உலகளவில் மீன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கே, மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்பு மிக முக்கிய வாழ்வாதாரம் சார்ந்த தொழிலாகவே பார்க்கப்படுகிறது. மீன் உற்பத்தியின் பெரும்பகுதி, இந்தியாவின் சிறு குறு மீனவ விவசாயிகள் மூலம் நன்னீரில் நடைபெறுகிறது. அதாவது, நம் நாட்டின் 66.81 சத மீன்கள் நன்னீர் வளர்ப்பு மூலம் கிடைக்கின்றன.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக, நன்னீர் மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. நம் நாட்டின் நன்னீர் மீன் வளர்ப்பில் நீர்த்தேக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 3.51 மில்லியன் எக்டர் பரப்பில் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரித்துப் பயன்படுத்தினால் இன்னும் மீன் உற்பத்தியைப் பெருக்க முடியும்.
கூண்டுகளில் மீன் வளர்ப்பு என்பது, நவீன மீன்வளர்ப்புத் தொழில் நுட்பமாகும். இந்த முறைப்படி திறந்தவெளி நீர் நிலைகள் அல்லது ஆழம் அதிகமான குளம் மற்றும் குட்டைகளில், வலைகள் மூலம் சதுர அல்லது வட்டமான அமைப்பை ஏற்படுத்தி, அதில் மீன்களை வளர்த்து எடுப்பதாகும். இப்படிச் செய்யும் போது நீர்த்தேக்கங்கள் மூலம் கிடைக்கும் உற்பத்தி மேலும் அதிகமாகும்.
எனினும், இவ்வகைக் கூண்டுகளில் குறைந்த காலத்தில் விற்பனை எடையை அடையும் மீன்களை வளர்ப்பதே அதிக இலாபத்தை ஈட்டித் தரும். இப்போது, கெண்டை மீன்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நன்னீர் மீனாக இருந்தாலும், அவற்றின் வளர்ப்புக்காலம் 8-12 மாதங்கள் என அதிகமாக இருப்பதால், அவற்றைக் கூண்டுகளில் வளர்ப்பதில்லை.
ஆனால், திலேப்பியா மீன்கள் இருப்படர்த்தியைப் பொறுத்து 3-6 மாதங்களில் 200-500 கிராம் என்னும் விற்பனை எடையை அடைந்து விடுகின்றன. இம்மீன்கள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இயற்கையாக வளருகின்றன. அவற்றின் அதிக வளர்ச்சித் திறனால் 1950களில் பல்வேறு நாடுகளில் நீர்நிலைகளில் விடப்பட்டன. 1924 இல் கென்யாவில் முதல் முறையாகத் திலேப்பியா மீன் வளர்ப்பானது அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது 85 நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
இம்மீனின் வளர்ச்சியைக் கண்ட பல்வேறு உலக மேம்பாட்டு நிறுவனங்கள், இதை நீர்வாழ் கோழி என்றும், 21 ஆம் நூற்றாண்டின் உணவு மீன் என்றும் போற்றியுள்ளனர். மேலும், எதிர்கால வளர்ப்பு மீனாகக் கருதப்படும் திலேப்பியா மீன்கள், 2025 இல் கெண்டை மீன்களின் உற்பத்தியை விஞ்சி விடும் அளவில் உள்ளது. 2020 இல் திலேப்பியா மீன் உற்பத்தி 6.8 மெட்ரிக் டன்னாகும். இம்மீனின் உற்பத்தி வளர்ச்சி 4 சதமாகும்.
கூண்டில் திலேப்பியா வளர்ப்பு: விரலளவு நீளமுள்ள திலேப்பியா மீன்களை, மிதக்கும் வலைக் கூண்டுகளில் வைத்து, விற்பனை எடையுள்ள மீனாக வளர்த்து எடுப்பதாகும். இதை, இந்தியாவில் ஏற்கெனவே திலேப்பியா இனம் பரவியுள்ள அனைத்து நீர்த் தேக்கங்களிலும் மேற்கொள்ளலாம்.
எனினும், மொத்தப் பரப்பில் ஒரு சதவீத இடத்தில் மட்டுமே கூண்டுகளை வைக்க வேண்டும். உயர் வகைத் திலேப்பியா மீன் குஞ்சுகளைத் தவிர, நீர்த் தேக்கங்களில் காணப்படும் நைல் மற்றும் பிற திலேப்பியா இரகங்களை அரசாங்க அனுமதியுடன் வளர்க்கலாம்.
கூண்டுத் தயாரிப்பும் அமைப்பும்
கூண்டானது, இடம், உற்பத்தி அளவு, பொருளாதார நிலை மற்றும் அதில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப முறைக்கு ஏற்ப உருவாக்கப்படும். பொதுவாக உயர் அடர்த்தி கொண்ட பாலித்தீன் (HDPE) அல்லது அங்கேயே கிடைக்கும் விலை மலிவான பொருள்களை வைத்துக் கூண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நீர்த்தேக்கங்களின் கரைகளில் தான் கூண்டுகள் செய்யப்படுகின்றன.
முதலில் கூண்டுகளின் சட்டங்களை வடிவமைத்து, அவை துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட்டை மேற்பூச்சாகப் பூசுவர். பிறகு, இவற்றுடன் சதுர வடிவக் குழாய் மூலம் வலையை இணைப்பர். இப்படித் தயாரிக்கப்படும் கூண்டை இறுதியாக, கம்பங்கள் மற்றும் கயிறுகள் மூலம் நீர்த் தேக்கத்தில் நிலை நிறுத்துவர்.
கூண்டின் அளவு
திலேப்பிய மீன் வளர்ப்புக்கு 5x5x5 மீட்டர் அளவில், 0.75-25 மி.மீ. கண்ணிகளைக் கொண்ட வலையைப் பயன்படுத்த வேண்டும்.
இருப்பு வைத்தல்
பொதுவாக, 50 கிராம் எடையுள்ள மீன்களை இருப்பு வைக்க வேண்டும். இருப்பு அடர்த்தி 10 கி.கி./3 மீ. அல்லது 40-60 மீன் குஞ்சுகள்/3 மீ.
தீவனம்
விலை மலிவான உணவு மூலக்கூறுகளான தவிடு, கடலைப் புண்ணாக்கு, உடைந்த அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தரப்படும் தீவனத்தில் 24-28 சதம் புரதம் இருக்க வேண்டும். தினமும் 2-3 முறை, அதன் உடல் எடையில் 3-5 சதம் வழங்க வேண்டும். சற்று விலை அதிகமான குருணைத் தீவனங்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. இவை மீன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், அற்றின் வளர்ப்புக் காலத்தையும் குறைக்கும்.
மாதிரி எடுத்தல்
மீன்களின் வளர்ச்சி மற்றும் உடல் நிலையை அவ்வப்போது கவனிக்க வேண்டும். இதற்காக மீன்களை 15-30 நாட்களுக்கு ஒருமுறை பிடித்து அவற்றின் வளர்ச்சியை அறிந்து வர வேண்டும். மேலும், அப்படிப் பிடிக்கும் போது, மீன்களில் நோய்க் கிருமிகளின் தாக்கம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
அறுவடை
பொதுவாக, வளர்ப்புக் காலமான 4-6 மாதங்களில் மீன்கள் 350-500 கி.கி. எடையை அடையும். கூண்டுகளின் உட்பரப்பு வலையை நீருக்கு மேல் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை உயர்த்துவதன் மூலம் மீன்களை எளிதாக அறுவடை செய்யலாம். அவற்றை உள்ளூரிலேயே கிலோ 110 ரூபாய் விலையில் விற்கலாம்.
சவால்கள்
போதியளவில் தரமான ஒருபால் மீன் குஞ்சுகள் கிடைப்பதில்லை. ஸ்ட்ரெப்டோ காக்கஸ் நோய்த்தொற்று மற்றும் ஒழுங்கற்ற மேலாண்மை முறைகள்.
ரா.சோமு சுந்தர்லிங்கம்,
ஜெ.ஸ்டீபன் சம்பத்குமார், சா.ஆனந்த், ப.வேல்முருகன், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம்.