செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர்.
அவுரி என்பது ஒரு மூலிகைப் பயிராகும். இதற்கு நீலி என்னும் பெயரும் உண்டு. இச்செடி, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறந்த பசுந்தாள் உரமாகவும், 18 வகை நஞ்சை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது. இதை வீடுகளில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம்.
வளர்ப்பு முறை
அனைத்துப் பருவநிலை மற்றும் மண் வகைகளுக்கு ஏற்றது. புதர்ச் செடியான இது, இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். சூழலைப் பொறுத்து, ஓராண்டுத் தாவரமாக, ஈராண்டுத் தாவரமாக இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரும். இதைப் பூச்சியோ நோயோ தாக்குவதில்லை. குறைந்தளவில் எருவை இட்டாலே நன்கு வளரும்.
அவுரியை வளர்த்துப் பசுந்தாள் உரமாகவும் நிலத்தில் இடலாம். பூக்கும் போது இதை மடக்கி உழுதால், நிலத்திலுள்ள நச்சுத் தன்மை நீங்கி மண்வளம் பெருகும். ஏக்கருக்கு 1.5 கிலோ விதை போதும்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளை நிலங்களில், அவுரியைப் பயிரிட்டு, சேற்றில் மடக்கி உழுது விடும் வழக்கம் இருந்தது. அது நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கி விடுவதால், அந்நிலத்தில் விளையும் உணவை உண்ணும் மக்களும் நலமாக இருந்தனர்.
இப்போது நெல்லை விட மதிப்புமிக்க தாவரமாகி விட்டது அவுரி. நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மூலிகை வகைகளில் அவுரிக்குப் பெரும் பங்கு இருக்கிறது. காய்ந்த ஒரு கிலோ அவுரி இலைகளின் விலை 30 முதல் 50 ரூபாய் வரை உள்ளது. பல்வேறு மருத்துவக் குணமுள்ள அவுரிக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
அவுரி இலைகளை நீரில் ஊற வைத்துப் புளிக்கச் செய்து சாயம் எடுக்கப்படுகிறது. பழங் காலத்திலேயே நமது முன்னோர், பருத்தி நூல்களுக்கும், பருத்தித் துணிகளுக்கும் அவுரியைப் பயன்படுத்திச் சாயம் தோய்த்து உள்ளனர். நமது நீலச்சாயத் துணி, உலகளவில் பேர் பெற்றது. நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர்கள் இங்கே வந்ததாகக் கூறுவார்கள்.
மருத்துவக் குணங்கள்
அவுரி இலைகளைக் காய வைத்துப் பொடியாக்கிச் சூரணம் செய்து, காலை, மாலையில், பாலில் கலந்து மூன்று நாட்கள் பருகி வந்தால், மஞ்சள் காமாலையை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். அவுரி வேரை அரைத்துப் பாலில் கலந்து பருகினால், பாம்புக்கடி, வண்டுக் கடியால் ஏற்பட்ட விஷத்தை முறிக்கலாம்.
அவுரி இலைகளைக் காய வைத்து அரைத்து, புண், படை சிரங்குள்ள இடங்களில் தடவி வந்தால் இவற்றில் இருந்து விடுபடலாம். அவுரி வேர்ப் பட்டையைக் கைப்பிடி எடுத்து, பத்து மிளகைச் சேர்த்து, நான்கு டம்ளர் நீரிலிட்டு, ஒரு டம்ளராக ஆகும் வரையில் காய்ச்சி, காலை மாலையில் என, தினமும் பருகி வந்தால் தோல் நோய்கள் தீரும்.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி, உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!