மானாவாரி சாகுபடி உத்திகள்!

மானாவாரி சாகுபடி cotton farming

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது சிரமமாக உள்ள நிலையில், மானாவாரி சாகுபடியில் நாம் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு மற்றும் பெய்யும் நாட்களின் நிலையற்ற தன்மை, மாறுபடும் தட்பவெப்ப நிலை, வேறுபட்ட மண் வகைகள், கடலோர நிலங்கள் களர் மற்றும் உவரால் பாதிக்கப்படுதல், நிலையற்ற சாகுபடித் தன்மையால் மற்ற தொழில்களை நோக்கி வேளாண் தொழிலாளர்கள் இடம் பெயர்தல் போன்ற சிக்கல்களால் மானாவாரி உற்பத்திப் பாதிக்கப்படுகிறது. இச்சூழலில், ஆண்டுக்கு 700-800 மி.மீ. மழை மட்டுமே பெய்யும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மானாவாரி வேளாண்மையைச் சிறப்பாகச் செய்ய உதவும் உத்திகளைப் பற்றிப் பார்ப்போம்.

கோடை உழவு

ஒரு நிலத்தில் பெய்யும் மழைநீரை அங்கேயே ஈர்த்து வைக்க, கோடையுழவு அவசியம். மேலும், கோடையுழவால் களைகள், தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். சரிவுக்குக் குறுக்காக உழுது வைத்தால் மண்ணரிப்பைத் தடுக்கலாம்.

ஆழச்சால், அகலப்பாத்தி, பகுதிப்பாத்தி

பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே, பார் கலப்பையால் உழுது, பாத்திகளை அமைத்தால் நீர்ச் சேமிப்புத் திறனை அதிகரிக்கலாம். விதைப்பதற்கு முன் அல்லது விதைத்ததும், நிலத்தின் சரிவுக்குக் குறுக்கே, ஒரு சென்ட் அளவுள்ள பாத்திகளாகப் பிரித்தால், மழைநீர் முழுவதையும் அங்கேயே ஈர்த்து வைக்க முடியும். மேலும் வரப்புகளில் வேலிமசால், வெட்டி வேர் போன்றவற்றை 3-4 வரிசைகளாக வளர்த்தால் மண்ணரிப்பைத் தடுத்து, நீர்ச் சேமிப்புத் திறனை அதிகப்படுத்தலாம்.

வறட்சியைத் தாங்கும் பயிர்கள்

தென் மாவட்டங்களில் உள்ள மானாவாரி நிலங்கள், கரிசல், செம்மண் மற்றும் மணற்பாங்காக உள்ளன. மானாவாரிக் கரிசலில் பயிரிடப்படும் பயிர்களில் பருத்தி, சோளம், கம்பு, மக்காச்சோளம், எண்ணெய் வித்துப் பயிர்களான சூரியகாந்தி, எள், நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்கள் முக்கியமானவை.

நெல்

குறுகிய கால நெல் இரகங்களான பரமக்குடி 3, பரமக்குடி 4 (அண்ணா), மதுரை 5, ஆடுதுறை 36, டி.கே.எம். 9, டி.கே.எம். 12, இராம்நாடு 1 ஆகியவற்றை மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இவை அனைத்தும் 100-110 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 1,800 கிலோ மகசூல் கிடைக்கும்.

மக்காச்சோளம்

கோ.1, கோ.எச்.(எம்) 5, 6 ஆகிய ஒட்டு இரகங்களைப் பயிரிடலாம். கோ.1 இரகம் 105-110 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 1,300 கிலோ மகசூல் கிடைக்கும். கோ.எச். (எம்) 5 இரகம் 90-95 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 1,700 கிலோ மகசூலைக் கொடுக்கும். கோ.எச். (எம்) 6 இரகம் 100-105 நாட்களில் விளையும்.  ஏக்கருக்கு 1,800 மகசூலைத் தரும்.

துவரை

ஏ.பி.கே.1, வம்பன்-1 ஆகிய துவரை இரகங்களைப் பயிரிடலாம். இவை இரண்டும் 95-100 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 350-400 கிலோ மகசூல் கிடைக்கும்.

உளுந்து

வம்பன் 3, 4, ஏ.பி.கே. 1, ஆகிய உளுந்து இரகங்கள் மானாவாரிக்கு ஏற்றவை. வம்பன் 3 இரகம் 65-70 நாட்களில் விளையும். ஏ.பி.கே. 1, வம்பன் 4 ஆகியன 75-80 நாட்களில் விளையும். இவை மூன்றும் ஏக்கருக்குச் சராசரியாக 320 கிலோ மகசூலைத் தரும். இவற்றைத் தவிர, நெல் அறுவடைக்குப் பின் சாகுபடி செய்ய ஏ.டி.டி. 3 உளுந்து இரகம் மிகவும் ஏற்றது. இது 70-75 நாட்களில் ஏக்கருக்கு 300 கிலோ மகசூலைக் கொடுக்கும்.

பாசிப் பயறு

கோ.(ஜிஜி) 6, வம்பன் (ஜிஜி) 2, வி.ஆர்.எம். 1, கே.எம். 2 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். இவை அனைத்தும் 60-70 நாட்களில் விளையும். ஏக்கருக்குச் சராசரியாக 360 கிலோ மகசூல் கிடைக்கும்.

தட்டைப் பயறு

பூசா 152, கோ. (சி.பி) 6, கோ.(சி.பி) 7 ஆகியவற்றைப் பயிரிடலாம். பூசா 152 தேசியளவில் சிறந்த இரகமாகும். 70-75 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். கோ.(சி.பி) 6, கோ.(சி.பி) 7 ஆகியன 65-70 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 300-320 கிலோ மகசூல் கிடைக்கும்.

நிலக்கடலை

கோ.(ஜி.என்) 4, கோ.(ஜி.என்)5,  டி.எம்.வி.10, வி.ஆர்.ஐ.(ஜி.என்) 5, ஏ.எல்.ஆர் 3 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். இவற்றில் கோ.(ஜி.என்) 4, கோ.(ஜி.என்) 5, டி.எம்.வி.10 ஆகியன 120-130 நாட்களில் விளையும். வி.ஆர்.ஐ.(ஜி.என்) 5, ஏ.எல்.ஆர். 3 ஆகியன 105-110 நாட்களில் விளையும். இவை ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூலைத் தரும்.

எள்

கோ. 1, எஸ்.வி.பிஆர். 1, டி.எம்.வி. (எஸ்.வி) 3 ஆகியன மானாவாரிக்கு ஏற்ற எள் இரகங்கள். இவை 80-90 நாட்களில் விளையும். ஏக்கருக்கு 200-250 கிலோ மகசூலைத் தரும்.

சூரிய காந்தி்

கோ.3, கோ.4, கோ.5 மற்றும் டி.சி.எஸ்.எச்.1 என்னும் ஒட்டு இரகத்தையும் பயிரிடலாம். இவை 85-90 நாட்களில் விளையும். சாதா இரகங்கள் மூலம் ஏக்கருக்கு 500-600 கிலோ, ஒட்டு இரகம் மூலம் 800 கிலோ மகசூல் கிடைக்கும்.

பருத்தி்

கே.சி.2, கே.சி.3, கே.11, எல்.ஆர்.ஏ.5166, எஸ்.வி.பி.ஆர்.2 ஆகியன மானாவாரிக்கு ஏற்ற பருத்தி இரகங்கள். இவை அனைத்தும் 130-140 நாட்கள் வரையில், ஏக்கருக்கு 500-600 கிலோ மகசூலைத் தரும். இவற்றைத் தவிர நெல் தரிசில் எம்.சி.யு.7 இரகத்தைப் பயிரிடலாம். 145 நாட்களில் ஏக்கருக்கு 500-550 கிலோ மகசூலைத் தரும்.

வறட்சிக்கேற்ற பழ மரங்கள்

கரிசல் மற்றும் செம்மண் நிலங்களில் மா, புளி, பலா, நாவல், பெருநெல்லி, மேற்கிந்தியச் செர்ரி மற்றும் கொய்யா மரங்களை வளர்க்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள பவானிசாகர்-1 என்னும் பெருநெல்லி ஒட்டுக் கன்றுகள் மூலம் நல்ல வருவாயைப் பெறலாம். பழமரங்கள் காய்ப்புக்கு வரும் வரையில், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு போன்றவற்றை ஊடுபயிராக வளர்த்து இலாபத்தைப் பெருக்கலாம்.

தீவன மரங்கள்

அகத்தி, சித்தகத்தி, சூபாபுல், வேலிமசால் போன்றவை வறட்சியைத் தாங்கி வளரும். புரதம் மிகுந்த இந்த மரங்கள், 2-4 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து, ஆடு, மாடுகளுக்கு நல்ல உணவாகப் பயன்படும்.

வேளாண் காடுகள்

மரம் வளர்த்தால் மழை பெறலாம் என்பது பழமொழி.  ஆகவே, மானாவாரி நிலங்களில் மரங்களை அவசியம் வளர்க்க வேண்டும். வேம்பு, மான்காது வேலமரம், கருவேல மரம், தைலமரம் போன்றவற்றை வளர்த்தால் நல்ல பயனை அடையலாம்.

மூலிகைப் பயிர்கள்

வறட்சியைத் தாங்கி வளரும் மருத்துவப் பயிர்களான அவுரி, நித்திய கல்யாணி, துளசி, சோற்றுக் கற்றாழை, நொச்சி போன்றவற்றை வளர்த்தால் ஏற்றுமதி வாய்ப்பையும் பெறலாம். மேலும், மானாவாரித் தொழில் நுட்பங்கள் குறித்து அறிய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்களை அணுகிப் பயனடையலாம்.


மானாவாரி சாகுபடி MUTHU RAMU e1629361657342

முனைவர் செ.முத்துராமு,

முனைவர் தி.இராகவன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,

பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading