அதிகளவில் பயிர்களுக்குக் கிடைப்பதால், கரும்பில் சர்க்கரைக் கட்டுமானம் கூடுகிறது. சாகுபடிச் செலவு குறைகிறது. ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானமும், அதிக மகசூலும் கிடைக்கின்றன.

சாதாரண மற்றும் நீடித்த கரும்பு சாகுபடிக்குள்ள வேறுபாடுகள்

சாதாரண முறை நடவுக்கு 30 ஆயிரம் இரு பரு கரணைகள் தேவை. அதாவது, ஏக்கருக்கு 4 டன் கரும்பு தேவைப்படும். நீடித்த சாகுபடிக்கு 5 ஆயிரம் ஒரு பரு சீவல்கள் போதும். அதாவது, ஏக்கருக்கு 50 கிலோ கரும்பு மட்டுமே தேவைப்படும்.

சாதாரண நடவில் நாற்றங்கால் இல்லை. நீடித்த சாகுபடியில் நாற்றங்கால் உண்டு. சாதாரண முறையில் கரணைகள் நடப்படுகின்றன. நீடித்த முறையில் 25-35 நாள் நாற்றுகள் நடப்படுகின்றன. சாதாரண முறை நடவில் இடைவெளி 2-3 அடி. நீடித்த முறையில் இடைவெளி குறைந்தது 5 அடி.

சாதாரண முறையில் பாசன நீரின் தேவை அதிகம். நீடித்த முறையில் பாசன நீரின் தேவை குறைவு. சாதாரண நடவில் முளைப்புத் திறன் குறைவு. நீடித்த சாகுபடியில் முளைப்புத் திறன் அதிகம்.

சாதா நடவில் 10-15 முளைகள் கிளைத்து வரும். நீடித்த நடவில் 15-20 முளைகள் கிளைக்கும். சாதா நடவில் காற்று மற்றும் சூரிய ஒளி புகுதல் குறைவு. நீடித்த சாகுபடியில் இந்தத் தன்மை அதிகம். சாதா நடவில் ஊடுபயிர் சாகுபடி குறைவு. நீடித்த சாகுபடியில் ஊடுபயிர் சாகுபடி அதிகம்.

நாற்றுத் தயாரிப்பு

நாற்றுகளைத் தயாரிக்க, 5,000 ஒரு பரு சீவல்கள். 50 குழிகளைக் கொண்ட 100 குழித்தட்டுகள். 150 கிலோ கோகோபிட் தேவை. 7-9 மாத வயதுள்ள உயர் விளைச்சல் இரகத்திலிருந்து 5,000 ஒரு பரு சீவல்களை எடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்த கலவையில் 15 நிமிடம் ஊற வைத்து, நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.

பிறகு, இந்த மொட்டுகளைக் கோணிப்பையில் இறுகக்கட்டி நிழலில் 5 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு, குழித் தட்டுகளில் பாதியளவு கோகோ பிட் எருவை நிரப்பி, அவற்றில் விதை மொட்டுகள் மேல்நோக்கி இருக்குமாறு சற்றுச் சாய்வாக அடுக்கி, மீதிக் குழிகளை கோகோ பிட்டால் நிரப்ப வேண்டும். நிழல் வலை அல்லது மரநிழலில் வைத்து 25-30 நாட்கள் நீர் தெளிக்க வேண்டும்.

சீரான நாற்றுகளைப் பெறும் வழிகள்

விதைப்பரு சீவல்களை வெட்டி எடுத்ததும், அவற்றில் சிலவற்றை 1 சத சுண்ணாம்புக் கரைசலில் நனைத்து, ஈரமான ஒரு சாக்குப் பையில் 3-4 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும்.

நான்காம் நாள் இறுதியில், சாக்குப் பையைத் திறந்து நன்கு முளை விட்ட விதைப் பருக்களை எடுக்க வேண்டும். குழித் தட்டுகளில் முளைக்காமல் போன விதைப் பருக்களுக்குப் பதில், இந்தப் பருக்களை எடுத்து வைக்கலாம். இப்படிச் செய்தால், தரமான நாற்றுகளைப் பெறுவதும், சீரான வளர்ச்சியும் சாத்தியமாகும்.

நிலத் தயாரிப்பு

பயிர்க் கழிவுகளை நீக்கியதும் டிராக்டர் மூலம் 30 செ.மீ.க்கு மேல் ஆழமாக 1-2 முறை உழ வேண்டும். பின்பு, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 8-10 டன் தொழுவுரம், ஒரு கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது சூடோமோனாசை இட வேண்டும்.

ஐந்தடி இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும். இயந்திரக் கலப்பையால் பார்களுக்கு இடையே ஆழமாக உழுதால், இயற்கையுரம் மண்ணில் நன்கு கலப்பதுடன், வேர்கள் ஆழமாகப் பரவி பயிர்கள் சாயாமல் இருக்கும்.

நடவு செய்தல்

25-30 நாள் வயதுள்ள நாற்றுகளை நட வேண்டும். நடவுக்கு ஒருநாள் முன்பு நாற்றுகளுக்கு நீர் விடுவதை நிறுத்த வேண்டும். இதனால், நாற்றுகளை எளிதாக எடுக்க முடியும். நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளி விட்டு நட வேண்டும்.

மண்ணின் ஈரத்தைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். அதே போல் நடவுக்குப் பின்பும் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 15-க்கும் மேற்பட்ட தூர்கள் 2 மாதத்தில் உருவாகும். 2-3 தூர்கள் வந்ததும் முதலில் வந்த தாய்ச் செடியை வெட்டி நீக்க வேண்டும். இதனால் பக்கத் தூர்கள் நிறைய வெளிவரும்.

மண் அணைத்தல் மற்றும் தோகை உரித்தல்

நடவு செய்த 45 மற்றும் 90 நாளில் மண்ணை அணைத்து விட வேண்டும். மேலேயுள்ள 8-10 இலைகளே ஒளிச்சேர்க்கைக்குத் தேவை. எனவே, கீழேயுள்ள காய்ந்த மற்றும் காயாத தோகைகளை 5 மற்றும் 7 மாதத்தில் உரித்து பார் இடைவெளிகளில் இட வேண்டும்.

தோகைகளை உரிப்பதால், சுத்தமான பயிர்ப் பாதுகாப்பு, பயிர்களுக்கு இடையில் காற்றோட்டம் மிகுதல், பூச்சித் தாக்குதல் குறைதல், மற்ற பயிர்ப் பராமரிப்புப் பணிகள் எளிதாதல் ஆகிய நன்மைகள் கிடைக்கும். அடுத்து, நடவு முடிந்து 30, 60, 90 நாளில் களைகளை அகற்ற வேண்டும்.

மூடாக்கு

மூடாக்கை இட்டால் களைகள் கட்டுப்படும். மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கும். எனவே, கரும்புத் தோகையை ஏக்கருக்கு 1.5 டன் வீதம் எடுத்து, நடவு முடிந்து மூன்று நாட்களுக்குப் பின் பரப்பிவிட வேண்டும். அதேபோல், உரித்த தோகைகளையும் பார் இடைவெளிகளில் பரப்ப வேண்டும்.

பாசனம்

கரும்புக்கு அதன் மொத்த வளர்ச்சிப் பருவத்தில், ஏக்கருக்கு 60 இலட்சம் லிட்டர் நீர் தேவை. பார் முறை மற்றும் மாற்றுப்பார் முறை பாசனம் மூலம் 50 சதம் நீர் மிச்சமாகும். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 90 சதம் வரை நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்து, 40-70 சதம் வரை நீரைச் சேமிக்கலாம்.

நடவுக்குப் பின் மண்ணின் தன்மையைப் பொறுத்து, பயிரின் வயதைப் பொறுத்து, மழை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து, பாசனம் செய்ய வேண்டும். கிளை விடும் பருவத்தில், அதாவது, 36-100 நாட்களில், பத்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.

அதிக வளர்ச்சிப் பருவத்தில், அதாவது, 101-270 நாட்களில், வாரம் ஒரு முறையும், முதிர்ச்சிப் பருவத்தில், அதாவது, 271 நாளில் தொடங்கி அறுவடை வரை, 15 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் தர வேண்டும்.

நீடித்த நிலையான கரும்பு சாகுபடிக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை சொட்டுநீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை உரப்பாசனம் செய்ய வேண்டும். இம்முறையில், 45 சத நீரை, அதாவது 1,200 மி.மீ. நீரைச் சேமிக்க முடியும்.

ஊடுபயிர்

நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் இடைவெளி நிறைய இருப்பதால், காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி மற்றும் பசுந்தாள் உரப் பயிர்களை ஊடுபயிராக இடலாம். இதனால், களைகளைக் கட்டுப்படுத்தி, மண் வளத்தைப் பெருக்கி இலாபத்தைக் கூடுதலாக எடுக்க முடியும்.

மகசூல்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து உத்திகளையும் சரியாகக் கடைப்பிடித்தால், ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 5,000 மொட்டுகள் எனக் கணக்கிடும் போது, 150 டன் மகசூல் கிடைக்கும்.


கரும்பு DR.P.MURUGAN

முனைவர் பெ.முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், கள்ளக்குறிச்சி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading