பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சின்னச் சின்னச் சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக் கொண்டே இருக்கிறோம். மலைகள் முழுவதையும் பிளாஸ்டிக் மேடுகளாக ஆக்கியிருக்கிறோம், நிலங்களை நஞ்சாக ஆக்கியிருக்கிறோம், நீரை மாசுபடுத்திக் கொண்டே இருக்கிறோம். சதுப்புநிலக் காடுகளைச் சாகடித்து வருகிறோம்.
எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள் தானே இந்தச் சதுப்பு நிலங்கள் என்னும் நமது அலட்சியத்தின் விளைவால், சூழல் சூனியமாகிக் கிடக்கிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. வெள்ளச்சேதம் ஏற்படுகிறது. கடல் சீறுகிறது. மனித குலம் எதிர்கொள்ளும் இவற்றைப் போன்ற பல்வேறு சிக்கல்களுக்குப் பின்னணியில், ஈர நிலங்களின் அழிவும் முக்கியக் காரணியாக இருக்கிறது.
அதென்ன ஈர நிலங்கள் என்னும் கேள்வி உங்களுக்கு எழலாம். உலகெங்கிலும் உள்ள ஈரமான புல் வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோரக் குடியிருப்புப் பகுதிகள், பவளத் திட்டுகள், தாழ்வான நிலங்கள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், மீன் குளங்கள், நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள், சதுப்புநிலக் காடுகள் உள்ளிட்டவை ஈர நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
கடலுக்கும், நிலப்பகுதிக்கும் இடையே, ஆழம் குறைந்த, ஆண்டு முழுவதும் நீர்த் தேங்கியிருக்கும் நிலப்பரப்புகளைச் சதுப்பு நிலங்கள் என்கிறோம். இந்த நிலங்களின் அழிவைத் தடுக்கவும், இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் என, ராம்சர் (Ramsar) என்னும் சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.
உலகளவில் உள்ள ஈர நிலங்களின் அழிவைத் தடுத்தல் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டம், ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் நகரில் நடைபெற்றது. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஈர நிலங்கள் பாதுகாப்புத் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன. அந்த நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி, உலக ஈரநில நாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளவில் இந்த ராம்சர் அமைப்பில் 161 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றில் இந்தியாவும் அடங்கும். முதன் முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்திய அளவில் இந்தப் பட்டியலில் 25 சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரையும் பழவேற்காடும் இடம் பிடித்துள்ளன.
ஆண்டுதோறும் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடும் உலக ஈரதின நாளில் விழிப்புணர்வு வாசகம் ஒன்றை இந்த அமைப்பினர் அறிமுகம் செய்வார்கள். ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் தேவையை உணர்த்தும் வகையில் அந்த வாக்கியம் இருக்கும். இவ்வகையில், 2017 ஆம் ஆண்டு, ஈர நிலங்கள் தான் பேரழிவினால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பவை (Wetlands for Disaster Risk Reduction) என்னும் வாசகத்தை வெளியிட்டார்கள். 2018 ஆம் ஆண்டு, ஈர நிலங்கள் தான் நகர்ப் பகுதிகளுக்கான நிலைத்த நீடித்த எதிர்காலம் (Wetlands for a Sustainable urban Future) என்னும் வாசகம் வெளியிடப்பட்டது.
உண்மையில், ஈர நிலங்கள் ஆபத்தில் உள்ளனவா என்றால், ஆம், பெரும் ஆபத்தில் இருக்கின்றன என்பது தான் பதில். பெருகி வரும் நகரமயமாக்கல், தொழிற்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத் தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவற்றால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன.
அதெல்லாம் சரி, இவை அழிவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும், நிலத்தடி நீர்வளம் நீர்த்துப் போகும். முக்கியமாக, நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்று போகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈர நிலங்களின் அழிவு, பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆழிப்பேரலை சுனாமியின் சீற்றத்தைத் தடுத்ததில் அலையாத்திக் காடுகள் ஆற்றிய மகத்தான பணியை மறந்து விடக் கூடாது.
கடற்கரையோரங்களில் கோடிகளைச் செலவிட்டுக் கொட்டப்படும் காங்கிரீட் கற்களைவிட, ஆயிரம் மடங்கு மேலானவை அலையாத்திக் காடுகள். நத்தை, சேற்று நண்டு, சிங்கி இறால், பால் இறால், நீர்ப்பல்லி, கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, ஊரி, நாரை, கண்டற்சிப்பி, மீனினங்கள் என, ஆயிரக்கணக்கான உயிர்களின் உறைவிடமாக இருப்பவை ஈர நிலங்கள்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பனைச் சேமித்துப் பகிர்ந்தளிப்பதில் சிறப்பாகப் பணியாற்றுபவை ஈர நிலங்கள். இவற்றை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்காலப் பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன் வைக்கும் வேண்டுகோள். நிச்சயம் செய்வீர்கள். ஏனென்றால், உங்கள் மனதும் ஓர் ஈரநிலம் தான்.
எம்.ஆர்.கமல்பாபு,
செயலாளர், மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.