My page - topic 1, topic 2, topic 3

தீவனமாகப் பயன்படும் அசோலா!

அசோலா

சோலா என்பது, நீரில் மிதக்கும் பெரணி வகைத் தாவரம். இதில், ஏழு வகைகள் இருப்பினும், மைக்ரோ புளோரா என்னும் வகை தான் அதிகளவில் பயன்படுகிறது.

வேகமாக வளரும் இது, குறைந்த செலவில் புரதம் நிறைந்த கால்நடை மாற்றுத் தீவனமாக விளங்குகிறது. அசோலா சிறந்த இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. இதை மூக்குத்தி மற்றும் கம்மல் செடி எனவும் அழைப்பர்.

இதில், புரதச்சத்து 25-30 சதம், நார்ச்சத்து 14-15 சதம், கொழுப்புச்சத்து 45-50 சதம் உள்ளன. மேலும், உடல் நலனுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின்கள் மற்றும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தும் உள்ளன.

வளர்ப்பு முறை

நீர்த் தேங்கும் ஆழமற்ற குட்டைகள், நெல் வயல், நெல் நாற்றங்கால், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் சில்பாலின் தாள் விரிக்கப்பட்ட குழியில் அசோலாவை வளர்க்கலாம்.

தொட்டியில் வளர்த்தல்: 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி உயரமுள்ள சிமெண்ட் தொட்டியில் 25-30 கிலோ செம்மண்ணை நிரப்ப வேண்டும். மூன்று கிலோ பச்சைச் சாணத்தையும் சேர்த்து, 40 லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். தொட்டியில் நீரின் அளவு 10-15 செ.மீ. இருக்க வேண்டும்.

பிறகு, 0.5-1 கிலோ அசோலாவை இட வேண்டும். 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை, மூன்று பங்காகப் பிரித்து, நான்கு நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்தால், 10-15 நாட்களில் தொட்டி முழுதும் அசோலா வளர்ந்து விடும்.

இதிலிருந்து தினமும் 1-2 கிலோ அசோலாவை எடுக்கலாம். பத்து நாளுக்கு ஒருமுறை சாணக் கரைசலைத் தொட்டியில் ஊற்ற வேண்டும். 10-15 நாளுக்கு ஒருமுறை தொட்டியிலுள்ள நீரில் பாதியை வெளியேற்றி விட்டுப் புது நீரை ஊற்ற வேண்டும்.

இவ்வகையில், ஆறு மாதங்களுக்கு இதிலிருந்து தினமும் அசோலாவை எடுக்கலாம். அசோலா வேகமாக வளர்வதால், தினமும் அறுவடை செய்து, புதிதாக வளர்வதற்கு இடவசதியைத் தர வேண்டும். எப்போதும் தொட்டியில் நீர் இருக்க வேண்டும். தொட்டி காய்ந்து விடக் கூடாது.

25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் அசோலா நன்கு வளரும். அசோலா வளர்ப்பிடம், கடும் வெய்யில் நேரடியாகப் படும் இடமாக இல்லாமல், நிழலுள்ள இடமாக இருக்க வேண்டும். வெய்யிலைத் தவிர்க்க, பச்சை நிழல் வலையை அமைக்கலாம். காலை, மாலை இளம் வெய்யில் அசோலாவுக்கு மிகவும் நல்லது.

பயன்கள்

தீவனக் குறையைத் தீர்க்கும் வகையில், மாற்றுத் தீவனமாக விளங்குகிறது. இதை, 4-5 முறை நீரில் அலசிய பின், அடர் தீவனம் மற்றும் பச்சைத் தீவனத்தில் கலந்து அல்லது தனியாகத் தரலாம். ஒரு கிலோ அசோலா உற்பத்திக்கு 75 பைசா மட்டுமே செலவாகும்.

கறவை மாடுகளில் 15-20 சதம் பாலுற்பத்தி அதிகரிக்கும். முயல், பன்றி, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி மற்றும் மீனுக்கும் உணவாக இடலாம். கோழிகளின் எடையும், முட்டை உற்பத்தியும் கூடும்.

செயல் விளக்கம்

தமிழகத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலைமைக் கால்நடை மருந்தகங்களில், அசோலா வளர்ப்புக் குறித்த செயல் விளக்கமும், அசோலா விதையும் கிடைக்கும். இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


மரு.கு.மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர், பெரணமல்லூர், திருவண்ணாமலை, மரு.ப.அருள் சுரேஷ், கால்நடை உதவி மருத்துவர், இராதாபுரம், திருநெல்வேலி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks