கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021
தமிழகத்தில் 22,433 எக்டரில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்குச் சுமார் 2,82,912 டன் அளவிலும், எக்டருக்குச் சராசரியாக 12,611 கிலோ அளவிலும் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு பூச்சிகள், பூசணங்கள், நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் தக்காளிச் செடிகளைத் தாக்குவதால், பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்த மகசூல் இழப்புக் காரணிகளைக் கட்டுப்படுத்துவதைப் பற்றிப் பார்க்கலாம்.
இலைப்பேன்
இலைப்பேன் தளிர் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மேல்நோக்கிச் சுருண்டு வாடியிருக்கும். தீவிரத் தாக்குதலின் போது இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, 80 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 80 கிராம் தையோமித்தாக்சாம் அல்லது 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
அசுவினி
இலையின் அடிப்பகுதி மற்றும் தளிர் இலைகளில் கூட்டம் கூட்டமாக மஞ்சள் அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் கீழ்நோக்கிச் சுருண்டு காணப்படும். மேலும், தேனைப் போன்ற திரவத்தை வெளியிடுவதால் இலை மற்றும் தண்டுப் பகுதியில் பூசணம் கரும்படலத்துடன் இருக்கும். இதனால் எறும்புகள் அப்பகுதியில் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு, வேப்ப எண்ணெய் 3% கரைசல் அல்லது இமிடாகுளோபிரிட் 80 மில்லி அளவில் தெளிக்க வேண்டும்.
காய்ப்புழு, புரொட்டீனியா புழு
இளம் காய்ப்புழுக்கள், வளர்ந்த பச்சைநிறப் புழுக்கள் ஆகியன, இலைகள் மற்றும் காய்களை உண்டு சேதத்தை விளைவிக்கும். இலைகளின் நரம்புப் பகுதியைத் தவிர்த்து அனைத்தையும் உண்பதால், வெறும் கிளைகள் மட்டுமே காணப்படும். காய்களைத் துளைத்து, திசுக்களை முழுமையாக உண்டு விடுவதால் பெரும் சேதம் ஏற்படுகிறது.
கட்டுப்படுத்துதல்: தாக்கப்பட்ட பழம் மற்றும் பயிரின் பாகங்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும். வெங்காயம் அல்லது பூண்டை ஊடுபயிராகச் சாகுபடி செய்ய வேண்டும். துலுக்க சாமந்தி, செவ்வந்திச் செடிகளை 14 வரிசைக்கு 1 வரிசையென ஊடுபயிராகச் சாகுபடி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைக்க வேண்டும். டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40 ஆயிரம் வீதம், ஒரு வார இடைவெளியில் 5 அல்லது 6 முறை வெளியிட வேண்டும்.
ஏக்கருக்கு 250 மில்லி என்.பி.வி. வைரஸ் கலவையைத் தெளித்துக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். தாக்குதல் தீவிரமானால், ஏக்கருக்கு 100 கிராம் ப்ளுபென்டமைடைத் தெளிக்க வேண்டும்.
நாற்றழுகல் நோய்
இந்நோய் நாற்றங்காலில் இரு சமயங்களில் தோன்றிச் சேதத்தை உண்டாக்கும். முதலாவதாக, முளைக்கும் விதைகளைத் தாக்கி, செடி மண்ணுக்கு மேல் வருவதற்குள் அழுகச் செய்து சேதத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக, வளர்ந்த இளம் நாற்றுகளைத் தண்டுப் பாகத்தில் தாக்குவதால், நாற்றங்காலில் ஆங்காங்கே திட்டுதிட்டாக நாற்றுகள் அழுகி ஒடிந்து கிடக்கும்.
கட்டுப்படுத்துதல்: நல்ல வடிகால் வசதியுள்ள, நிழலில்லாத இடத்தில் மேட்டுப்பாத்தி நாற்றங்காலை அமைத்தல். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டசிம் பூசணக் கொல்லியைக் கலந்து விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைத்தல். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் எதிர் உயிர்ப் பூசணமான டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரன்சைக் கலந்து விதைநேர்த்தி செய்து விதைத்தல். நாற்றங்காலில் நோய் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் காப்பர் ஆக்ஸி குளோரைடைக் கலந்து, நாற்றின் வேர்கள் நன்கு நனையுமாறு ஊற்றுதல்.
இலைக்கருகல் நோய்
இலையில் வட்டமாகக் கரும்புழுப்புப் புள்ளிகள் தோன்றும். நோய் தீவிரமானால், புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று இணைய, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். நோயானது காய்களைத் தாக்கினால், முதிர்வதற்கு முன்பே காய்கள் அழுகி உதிர்ந்து விடும். தண்டுப் பாகத்தைத் தாக்கினால், செடி முழுமையாகக் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்தல். நோய் அறிகுறி தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேன்கோசெப் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது ஒரு மில்லி ஹெக்சகோனசோல் வீதம் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
பின்கருகல் நோய்
இந்நோயின் அறிகுறி முதலில் இலை மற்றும் தண்டுப்பகுதியில் காணப்படும். பிறகு காய்கள் மற்றும் பழங்களுக்குப் பரவிச் சேதத்தைத் தொடரும். இலை ஓரத்தில் சிறிய புள்ளிகள் தோன்றி ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய பழுப்புப் புள்ளிகளாக மாறி இலை முழுவதும் பரவ, இலைகள் காய்ந்து விடும். ஈரப்பதம் மிகுதியாக இருந்தால், வெண்ணிறப் பூசண வளர்ச்சி இலைகளின் அடியில் காணப்படும். நோயுற்ற தண்டுப்பகுதி முதலில் பழுப்பு அல்லது கருமையாக மாறும். பிறகு நோய் தீவிரமாகும் போது காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மெட்டலாக்ஸில் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டதும், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் ரிடோமில் அல்லது மெட்டலாக்ஸில் மருந்துடன் 2 கிராம் மேன்கோசிப் அல்லது 2 கிராம் சைமாக்சினில் பூசணக்கொல்லி மருந்தில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
நாற்றங்கால் முதல் அறுவடை வரையில் பயிரின் எந்தப் பருவத்திலும் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். நோய் அறிகுறியாக இலைகளில் சிறியளவில் சாம்பல் நிறத்தில், வட்டமான சிவப்பு அல்லது மஞ்சள் புள்ளிகள் ஓரத்தில் தோன்றும். நோய் தீவிரமானால், புள்ளிகள் இணைய, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்:ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்தல். நோய் அறிகுறி தென்பட்டதும், ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் அல்லது ஒரு மில்லி புரப்பிகோனசோல் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
வாடல் நோய்
தக்காளியைத் தாக்கும் மிக முக்கிய நோய்களில் வாடல் நோயும் ஒன்றாகும். நோயுற்ற செடிகள் வாடியிருக்கும். பின்பு அந்தச் செடிகள் முழுமையாகக் காய்ந்து இறந்து விடும். தண்டு மற்றும் வேர்ப்பகுதியை நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால் கரும்பழுப்பு மாற்றம் தெரியும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், இளஞ்சிவப்பான பூசணம் வேருக்கு மேலுள்ள மண்ணில் வளர்ந்திருக்கும்.
கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் வீதம் எடுத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். நோயுற்ற செடிகளை அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய இடமும், அதைச் சுற்றியிருக்கும் செடிகளின் வேர்ப்பகுதியும் நன்கு நனையுமாறு, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் கல்ந்த கலவையை ஊற்ற வேண்டும்.
0.2 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலைக் கொண்டு வேரை நனைக்க வேண்டும். மேலும், நடவு முடிந்த 35 நாட்கள் கழித்து, எக்டருக்கு, 2.5 கிலோ சூடோமோனாசை 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட்டால், இந்நோயைக் திறம்படக் கட்டுப்படுத்தலாம்.
ப.நாராயணன்,
தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
கீழ்நெல்லி, திருவண்ணாமலை மாவட்டம்.