கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2015
இரத்தச் சுத்திக்குத் தேனிலூறிய ரோசாப்பூவிதழ்
பித்தமல வேக்காடு தீரவே ரோசாப்பூ குடிநீர்
பெருந்தாகம் வாய்ரணம் தீர ரோசாப்பூ குல்கந்து
பொருந்துமே பெரும்பாடு தீர ரோசா மணப்பாகு!
இயற்கை நமக்களித்த பல கொடைகளில் மலர்ச் செடியான ரோசாவும் ஒன்று. ரோசாப்பூவின் வசீகர வண்ணம், வனப்பு, சுகந்தரும் நறுமணம், மென்மை ஆகியவை இனம்புரியா மகிழ்ச்சியை நமக்குத் தருகிறது. குறிப்பாக, பெண்மணிகள் விரும்பி அணியும் மலர் ரோசா. இதை அணிவோர் முகமும் அகமும் பிரகாசிக்கும். சில தோசங்களும்கூட இதனால் அகலும். இம்மலர் உள்ள இடம் புனிதம் பெறும் பூசைச் சடங்குகளில் சிறப்பைப் பெறும். நாம் ரோசாவைப் பூக்களின் இராஜா என்கிறோம். ஆனால், மேற்திசையினர், மலர்களில் இராணி என்கின்றனர்.
வளரியல்பு
ரோசாச் செடி முட்கள் நிறைந்த ஒருவகைக் குத்துச்செடியாகும். இதன் தாவரப்பெயர் Rosa Gallica. குலாப்பூ, சிற்றாமரை, பன்னீர்ப்பூ என வேறு பெயர்களும் ரோசாவுக்கு உண்டு. பூக்களின் நிறவேற்றுமையில், நவீன வெள்ளை, நற்சிவப்பு, மஞ்சள், பச்சை, கலப்பு வண்ணம் எனப் பலவகை வண்ணங்களில் பூக்கும் செடிகள் உள்ளன. ஆனாலும், இங்கே நாம், இளஞ்சிவப்பு அல்லது ரோஸ் நிறமுள்ள பூக்களைப் பூக்கும் பழைமையான செடியையே குறிப்பிடுகிறோம்.
நம் நாட்டில் பஸ்ரா, எட்வர்டு என இரண்டு வகைச் செடிகள் பயிரிடப்படுகின்றன. இவற்றில், எட்வர்டு வகையே அதிகமாகச் சாகுபடியில் உள்ளது. அத்தரைத் தயாரிக்கப் பஸ்ரா மலர்களே சிறந்தவை.
ரோசா மொக்குகளையும் மலர்களையும் நாம் பயன்படுத்துகிறோம். இம்மலர், இனிப்பு, துவர்ப்புச் சுவையைக் கொண்டிருக்கும். சீரண நிலையிலும் இதன் சுவை இனிப்பேயாகும். குளிர்ச்சியைக் கொடுக்கும். இதிலுள்ள துவர்ப்புச் சுவையால், வயிற்றிலுள்ள வாயு வெளியேறும்.
மருத்துவப் பயன்கள்
ரோசா மொக்குகளை லேசாக வதக்கி அரைத்துத் துவையலாக்கி உண்டால், அசீரணம், வயிற்றுவலி, சீதக்கழிச்சல் ஆகியன குணமாகும். இது, கைகண்ட பழங்கால வைத்திய முறையாகும். ரோசா இதழ்களை நீரில் காய்ச்சிக் குடிநீராக்கிப் பாலுடன் சேர்த்து அருந்தினால், குடலில் தங்கியுள்ள பித்தநீர் மலத்துடன் வெளியேறி விடும். இதனால், உடல் கலகலப்பாகும்.
ரோசா இதழ்களை எந்த மாற்றமும் செய்யாமல் நேரடியாகவும் சாப்பிடலாம். இதனால், வயிறு சுத்தமாகும்; வாய்ப்புண் ஆறும்; சுரம் தணியும்; கருவுற்றிருக்கும் மாதரின் மசக்கை, வாந்தி, ஒக்காளம் ஆகிய உபாதைகள் அகலும். நாவறட்சி, தாகம் தணியும். சிறுநீர் தாராளமாகவும் சுலபமாகவும் வெளியேறும். ஆகவே இது, உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் இயற்கைக் கொடையாகும்.
ரோசாவிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருள்களான பன்னீர், அத்தர், குல்கந்து வாசனைத் தைலங்கள் நம் அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன. ரோசாப் பூக்களைக் கொண்டு வாசனைத் தைலங்களைத் தயாரிக்கும் முறை 1582-1612ஆம் ஆண்டுகளின் மத்தியில் தொடங்கியது. மொகலாய அரசர்கள் காலத்தில் இந்தத் தைலங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
குழந்தைகளைத் தாக்கும் வயிற்றுவலி, வாயு, குன்மம் ஆகிய பிணிகள், மூன்று தேக்கரண்டி சதக்குப்பை, மூன்று கரண்டி ரோசா மொக்குகளைச் சேர்த்து இடித்து இரண்டு டம்ளர் நீர் விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, சர்க்கரையைச் சேர்த்து அவ்வப்போது இரண்டு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் உடனே அகலும்.
இரத்தச்சோகையை நீக்கும் குல்கந்து
புத்தம் புதிய ரோசா இதழ்களையும் அதற்குத் தேவையான அளவில் சீனக்கற்கண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அகலமான பாத்திரத்திலிட்டு, தேனில் பிசைவதுடன் இக்கலவை மூழ்கும் அளவுக்குத் தேனையூற்ற வேண்டும். பின்பு, அப்பாத்திரத்தை வெள்ளைத்துணியால் மூடி வெய்யிலில் வைத்தால் அதிலுள்ள நீர் சுண்டி ஆவியாகி விடும். இந்நிலையில் கிடைக்கும் பொருள்தான் குல்கந்து. இதை உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
குழந்தைகளும் கூட விரும்பியுண்ணும் வகையிலிருக்கும் இந்தக் குல்கந்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; மலச்சிக்கலை நீக்கும். மேலும், இரத்தத்தை அதிகப்படுத்தி, இரத்தச்சோகையைப் போக்கும். வெள்ளை வெட்டையைப் போக்குவதற்கான சிகிச்சையைப் பெண்கள் எடுத்துக்கொள்ளும் காலத்தில், குல்கந்தையும் சாப்பிட்டு வந்தால் இந்நோய் விரைவில் குணமாகும். அவர்களின் உடல் வறட்சி நீங்கிச் சரும நிறம் இயல்பாகும். அழகும் பளபளப்பும் மிகும்.
குல்கந்து முறப்பா
இஞ்சியும் சர்க்கரையும் சேர்ந்த இஞ்சி முறப்பா ஒரு பங்கும், குல்கந்து இரண்டு பங்கும் எடுத்துக்கொண்டு நீரைச் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தால் கிடப்பதுதான் குல்கந்து முறப்பா. இது, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பியுண்ணும் அருமையான சிறு தீனியாகும். இதைத் தனியாகவும் உண்ணலாம். ரொட்டி, சப்பாத்தியைச் சாப்பிட உதவும் ஜாமாகவும் பயன்படுத்தலாம். இந்தக் குல்கந்து முறப்பா மலச்சிக்கலை நீக்கும்; பித்தத்தைத் தணிக்கும்; செரிமானச் சக்தியைத் தூண்டும்.
ரோசா மணப்பாகு
ரோசாப்பூக்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் இந்த ரோசா மணப்பாகைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். சேகரித்து வைத்துள்ள ரோசா இதழ்களுக்குத் தேவையான அளவில், சீனக்கற்கண்டு அல்லது சீனியைச் சேர்த்து, நிதானமாக நீரை ஊற்றிச் சுண்டக்காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதனுடன் மீண்டும் கற்கண்டு அல்லது சீனியைச் சேர்த்து அடுப்பிலிட்டுக் காய்ச்சினால், பாகு பதத்துக்கு வரும். இந்நிலையில், அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் சில துளிகள் பன்னீரைச் சேர்த்தால் கிடப்பது தான் ரோசா மணப்பாகு.
இதைப் பத்திராமாக வைத்துக்கொண்டு, கோடைக்காலத்தில் ஐஸ் கட்டியைச் சேர்த்துச் சுவை மிகுந்த குளிர்பானமாக அருந்தலாம். இதனால் உடல்சூடு, வியர்க்குரு, கண்ணெரிச்சல், நீர்க்கடுப்பு, மலச்சிக்கல், மூலக்கடுப்பு ஆகியன குணமாகும். நாள்பட்ட வெள்ளைப்படுதல், தீட்டுக்காலத்தில் வரும் வயிற்றுவலி என்னும் பெரும்பாடு குணமாகும்; உடல் வலுப்பெறும்.
ரோசாத் தைலம்
அகண்ட பாத்திரத்தில் ரோசா இதழ்களைப் பரப்பி, அதில் நல்லெண்ணெய்யை ஊற்றி ஊறவிட வேண்டும். பாத்திரத்தை மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி வைக்க வேண்டும். தினசரி இதனை வெய்யிலில் வைத்துவர, பூக்களிலுள்ள நீரானது சுண்டி ஆவியாகி விடும். இதுவே ரோசாத்தைலமாகும். இதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அன்றாடம் தலையில் தேய்க்கலாம். இதனால், முடியுதிர்தல் நீங்கும்; முடி செழிப்பாகவும் பளபளப்பாகவும் கருகருவென்றும் வளரும்; தலையிலிருந்து வாசம் வீசும்.
படிகப் பன்னீர்
ரோசாவிலிருந்து எடுக்கப்படும் பன்னீருடன் படிகாரத்தைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் அரிய சித்த மருந்துப் பொருளே படிகப்பன்னீராகும். இதனைக் கண் துளியாக அவ்வப்போது பயன்படுத்தினால், கண்ணெரிச்சல், கண் சிவப்பு, கண்வலி, கண்களில் பீளை சேர்தல், மெட்ராஸ் ஐ எனப்படும் சென்னைக் கண்வலி ஆகியன அகலும்.
மலக்குடார மெழுகு
பாதாம் பருப்பு, நிலாவாரை இலை, சோம்பு, குல்கந்து ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, நீரைச் சேர்க்காமல், கல்லுரலில் நன்கு அரைத்தால் கிடைப்பதுதான் மலக்குடார மெழுகு. இதனை அன்றாடம் இரவில் தூங்கப் போவதற்கு முன், ஒன்றல்லது இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீருடன் குடித்து வந்தால் அடுத்தநாள் காலையில் மலம் இளகி வெளியாகும். இதனால், குடல் சுத்தமாகும்; உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
நுகர்ந்தால் பேதியாகும் முறை
நேர்வாளக் கொட்டைகளை உடைத்து மேலோட்டையும் உள்ளேயிருக்கும் முளையையும் நீக்கி விட்டுப் பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எருமைப்பாலை விட்டு மைபோல அரைத்து எருமைப்பாலைக் காய்ச்சி அதில் பிறையூற்றித் தயிராக்க வேண்டும். இந்தத் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கினால் கிடைக்கும் நெய்யை ரோசாப்பூவில் லேசாகத் தடவி நுகர்ந்தால் பேதியுண்டாகும். இப்படி உண்டாகும் பேதி, மோர் சாதத்தைச் சாப்பிடுவதுடன் வயிற்றில் சந்தனத்தைப் பூசினால் நிற்கும். இது அபூர்வமான சித்தர் முறையாகும். சுகந்த பரிமளச் சாஸ்திர நூலில் வழங்கப்பட்டுள்ளது. தகவலுக்கும் ஆய்வுக்கும் உரியது.
உயிர்கட்கு ரோசாவைப் போல இனிமையான வாழ்க்கை ஈசனால் தரப்பட்டது. ஆகவே, ஈசனின் மென்மையழகு கொண்ட ரோசாவைப் போற்றுவோம்! வணங்குவோம்!
மரு.ப.குமாரசுவாமி,
அரசு சித்த மருத்துவர் (பணி நிறைவு) செங்கல்பட்டு.