சுற்றுப்புறச் சுகாதாரம் சீர்கெட்டால் நாய்களும் தான் சுற்றித் திரியும்
சுற்று முற்றும் மேய்ந்திடும் மாட்டையும் கடித்திடும்
கணப்பொழுது நேரத்திலே வழியில் காண்போரைக் கடித்திடும்
கடிபட்ட இடத்திலே ரேபீஸ் கிருமி கணக்கின்றி நுழைந்திடும்
கடித்த இடத்தில் அரித்திடும், கடுமையாகச் சொறிந்திடும்
காலமாதம் கடந்திடும், வெறி நோயெனத் தெரிந்திடும்
மய்ய நோக்குப் பரவலால் மூளை சென்று சேர்ந்திடும் – இக்கிருமி
மய்யம் கொண்ட மூளையில் தான் மட்டற்றுப் பெருகிடும்
மூளை அழற்சிக் கண்டிடும், பயந்து மூலை பதுங்கிடும்
ஆளைக் கண்டு பயந்திடும், அனைத்தையுமே கடித்திடும்
சினம் முற்றும் நாயும் தான் மேலும் சிலரைக் கடித்திடும்
குணம் முற்றும் மாறிடும், குரைப்பதையும் நிறுத்திடும்
வாயில் வழியும் உமிழ் நீரில் தான் கிருமியதும் பரவிடும்
நோயில் வாழும் நாயும் தான் நீரைக் கண்டால் விலகிடும்
மைய விலக்குப் பரவலால் நரம்பு மண்டலம் பரவிடும் – இக்கிருமி
நரம்பெல்லாம் பணிய வைத்து வாதம் கொண்டு சேர்த்திடும்
தாடை நாக்கு தொங்கிடும் பின், முன் காலிரண்டும் பின்னிடும்
சோடை போன நடையுடன் நாய் சோர்ந்து கீழ் விழுந்திடும்
வாதம் கண்ட தொண்டையால் குரைப்பதுமே குழைந்திடும்
பாதம் வரை வாதம் கண்டு கால்கள் நாலும் பின்னிடும்
இரு நாள்கள் கழிந்துவிட சுய நினைவு தவறிடும்
இருதயமும் சுவாசமும் இறுதியிலே நின்றிடும்
பன்னிரு வார வயதில் தடுப்பூசி ஒருமுறை அளித்திட – பின்
பன்னிரு மாதம் ஒருமுறை அளித்திட வெறிநோய் பயம் இல்லையே!
கடிபட்ட இடத்தைக் கால் நிமிடம் சோப்பு நீரில் கழுவணும்!
கவனத்துடன் முதல் நாளே தடுப்பூசி நாம் போட்டுக்கணும்!
முனைவர் சு.சரவணன், பேராசிரியர், கால்நடைப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், நாமக்கல் – 637 002.