கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
காலநிலை மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் உள்ளது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் மிகுந்து வருகிறது. இந்தச் சூழல் பாதிப்பால், தொழில்துறை, விவசாயம் மற்றும் மீன்வளம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
வெப்பமயமத்தின் விளைவுகள்
ஓசோன் படுக்கையில் ஓட்டை விழுதல், கடல்நீர் வெப்பமாதல், பசுமையில்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் மிகுதல், இயற்கை வாழ்விடங்களில் மாற்றம் ஏற்படுதல், உணவுச் சங்கிலியில் பாதிப்பு நிகழ்தல், கடல் வேதியியலில் மாற்றம், கடல்நீர் அமிலமாதல், ஒளிச்சேர்க்கையில் குறைபாடு, பனிப்பாறை உருகுதல், கடற்பாசிகளில் சத்துகள் குறைதல், உயிரினங்கள் இடம் பெயர்தல், பவளப் பாறைகள் சேதமாதல், கடல்நீர் உயர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் கடல் மீன்கள், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும்.
மீன் உற்பத்தியில் பாதிப்பு
கடலில் வாழும் இறால்கள், சிப்பிகள், பவளப் பாறைகள், மிதவை உயிரிகள் மற்றும் பலவகையான நுண்ணுயிரிகளுக்கு, கால்சியம், நைட்ரஜன், மெக்னீசியம் போன்ற முக்கியத் தாதுப் பொருள்கள் தேவை. மிதவை உயிரிகள் கடலிலுள்ள உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கக் கால்சியம் தேவை.
ஆனால், வெப்பமயத்தால் இந்தத் தாதுப் பொருள்கள் கடலில் குறைந்து வருவதால், உணவுச் சங்கிலியில் பிளவு ஏற்பட்டு மீனுற்பத்திப் பாதிக்கிறது.
மீனவர்கள் பாதித்தல்
வளரும் நாடுகளில் வாழும் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழிலைச் சார்ந்தே உள்ளது. மீன்பிடிப்பும் மீன் வளர்ப்பும் ஆண்டுக்கு 7-10% வளர்ந்து வருகிறது. மீன்கள் மற்றும் மீன்பொருள்களை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் உணவு உற்பத்தியை விட, மீன்பிடிப்பும் மீன் வளர்ப்பும் 37 மடங்கு உயர்ந்துள்ளது. உலக வெப்பமயத்தால் இவை கெட்டு விடும்.
மீன்களும் பவளப்பாறைகளும்
பரவலாகக் கிடைக்கும் சாளை, நெத்திலி, ஊளி, வாவல், வெளவால், வெளமீன், வாளை, வஞ்சிரம், சூரை, நீர்ப்பன்னா, கோரை போன்ற மீன்கள் இப்பொழுது இடம் பெயர்ந்து விட்டதால், இவற்றின் வரத்துக் குறைந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அதிகமாக இருக்கும் கடல் வெள்ளரி, கடல் முள்ளெலி, இறால், நண்டுகள், சிங்கிறால்களின் வரத்தும் குறைந்து விட்டது.
பவளப் பாறைகளில் உள்ள உயிரிகள், கடல் நீரிலுள்ள கால்சியம், கார்பனேட் போன்ற தாதுக்களைச் சுவாசிப்பதன் மூலம் பவளப்பாறைகள் உருவாகும். ஆனால், வெப்பமயத்தால் அந்த நுண்ணுயிரிகள் அதிகளவில் அழிவதால், பவளப்பாறை உருவாகாமல், இயற்கைக்கு மாறான மாற்றங்கள் கடலில் ஏற்படுகின்றன.
தேவையான நடவடிக்கை
ஏற்கெனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்ற ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் முடிவுப்படி, பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆயினும் இதில் மற்ற கூட்டமைப்புகளும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
காலநிலை ஆய்வு, மீன்பிடி சூழலியல் மற்றும் வளங்களைச் சுரண்டும் மாற்றங்கள், மீன்பிடி ஆய்வில் எல்நினோ, லாநினோ பற்றிய செய்திகள், கவனிப்புத் திட்டங்கள், அறிவியல் ஆய்வுகள், கணினி மாதிரி முடிவுகள், காலநிலை மாற்றத்தைக் கையாளத் தேவையான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அமைத்து, இயற்கைக் கொள்கையை மக்களிடம் பரப்ப வேண்டும்.
சா.ஆனந்த்,
செ.கார்த்திக், பொ.கார்த்திக் ராஜா,
பவானிசாகர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு-638451.
சு.பாரதி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, பொன்னேரி.