கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020
பசுந்தீவனம் தேவைக்கு மேல் கிடைக்கும் போது, வீணாகாமல் சேமித்து வைத்து, கால்நடைகளுக்குப் பசுந்தீவனம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய உதவுவது, ஊறுகாய்ப்புல் தயாரிப்பு உத்தி. ஊறுகாய்ப்புல் என்பது, காற்றுப் புகாத இடத்தில் பசுந்தீவனத்தைச் சேமித்து வைத்து, பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பிறகு கிடைக்கும் தீவனமாகும்.
இதைத் தயாரிக்கத் துளையில்லாத் தண்டுள்ள தீவனப் பயிர்கள் மிகவும் ஏற்றவை. தீவனத்தில் ஈரம் அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கக் கூடாது. அதாவது, ஈரத்தன்மை 70-75% இருக்கும்போது அறுவடை செய்து, குவியல் முறையில் அல்லது குழி முறையில் ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம்.
ஏற்ற பசுந்தீவனங்கள்
சோளம், அல்ஃபல்ஃபா, கோதுமை, பயறுவகைத் தீவனங்களை ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம். நூறு கிலோ பசுந்தீவனம் உலர்ந்தால் 35-45 கிலோவாகக் குறைந்து விடுகிறது. இப்படி எடை குறைவதாலும், கரையும் சர்க்கரையில் 8-10% வீணாவதாலும், பசுந்தீவனத்தின் தரம் பாதிக்கப்படும். இதனால், பாதுகாப்பானாகச் செயல்படும், லாக்டிக் அமில, கரிம அமில உற்பத்தியும் பாதிக்கப்படும்.
எனவே, 50% பூக்கள் பூக்கும் பருவத்தில் இருந்து பால் அல்லது மாவு நிலையில், மக்காச்சோளம், சோளம், கம்பு போன்ற பயிர்களை அறுவடை செய்தால், தரமான ஊறுகாய்ப் புல்லாகத் தயாரிக்கலாம். கம்பு நேப்பியர் புல் வகைகளில், ஒரு அறுவடை முடிந்து 45-50 நாட்கள் வளர்ந்த புல்லைப் பயன்படுத்தலாம். இயற்கையாக வளரும் புற்கள் மற்றும் சென்ச்ராஸ் புல்லை, பூக்கும் போது அறுவடை செய்து ஊறுகாய்ப் புல்லாக மாற்றலாம்.
தயாரிப்பு முறைகள்
குழி முறை மற்றும் குவித்து வைத்தல் முறையில் ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்கலாம். தீவன இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து, அளவுகளை முடிவு செய்யலாம். பசுந்தீவனத்தை முழுதாக அல்லது சிறு துண்டுகளாக வெட்டிக் காற்றுப் புகாமல் நிரப்ப வேண்டும்.
கடைசியில், மேல் பகுதியை வைக்கோலாலும் அதற்கு மேல் நெகிழித்தாள் அல்லது அல்காதீன் தகடுகளாலும் மூட வேண்டும். 4-6 வாரங்களில் ஊறுகாய்ப்புல் தயாராகி விடும். 20 அடி நீள, அகல, ஆழமுள்ள குழியில், 50-55 டன் ஊறுகாய்ப் புல்லைத் தயாரிக்கலாம். ஒரு கன அடியில் சுமார் 15 கிலோ ஊறுகாய்ப்புல் இருக்கும்.
தர மேம்பாடு
ஊறுகாய்ப் புல்லின் தரத்தை மேம்படுத்த, புல் அல்லது தானியத் தீவனம் மற்றும் தட்டைப்பயற்றஞ் செடிகளை 4:1 விகிதத்தில் கலந்து வைக்கலாம். அல்லது ஒரு டன் தீவனத்தில் 20 கிலோ வெல்லப்பாகு மற்றும் 8 கிலோ உப்பைக் கலந்து வைக்கலாம். மேலும், 0.5-1.0% சுண்ணாம்பு, 1% சோடியம் மெட்டா பைசல்பைட் புரொப்பியோனிக் மற்றும் ஃபார்மிக் அமிலத்தைச் சேர்க்கலாம்.
சிறப்புகள்
தங்கப் பழுப்பு அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறம் மற்றும் இனிய பழவாசம் ஆகியன ஊறுகாய்ப் புல்லின் தரத்தை உறுதி செய்யும். பூஞ்சைக் காளான் வளர்ச்சி ஏற்றது. இனிய பழவாசம் ஏற்கத்தக்கது. ஏனெனில், லேசான அமிலச்சுவை மற்றும் இனிய மணம் விலங்குகளுக்குப் பிடிக்கும்.
சுவை 3-4% கூடுகிறது. சத்து மதிப்புக் கூடுகிறது. கார அமிலத் தன்மை 4.0-4.5 இருக்கும். மற்ற அமிலங்களை விட, லாக்டிக் அமிலம் அதிகமாக இருக்கும். பியூதிரிக் அமிலம் 0.2-0.5% என மிகவும் குறைவாக இருக்கும்.
முனைவர் அ.முகமது அஸ்ரப்,
உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.
முனைவர் சி.நாசியாபேகம், முனைவர் பட்ட ஆய்வு மாணவி,
பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை-625104.