My page - topic 1, topic 2, topic 3

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

ந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன.

இது, இந்திய மொத்தப் பழங்கள் உற்பத்தியில் 15 சதமாகும். இந்தியளவில் எலுமிச்சை மட்டும் ஆந்திரம், மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2,55,200 எக்டரில் உள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 9,082 எக்டரில் உள்ளது. இவற்றில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் 2,288 எக்டர் சாகுபடி மூலம் முதலிடத்தில் உள்ளது. புளியங்குடி, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர், தென்காசி, கடையம், சங்கரன் கோவில் போன்ற பகுதிகளில், சிறந்த முறையில் காலங்காலமாக எலுமிச்சை விளைகிறது.

கன்றுகள்

பெரும்பாலும் எலுமிச்சைக் கன்றுகள், விதை மூலமே உற்பத்தி செய்யப் படுகின்றன. ஒருசில இடங்களில் மொட்டுக் கட்டிய ஒட்டுக் கன்றுகளும் தயாரிக்கப் படுகின்றன. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லாததால், இப்போது விதைக் கன்றுகள் தான் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

மண்கலவை

தரமான கன்று உற்பத்திக்கு, சரியான மண் கலவை அவசியமாகும். திருநெல்வேலி மாவட்டம் வன்னிக் கோனேந்தலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், எலுமிச்சை ஆராய்ச்சி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அவற்றில் ஒன்றாக, எலுமிச்சை நாற்று உற்பத்திக்கு ஏற்ற மண் கலவை குறித்த ஆய்வு 2019-2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில், செம்மண், மணல், தொழுவுரம், கோழியெரு, மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றைக் கொண்டு, பலவித மண் கலவைகள் தயாரிக்கப்பட்டன.

கலவைக்கு நூறு பைகள் வீதம் சுமார் 1,100 பைகளைத் தயாரித்து, அவற்றில் நன்கு பழுத்த, முதிர்ந்த, மஞ்சள் நிற எலுமிச்சைப் பழங்களில் இருந்து எடுக்கபட்ட விதைகள், 2019 ஆம் ஆண்டு நவம்பரில் விதைக்கப் பட்டன. ஆய்வுக்கு முன்பாகவே மண் கலவைகளின் கார அமிலத் தன்மை, மின் கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து ஆகியனவும் அறியப்பட்டன.

இந்த ஆய்வில், கோழியெருவில் அதிக மின் கடத்தும் திறனாக 2.64 என்னும் அளவு காணப்பட்டது. கார அமிலத் தன்மை அனைத்து மண் கலவைகளிலும் ஏறத்தாழ நடுநிலையாகவே இருந்தன. தழைச்சத்தும் சாம்பல் சத்தும், மண்புழு உரம் மற்றும் கோழியெருவில் கணிசமாகக் கூடியிருந்தன.

முளைப்புத் திறன்

விதைகளின் முளைப்புத் திறன், 50 சத முளைப்புத் தன்மை, முதல் விதை முளைப்பதற்கு ஆன நாட்கள் ஆகிய விவரங்களும் பெறப்பட்டன. அதன்படி, கிட்டத்தட்ட அனைத்துக் கலவைகளிலும் முளைத்த நாற்றுகளில், பெரிய வேற்றுமை ஏதுமில்லை.

எல்லாப் பைகளிலும் இருந்த விதைகள் முளைக்க 13 நாட்களே ஆயின. மொத்த முளைப்புத் திறன், செம்மண், மணல், தொழுவுரம், கோழியெரு, மண்புழுவுரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை, சமமாகக் கலந்த கலவையில், 98.67 சதம் என இருந்தது. தொழுவுரம் இல்லாமல் சமமாகக் கலக்கப்பட்ட கலவைகளில் விதைகளின் முளைப்புத் திறன் 98 சதம் என இருந்தது.

ஒவ்வொரு கலவையையும் கொண்ட பைகள் 180 நாட்கள் பராமரிக்கப்பட்டன. விதைத்து 30 முதல் 180 ஆம் நாள் வரை, 30 நாட்கள் இடைவெளியில், ஆய்வுக்காகப் பலவித கலவைகள் நிரப்பப்பட்ட பைகளில் இருந்து 10 நாற்றுகளைப் பிடுங்கி, ஒவ்வொரு நாற்றிலும் ஒவ்வொரு 30 நாட்கள் இடைவெளியில், நாற்றின் உயரம், தண்டின் பருமன், இலைகளின் எண்ணிக்கை, மொத்த வேர்கள், வேர்களின் நீளம், பச்சை நாற்றுகளின் எடை, காய்ந்த நாற்றுகளின் எடை ஆகிய புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

நாற்றுகளின் வளர்ச்சி

இந்த ஆய்வுகளின்படி 180 நாட்கள் வரையிலும் செம்மண், மணல், தொழுவுரம், கோழியெரு, மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு ஆகியன சமமாகக் கலக்கப்பட்ட கலவையில் முளைத்த நாற்றுகளில், நாற்றின் அதிக உயரம் 54.70 செ.மீ., தண்டின் அதிகப் பருமன் 2.20 செ.மீ., மொத்த இலைகள் 42, வேர்களின் எண்ணிக்கை 109, வேரின் நீளம் 54.33 செ.மீ., பச்சை நாற்றின் எடை 13.77 மி.கி., காய்ந்த நாற்றின் எடை 6.58 மி.கி. என உயர்ந்து காணப்பட்டன.

சரியான கலவை

எனவே, ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு கலவைகளை ஒப்பிட்டுப் பார்த்த போது, செம்மண், மணல், தொழுவுரம், கோழியெரு, மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை, சமமாகக் கொண்ட கலவை, தரமான எலுமிச்சை நாற்று உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக அறியப்பட்டது.

எனவே, விவசாயிகள் சொந்தமாக எலுமிச்சை நாற்றுகளை உற்பத்தி செய்ய விரும்பினால், இங்கே கூறியுள்ளபடி நாற்றங்கால் கலவையைத் தயாரிக்கலாம். மேலும், விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் அதிகமாகவும் நன்றாகவும் காய்க்கும் மரத்துப் பழங்களின், குறிப்பாக 40-50 கிராம் எடையுள்ள பழங்களின் விதைகளையே விதைக்கலாம்.


முனைவர் பா.நயினார், முனைவர் இரா.முத்துலெட்சுமி, எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம், வன்னிக்கோனேந்தல், திருநெல்வேலி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks