கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018
ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதைத் தண்டு ஒட்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். சீன ரோஜா எனப்படும் செம்பருத்திப்பூ, மலேசியாவின் தேசிய மலராகும். ஆயுர்வேதத்தில் ஜபாபுஸ்ப, ருத்ரபுஷ்ப, ரக்தகார்பாச என்று அழைக்கப்படுகிறது.
செம்பருத்திப்பூவில் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. இதன் இலையும் வேரும் மருத்துவத் தன்மையுள்ளவை. தினமும் 5-10 பூக்களைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். கருப்பைப் பாதிப்பால் கருவுறாமல் இருப்பவர்களுக்கு, வயதாகியும் கருவுறாமல் இருப்பவர்களுக்குச் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், வெகு விரைவில் கருப்பை நோய்கள் குணமாகும்.
பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் தொல்லைகள் குறையும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கசாயமாகக் காய்ச்சிக் குடித்து வந்தால், மாதவிலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலி, தலைவலி, மயக்கம், வெள்ளைப்படுதல் போன்றவை குறையும். இந்தப்பூ தலைமுடி அழகுக்காகப் பல வழிகளில் பயன்படுகிறது.
பசிபிக் தீவுகளில் செம்பருத்தியை உணவுக்காக வளர்க்கின்றனர். சீன மருத்துவத்திலும் இந்தப்பூ பயன்படுகிறது. இது உடல் வெப்பத்தைப் போக்கிக் குளிர்ச்சியைத் தருகிறது. தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்தப்பூ பயன்படுகிறது. காலணிகளைப் பொலிவூட்டவும் இந்தப் பூவைப் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்யில் காய்ந்த மொட்டுகளைப் போட்டு ஊற வைத்து, தொடர்ந்து தடவி வந்தால், கூந்தலின் கருமை நிறம் காக்கப்படும். மேலும், முடி வளர்ச்சியும் அதிகமாகும். உணவில் செம்பருத்திப் பூவைச் சேர்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும். இதைத் தேனீராக அருந்தினால் இரத்தழுத்தம் சீராக இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதைப் பயன்படுத்தும் போது, இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். உடலில் கொழுப்பு கூடுதலாகச் சேர்வதைத் தடுக்கும். இதயச் சிக்கலை நீக்கும்.
இரண்டு மூன்று மலர்களை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குணமாகும். இப்பூவைக் காய வைத்துப் பொடியாக்கித் தேனீரைப் போல, காலை மாலையில் அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும்; உடல் பளபளப்பாகும். நீர்ச்சுருக்கைப் போக்கிச் சிறுநீரைப் பெருக்கி உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதற்குச் செம்பருத்திப்பூ கஷாயம் மருந்தாகிறது.
தங்கச்சத்து இப்பூவில் இருப்பதால் தாது விருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் பத்துப் பூக்களை மென்று தின்று பசும்பாலை அருந்தினால், நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். இந்தப் பூவில் இருக்கும் வைட்டமின்னும், கரோட்டீனும், பார்வைக் குறைகளைப் போக்கும். தற்போது, செம்பருத்திப் பூவின் நோயெதிர்ப்புச் சக்தி தொடர்பாகவும், நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைத்தொற்று எதிர்ப்புத்திறன் தொடர்பாகவும் உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
முனைவர் கோ.கலைச்செல்வி,
முனைவர் மணிமாறன், மத்திய ஆராய்ச்சி நிலையம்,
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-51.