கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020
ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட தாவரம் புதினா. உலகச் சந்தையில் புதினா எண்ணெய்க்கு வரவேற்பு இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். சமையலில் சுவையும் மணமும் தரும் புதினா மூலம் ஆண்டுக்கு இலட்சம் ரூபாய் வரை இலாபம் பார்க்கலாம். சைவ, அசைவ உணவுக்குச் சுவையூட்டும் புதினா, வயிற்றுவலி, செரிமானக் குறைவு, தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றைப் போக்கும் சிறந்த மருந்தாகும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்; உடல் புத்துணர்வைப் பெறும். உடல் நல மருந்துகள் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் புதினா எண்ணெய் பயன்படுகிறது. பட்டம் எதுவுமின்றி ஆண்டு முழுவதும் புதினா வளரும்.
நிலத் தயாரிப்பு
வளமான, ஈரப்பதமான மண்ணில் புதினா நன்கு வளரும். இவ்வகையில், களிமண், வண்டல் மண் மற்றும் ஆற்றுப்படுகை மண் மிகவும் ஏற்றது. மிதவெப்பப் பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி, மட்கிய தொழுவுரத்தைப் போட்டுப் பயிரிட்டால், புதினா நன்கு வளரும். தயார் செய்துள்ள பாத்திகளில் 40 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
உர நிர்வாகம்
ஏக்ருக்கு 12 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 4 கிலோ சாம்பல் சத்தைத் தரும் உரங்களை அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 60 மற்றும் 120 நாளில், 12 கிலோ தழைச்சத்தைத் தரும் உரத்தை இரண்டாகப் பிரித்து இட வேண்டும். அறுவடைக்குப் பிறகும் உரமிட வேண்டும்.
பாசனம்
புதினாவுக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், விளைச்சல் பாதிக்கும். எனவே, நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்வது நல்லது.
பூச்சித் தாக்குதல்
புதினாவை அதிகளவில் பூச்சிகள் தாக்குவதில்லை. சில இடங்களில் வெள்ளைப்பூச்சி அல்லது புரோட்டான் கறுப்புப்புழுத் தாக்குதல் இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, இஞ்சி பூண்டு கரைசலைத் தெளிக்கலாம்.
அறுவடை
இரண்டு மாதங்களில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். ஏக்கருக்கு 4,800 கிலோ புதினாத் தழை கிடைக்கும். திருமணம் மற்றும் நோன்புக் காலங்களில் ஒரு கிலோ புதினா 50-70 ரூபாய் வரை விற்கும். சராசரியாக, ஒரு கிலோ புதினா 30 ரூபாய்க்கு விற்றால் கூட, 1.44 இலட்சம் ரூபாய் கிடைக்கும். இதில், செலவு போக ஒரு இலட்சம் ரூபாய் வரையில் இலாபம் கிடைக்கும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என, நான்கு ஆண்டுகள் வரையில் அறுவடை செய்யலாம்.
ஊடுபயிர்
நிலம் குறைவாக வைத்துள்ள விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இடையில் இதை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
முனைவர் மு.உமா மகேஸ்வரி,
உதவி ஆசிரியர், முனைவர் மொ.பா.கவிதா, உதவிப் பேராசிரியர்,
தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.