கன்றுகளின் முழுமையான சத்துணவு சீம்பால்!

சீம்பால் Seembal

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018

ன்றைய கன்றுகளே நாளைய பசுக்கள் என்னும் கருத்தை மனதில் வைத்து, அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தால் எதிர்காலத்தில் சிறப்பான பசுக்களைப் பெற்றுப் பயனடைய முடியும். ஆனால், பெரும்பாலோர் கன்று வளர்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. இதனால், ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் கன்றுகள் பிறந்தாலும் இவையெல்லாமே கறவை மாடுகளாக ஆவதில்லை. பல கன்றுகள் சிறு வயதிலேயே இறந்து போகின்றன. ஆகவே, தேவையான கறவை மாடுகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இந்நிலையைப் போக்க, கன்று வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கன்று வளர்ப்புக்குச் செலவிடப்படும் தொகை, செம்மையான மூலதனம் என்பதை உணர வேண்டும். இத்தகைய கன்று வளர்ப்பில் முக்கிய இடம் பெறுவது சீம்பால் ஆகும்.

சீம்பால்

சீம்பால் என்பது, தாய்ப்பசு, ஈன்ற நாளிலிருந்து மூன்று நாட்களுக்குக் கொடுக்கும் இயற்கைச் சத்துணவாகும். இதன் சத்துகளை வேறு எந்த உணவாலும் சமன் செய்ய இயலாது. சீம்பாலானது இரத்தப் புரதத்திலிருந்து ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் போன்ற சுரப்பிகளின் தூண்டுதலால், கன்றை ஈனுவதற்குச் சில வாரங்கள் முன்னரே மடியில் சுரக்கிறது.

சீம்பாலின் சிறப்புகள்

சீம்பாலில் இம்முனோகிளோபுலின் ஜி.எம் மற்றும் ஏ எனப்படும் புரதங்கள் மிகுதியாக உள்ளன. இந்தப் புரதச் சத்துகள், கன்றுகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அளித்து, நோய்க் கிருமிகளின் தாக்குதலில் இருந்து காக்கின்றன. சினைப்பசுவின் கடைசி மூன்று வாரத்தில் இரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியானது மடியைச் சென்றடைந்து சீம்பாலுடன் சேர்ந்து கன்றைச் சென்றடைகிறது. நன்றாகத் தீவனம் அளித்து, முறையாகத் தடுப்பூசி போடப்பட்ட பசுக்களின் சீம்பாலானது, அதிகளவில் நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கும்.

பிறந்த இரண்டு மணி நேரத்தில் கன்றுக்குச் சீம்பாலை அளித்தால், இந்த இம்முனோகுளோபுலின் புரதப் பொருள்கள் குடலில் சேர்ந்து, வயிற்றுப்போக்கு, தொப்புள் கட்டி, மூட்டு வீக்கம் போன்ற நோய்களில் இருந்து கன்றைக் காக்கும். சீம்பாலானது நோயெதிர்ப்புப் புரதங்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. சாதாரணப் பாலுடன் சீம்பாலை ஒப்பிட்டால், இதில், புரதம், கொழுப்பு, கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள், வைட்டமின் ஏ, ஈ, சாம்பல் சத்து ஆகியன கூடுதலாக உள்ளன. எனவே, கன்று பிறந்ததும் சீம்பாலைக் கொடுக்க வேண்டும்.

கன்று பிறக்கும் போது அதனிடம் குறைந்து காணப்படும் உயிர்ச் சத்துகளான ஏ, டி, ஈ சீம்பாலில் மிகுதியாக உள்ளன. சீம்பால் மலமிளக்கியாகச் செயல்படுகிறது. சீம்பால் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கன்று பிறந்ததும் சீம்பாலில் மிகுதியாக இருக்கும் கொழுப்புச் சத்தானது, அடுத்த 5 நாட்களில் 4 சதவீதமாகக் குறைந்து விடுகிறது. பொதுவாகக் கறவைக் காலத்தில் முதல் இரண்டு மாதங்களில் குறைந்து காணப்படும் கொழுப்புச்சத்து, தொடரும் மாதங்களில் ஓரளவு கூடும்.

கன்று பிறந்த பிறகு மிகுந்திருக்கும் கொழுப்பற்ற திடப்பொருள்கள், பின்னர் குறையத் தொடங்கும். சினைப்பட்ட கறவை மாடுகளில் 2-3 மாதங்களுக்குப் பிறகு திடப்பொருள்கள் கூடத் தொடங்கி, 6 மாதங்களுக்குப் பிறகு இவற்றின் அளவு கூடும். சினையற்ற பசுக்களில், இத்தகைய நிலை காணப்படுவதில்லை.

சீம்பாலிலுள்ள சத்துப் பொருள்கள்

மொத்தத் திடப்பொருள்கள் 23.9%, கொழுப்பு 6.7%, புரதம் 14.0%, நோயெதிர்ப்புப் புரதம் 6.0%, சர்க்கரை என்னும் லாக்டோஸ் 2.7%, தாதுப் பொருள்கள் 1.11%, வைட்டமின் ஏ (மைக்ரோ கிராம்/டெசி லிட்டர்) 29.5.

கன்றுக்குக் கொடுக்க வேண்டிய சீம்பாலின் அளவு

பிறந்த கன்றுக்கு எவ்வளவு சீம்பால் கொடுப்பது என்பது மிகவும் அவசியமானது. பொதுவாகக் கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் என்னுமளவில் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். அதாவது, 20 கிலோ எடையுள்ள கன்றுக்கு நாளொன்றுக்கு 2 கிலோ சீம்பாலைக் கொடுக்கலாம்.

சீம்பாலைக் கொடுக்க வேண்டிய நேரம்

சீம்பாலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை உறிஞ்சும் திறன், சிறுகுடலில் கன்று பிறந்த சில மணி நேரங்களில் கூடுதலாகவும் அடுத்த சில மணி நேரங்களில் படிப்படியாகவும், 24 மணி நேரத்துக்குப் பிறகு முற்றிலுமாகக் குறைந்தும் விடுகிறது. எனவே, கன்று பிறந்த முதல் 12 மணி நேரத்துக்குள் போதுமான சீம்பாலைக் கொடுக்க வேண்டும். கன்று பிறந்ததும் 10 முதல் 15 நிமிடத்தில் முதற்கட்ட சீம்பாலும், 10 முதல் 12 மணி நேரம் கழித்து இரண்டாம் கட்ட சீம்பாலும் கொடுக்கப்பட வேண்டும்.

சீம்பால் பதிலி

அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகப் பரிந்துரைப்படி, கன்று ஒன்றுக்கு ஒரு நாளைக்குச் சுமார் இரண்டரை லிட்டர் சீம்பாலை அளிக்க வேண்டும். இதேயளவை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அளிக்கலாம். தாய்ப்பசு இறந்து விடும் நிலையில், கன்றுக்குச் சீம்பால் கிடைக்காது. இந்தச் சமயத்தில் மற்ற பசுக்களின் சீம்பாலை அளிக்கலாம். அப்படிக் கிடைக்காத நிலையில், 55-60 கிராம் எடையுள்ள ஒரு முட்டையை எடுத்து அதனுடன் 300 மில்லி நீர், 500 மில்லி பசும்பால், 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுக்கலாம்.

சீம்பாலின் தரம்

பால் வற்றும் காலமானது எட்டு வாரங்களுக்குக் குறைவாக இருந்தால், அந்தப் பசுக்களிடம் பெறப்படும் சீம்பாலில் குறைந்தளவே நோயெதிர்ப்புப் புரதங்கள் இருக்கும். பிரசவக் காலத்துக்கு முன்பாகப் பிரசவிக்கும் பசுவின் சீம்பாலிலும் குறைந்தளவே நோயெதிர்ப்புப் புரதங்கள் இருக்கும். பிரசவக் காலத்துக்கு முன்பாகவே சில பசுக்களின் காம்புகளில் இருந்து பால் கசிவு ஏற்படும். அத்தகைய பசுக்களின் சீம்பாலிலும் குறைந்தளவே நோயெதிர்ப்புப் புரதங்கள் இருக்கும். முதல் ஈற்றுப் பசுவின் சீம்பாலில், பலமுறை ஈன்ற பசுக்களின் சீம்பாலில் உள்ளதை விட, நோயெதிர்ப்புப் புரதங்கள் குறைவாகவே இருக்கும். பசுக்களின் இனங்களைப் பொறுத்தும் சீம்பாலின் தரமானது மாறுபடும்.

எனவே, கன்று பிறந்த 24 மணி நேரத்தில் நாம் அளிக்கும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் அமைகிறது. சீம்பாலைப் பற்றிய உண்மைகளை மனதில் கொண்டு, சரியான தருணத்தில், சரியான அளவில், தரமான சீம்பாலைக் கன்றுகளுக்குக் கொடுத்தால், அவை நலமாக வளர்ந்து நல்ல பசுக்களாகி நமக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.


சீம்பால் Prakash

சு.பிரகாஷ்,

ம.செல்வராஜு, கா.ரவிக்குமார், கி.செந்தில்குமார், ச.மனோகரன்,

கால்நடைப் பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி,

நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading