நிலக்கடலை சாகுபடியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021

ண்ணெய் வித்துகள் மக்களின் அன்றாட உணவிலும், இதர பயன்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வகையில், நிலக்கடலை நமது நாட்டின் பணப் பயிராகவும், எண்ணெய் வித்துகளில் முதலிடத்திலும் உள்ளது.

எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் குறைந்து வரும் நிலையில், நிலக்கடலை உற்பத்தியைப் பெருக்குவதற்கான உத்திகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. முதலில் நிலத்தைச் சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். அடுத்து, 3-4 முறை இரும்புக் கலப்பை அல்லது மரக்கலப்பை மூலம், கட்டிகள் இல்லாமல் புழுதியாக உழ வேண்டும்.

கடின மண்ணடுக்கை உடைத்தல்

குறைந்த ஆழத்தில் கடின மண் அடுக்குள்ள நிலத்தை, உளிக்கலப்பை மூலம் 50 செ.மீ. இடைவெளியில் ஒரு திசையில் உழ வேண்டும். பிறகு, அதற்கு எதிர் திசையில் உழ வேண்டும். இப்படி, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய தென்னைநார்க் கழிவை இட வேண்டும்.

பாத்தி அமைத்தல்

நீரின் அளவு, நிலச்சரிவு மற்றும் மண்ணைப் பொறுத்து, 10 ச.மீ. முதல் 20 ச.மீ. வரை பாத்திகளை அமைக்கலாம். டிராக்டர் மூலமும் பாத்திகளை அமைக்கலாம். அல்லது 60 செ.மீ. இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்களை அமைத்து, அவற்றின் குறுக்கே வாய்க்கால்களை அமைக்கலாம். பார்களின் இரு பக்கமும் விதைக்கலாம்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் அல்லது மாங்கோசெப் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் எடுத்து, விதைகளை நன்கு கலக்க வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்துக் கலக்க வேண்டும். இதில் நேர்த்தி செய்த விதைகளில் பூசணக் கொல்லியைக் கலக்கக் கூடாது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தயாரிக்கும், த.வே.ப.க.14 ரைசோபியம் ஒரு பொட்டலம் மற்றும் ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து, இதில் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைநேர்த்தி செய்யாத நிலையில், ஏக்கருக்குத் தலா நான்கு பொட்டலம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவை, பத்து கிலோ தொழுவுரம், பத்து கிலோ மணலில் கலந்து, விதைகளை விதைப்பதற்கு முன் நிலத்தில் இட வேண்டும்.

விதைப்பு

கோவை விதைப்பான் அல்லது கொரு அல்லது விதை விதைக்கும் கருவி மூலம், விதைகளை வரிசையாக 4 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். விதைத்த விதைகளைக் காக்கை மற்றும் அணில்களிடம் இருந்து காக்க வேண்டும். விதைத்துப் பத்து நாட்களில் நல்ல ஈரப்பதத்தில் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

சத்துக் கலவைத் தெளிப்பு

பெரிய பருப்பு இரகங்களின் காய்களில் பருப்பு வளர்ச்சிக் குறைபாடு இருப்பது முக்கியச் சிக்கலாகும். இதைத் தவிர்த்துச் சிறப்பான பருப்புகளைப் பெறுவதற்கு, பலவிதச் சத்துகளைக் கலந்து தெளிக்க வேண்டும்.

அதாவது, ஏக்கருக்கு ஒரு கிலோ டிஏபி, 400 கிராம் அம்மோனியம் சல்பேட், போராக்ஸ் என்னும் வெண்காரம் 200 கிராம், பிளானோபிக்ஸ் மருந்து 140 மில்லி ஆகியவற்றை, 200 லிட்டர் நீரில் கலந்து 25, 35 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு 2 கிலோ நிலக்கடலை ரிச் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, 35, 45 ஆகிய நாட்களில் தெளிக்க வேண்டும்.

ஜிப்சம் இடுதல்

விதைத்து 40-45 நாட்களில் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் வீதம் எடுத்து, செடிகளில் ஓரத்தில் இட்டு மண்ணைக் கொத்தி அணைத்து விட வேண்டும். அப்போது நிலத்தில் ஈரம் இருக்க வேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறையுள்ள நிலங்களில் ஜிப்சத்தை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மொத்த ஜிப்சத்தில் பாதியை, இரசாயன உரங்களுடன் சேர்த்து அடியுரமாக இட்டால், நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலையில் தோன்றும் சொறி போன்ற பாதிப்பைக் குறைக்கலாம்.

களைக் கட்டுப்பாடு

ஏக்கருக்கு 1.30 லிட்டர் பென்டிமித்தலின் வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து, விதைத்த மூன்றாம் நாள் தெளிக்க வேண்டும். இதைத் தெளிக்கும் போது நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். அடுத்து, 20-25 நாட்களில், ஏக்கருக்கு 300 மி.லி. இமாசித்தோபைர் களைக்கொல்லி வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில் 20 மற்றும் 40 நாளில், கொத்து மூலம் களைகளை நீக்க வேண்டும்.

பாசனம்

நிலக்கடலைச் செடியின் வளர்ச்சியை ஐந்து பருவங்களாகப் பிரிக்கலாம். அதாவது, முதல் பத்து நாட்கள் முளைக்கும் பருவம், 11-25 நாட்கள் வளர்ச்சிப் பருவம், 25-45 நாட்கள் பூக்கும் பருவம், 46-80 நாட்கள் கம்பி இறங்குதல் மற்றும் காய்ப்பிடிப்புப் பருவம், 81-105 நாட்கள் முதிர்ச்சிப் பருவம் ஆகும். இந்தப் பருவங்களில் மண்ணின் ஈரத் தன்மைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும்.

பூக்கும் போதும், காய்கள் உருவாகும் போதும், 0.5% பொட்டாசியம் குளோரைடு கரைசலைத் தெளித்தால், நீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம். தெளிப்புப் பாசனம் மூலம் 30% வரை நீரை மிச்சப்படுத்தலாம். லேசான மண்ணுள்ள நிலங்களில், பாத்தியோரப் பாசனம் ஏற்றதாகும். முளைத்தல்,  பூத்தல், காய் உருவாதல் ஆகிய பருவங்களில் பாசனம் அவசியமாகும்.

அறுவடை

விளைச்சல் காலத்தைப் பொறுத்துச் செடிகளைக் கவனிக்க வேண்டும். செடிகளின் அடியிலைகள் காய்ந்து விடுவதும், மேல் இலைகள் மஞ்சளாக மாறுவதும் காய்கள் முதிர்ச்சி அடைந்து விட்டதைக் குறிக்கும்.

மேலும், ஆங்காங்கே ஒரு சில செடிகளைப் பிடுங்கிக் காய்களை உரித்துப் பார்க்க வேண்டும். அப்போது, ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல், கரும் பழுப்பு நிறத்தில் இருப்பது அறுவடைக்கான முதிர்ச்சி நிலையாகும்.

அறுவடைக்கு முன் நீரைப் பாய்ச்ச வேண்டும். மண்ணில் அறுவடைக்கு ஏற்ற ஈரம் இருந்தால் பாசனம் செய்யத் தேவையில்லை. காய்ந்த நிலத்தில் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். செடிகளைப் பிடுங்கிக் குவியலாக வைக்கக் கூடாது.

ஏனெனில், ஈரமாக உள்ள நிலையில், கொத்து இரகங்கள் முளைக்கத் தொடங்கி விடும். செடிகளில் இருந்து காய்களைப் பிரிக்க நிலக்கடலைப் பிரிப்பானைப் பயன்படுத்தலாம். காய்களை 4-5 நாட்கள் வெய்யிலில் நன்கு உலர்த்த வேண்டும். 


முனைவர் .பார்த்திபன்,

முனைவர் கா.சுப்பிரமணியன், மண்டல ஆராய்ச்சி நிலையம்,

விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks