பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

உழவியல் cotton stainer 591328fb3df78c928326b3e3

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015

மிழகத்தில் காலங் காலமாகப் பயிரிடப்படுவது நெல். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக, அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய நெல்விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விளைய வைக்க இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதன் விளைவாக மண்வளம் கெட்டுப் போனது. சுற்றுச்சூழல் மாசடைந்தது.

உற்பத்திப் பொருள்களில் எஞ்சிய நஞ்சாக இரசாயன மருந்துகள் தங்கியதால், அந்தப் பொருள்கள் விஷத்தன்மையைக் கொண்டவையாக மாறின. இத்தன்மை, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் புதுப்புது நோய்கள் வரக் காரணமாக அமைந்தது. பயிர்களுக்கு நன்மைகளைச் செய்யும் பூச்சிகளுக்குப் பாதிப்பும், தீமைகளைச் செய்யும் பூச்சிகளுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் ஏற்பட்டன.

இப்படிப்பட்ட எதிர் விளைவுகள் தொடராமல் இருக்க வேண்டுமானால், உயிரினங்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத பயிர்ப் பாதுகாப்பு முறைகளை முழுமையாகச் செயல்படுத்தியே ஆக வேண்டும். இதற்கு விவசாயிகள், உழவியல் முறைகளைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். அவற்றை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

கோடையுழவு செய்தல்

ஏப்ரல், மே மாதங்களில் கோடையுழவு செய்வதால் கோடை மழையின் பயன் மண்ணுக்குக் கிடைப்பதுடன், களைகளும் பெருமளவில் கட்டுப்படும். மேலும், மண்ணுக்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்கள், நூற்புழுக்கள் ஆகியன வெளியே கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தால் பொசுக்கப்பட்டும் பறவைகளால் உண்ணப்பட்டும் அழிக்கப்படும். அறுவடைக்குப் பிறகு தூர்களை நன்கு மடித்து உழுதால், தண்டுத் துளைப்பான்கள், கூண்டுப் புழுக்கள், வெட்டுப் புழுக்கள், மாவுப்பூச்சிகள் போன்றவற்றை அழிக்கலாம். ஆழமாக உழுவதனால் படைப்புழுக்களின் தாக்குதலைக் குறைக்க முடியும்.

ஒருமித்த சாகுபடி

ஒரு பகுதியிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே இரகத்தைக் கொண்ட ஒத்த வயதுடைய நாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால், பூச்சிகளின் தாக்குதலுக்கு உகந்த பயிரின் வளர்ச்சிப் பருவம் ஒரே நேரத்தில் முடிவடைந்து விடுவதால், இந்தப் பூச்சிகள் பல்கிப் பெருக இயலாமல் அழிந்து விடும்.

நடவுமுறை

பருவத்துக்குச் சற்று முன்பே நெல் சாகுபடியைத் தொடங்கி விட்டால், ஆனைக் கொம்பன் ஈக்கள், இலைமடக்குப் புழுக்கள் ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்க முடியும். நெருக்கமாக நடப்பட்ட வயல்களில் புகையான், ஆனைக் கொம்பன் ஈக்கள், இலைமடக்குப் புழுக்கள், வெண்முதுகுத் தத்துப்பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் அதிகமாகக் காணப்படும். இரகத்துக்கு ஏற்பவும் பூச்சி மற்றும் நோய்கள் தாக்க வாய்ப்புள்ள பகுதிக்கு ஏற்பவும் பயிர் இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

குருத்துப் புழுக்களின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில், நாற்றின் நுனிகளைக் கிள்ளியும் அந்தப் புழுக்களின் முட்டைக் குவியலை அழித்து விட்டும் நட வேண்டும். இலைச்சுருட்டுப் புழுக்களின் தாக்கமுள்ள பகுதிகளில் ஜூன் மூன்றாவது வாரத்துக்குள் நடவை முடித்துவிட வேண்டும். இதனால் இப்பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனைக் கொம்பன் ஈக்களின் தாக்கமுள்ள பகுதிகளில் ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் நடவை மேற்கொள்ள வேண்டும்.

பட்டமும் பயிர் இடைவெளியும்

தரத்துடன் கூடிய அதிக விளைச்சலைப் பெறுவதற்குச் சற்று இடைவெளி விட்டு நட வேண்டும். இதனால், சூரிய ஒளி, காற்றோட்டம், நீர், சத்துப் பொருள்கள் ஆகியன பயிர்களுக்குத் தேவையான அளவு கிடைக்கும். பூச்சிகளின் தாக்கம் குறையும். எட்டடிக்கு ஓரடி இடைவெளி விட்டுப் பத்தி முறையில் நடும்போது, புகையான், எலி, இலையுறை அழுகல் நோய் போன்றவற்றின் தாக்குதல்களைக் குறைக்க முடியும். பத்தி நடவு கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். அப்போது தான் சூரிய ஒளி போதுமான அளவில் பயிர்களின் ஊடே ஊடுருவிச் சென்று பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

நீர் நிர்வாகம்

பயிர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ற வகையில் நீர் மேலாண்மை செய்வது மிகவும் முக்கியம். இதில் சிக்கல் ஏற்பட்டால், நுண்சத்தின் அளவிலும் தரத்திலும் மாற்றம் உண்டாகும். இதனால், பூச்சிகளின் எண்ணிக்கை கூடும் அல்லது குறையும். அதனால், வயலில் தேவையான அளவில் நீர் சீராக இருக்க வேண்டும். நடவின் போது சிலிப்புத் தண்ணீர் வைக்க வேண்டும். பிறகு, அந்த நீர் மறைந்ததும், அதாவது, ஏழு நாட்களுக்குப் பிறகு 2.5 செ.மீ அளவுக்கு நீர் கட்ட வேண்டும். அடுத்துக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்ட வேண்டும்.

வெள்ளநீரைப் பாய்ச்சினால், ஆனைக் கொம்பன் ஈக்கள், மாவுப்பூச்சிகள், படைப்புழுக்களின் தாக்குதல்கள் குறையும். நீரை 3-4 நாட்களுக்கு வடித்து விடுவதால், புகையான், குருத்து ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த இயலும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீரைக் கட்டுவதால் புகையான், வெண்முதுகுத் தத்துப் பூச்சிகளின் தாக்குதல்களைக் குறைக்க முடியும்.

களைக் கட்டுப்பாடு

பலவகையான பூச்சிகள் பல்வேறு பயிர்களைச் சார்ந்துள்ளன. குறிப்பாகச் சாகுபடி இல்லாத காலங்களில் களைகள், பூச்சிகளுக்கு மாற்றுப் பயிராக இருந்து, அவற்றின் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத்துக்கும் உதவுகின்றன. பயிரைச் சுற்றியிருக்கும் களைகள், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்திப் பயிர்களுக்கு அதிகமான அல்லது குறைவான சேதத்தை உண்டாக்குகின்றன.

கூண்டுப் புழுக்கள், பச்சைத் தத்துப் பூச்சிகள், கதிர்நாவாய்ப் பூச்சிகள், சிறுகொம்பு வெட்டுக் கிளிகள், ஆனைக் கொம்பன் ஈக்கள், மாவுப்பூச்சிகள் போன்ற தீமை செய்யும் பூச்சிகளுக்கும், குலைநோய், துங்ரோ நோய், மஞ்சள் குட்டை நோய் போன்ற நோய்களுக்கும் மாற்று உறைவிடமாய் இருந்து, அவற்றின் வளர்ச்சிக்கும் பெருக்கத்துக்கும் பெரிதும் உதவுகின்றன. எனவே, ஒருங்கிணைந்த முறையில், களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

உர நிர்வாகம்

தழைச்சத்து உரத்தை அதிகமாக இடுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகமாவதுடன் பூச்சிகளின் தாக்குதல்களும் அதிகமாகின்றன. மிதமான மற்றும் கூடுதலான சாம்பல் சத்து, பயிர்களைப் பூச்சிகள் தாக்கா வண்ணம் காக்கும். மட்கிய தொழுவுரம், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின்படி மட்டுமே இரசாயன உரங்களை இட வேண்டும். சாம்பல் சத்தை அதிகமாக இட்டு, இலைச் சுருட்டுப் புழுக்கள் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகளின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.

தழைச்சத்து நிர்வாகம்

தழைச்சத்தை அதிகமாக இட்டால், தண்டுத் துளைப்பான்கள், பச்சைத் தத்துப் பூச்சிகள், புகையான், இலைமடக்குப் புழுக்கள், இலைச்சுருட்டுப் புழுக்கள், ஆனைக் கொம்பன் ஈக்கள், குலைநோய் ஆகியவற்றின் தாக்குதல்கள் அதிகரிக்கும். அதனால், இவற்றைக் கட்டுப்படுத்த, தழைச்சத்தை 3-4 முறைகளாகப் பிரித்து இடவேண்டும்.

தழைச்சத்தை, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்னும் அளவில் கலந்து இடும் போது, தழைச்சத்தானது பயிர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கும். இதனால், பெரும்பாலான பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

மண்ணைச் சோதனை செய்யாத வயல்களில், இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தித் தழைச்சத்து உரத்தை இட வேண்டும். இதனால், பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்துவதுடன் தேவையில்லாத உரச்செலவையும் குறைக்கலாம்.

பயறு வகைகளை வளர்த்தல்

வயல் வரப்புகளில் உளுந்து, தட்டைப்பயறு போன்றவற்றை வளர்க்கும் போது அவற்றைத் தாக்கும் அசுவினிப் பூச்சிகள் நெற்பயிரைத் தாக்குவதில்லை. அதே நேரம், நெற்பயிரில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள், சிலந்திகள் போன்றவை அசுவினிகளை உண்டு பல்கிப் பெருகி, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும். இப்படி, வரப்புகளில் பயிரிடப்படும் பயிர்கள் விருந்துப் பயிர்கள் எனப்படும்.

பயிர்ச் சுழற்சி முறை

ஒரே பயிரையே ஆண்டு முழுவதும் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து, ஒரே குடும்பத்தைச் சாராத மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். இதனால்,  தீமை செய்யும் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான பயிர்கள் கிடைக்காமல் இப்பூச்சிகளின் பெருக்கம் தடைபடும். இந்நிலையில், அடுத்து நெற்பயிரைச் சாகுபடி செய்யும் போது இப்பூச்சிகளின் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கும்.

எனவே, நெல்லுக்குப் பின் உளுந்து, பச்சைப் பயறு, பருத்தி, எள், கடலை, காய்கறிப் பயிர்கள் போன்றவற்றைப் பயிரிடலாம். மேலும், பயிர்ச்சுழற்சி முறையைப் பின்பற்றுவதன் மூலம், மண் வளத்தையும் பெருக்கலாம்.


உழவியல் RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் ரெ.பாஸ்கரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading