பேஷன் பழ சாகுபடி!

பேஷன் பழ passion fruit 1

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

பேசன் பழத்தின் தாயகம் பிரேசிலாகும். பல்லாண்டுகள் பலன் தரக்கூடிய பேஷ்ஃபேளாரே குடும்பத்தைச் சார்ந்த கொடியினத்தில் இப்பழம் விளைகிறது. இப்பழம் வட்டமாக அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும். பழத்தோல் மெழுகுடன் கூடிய கரு ஊதா மஞ்சள் நிறத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும். விதை, கடினமாக, சிறியதாக, கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வெப்ப, மித வெப்பப் பகுதிகளில் பேஷன் பழம் விளைகிறது. இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தென்னிந்திய மலைப்பகுதிகளான நீலகிரி, கூர்க் மற்றும் மலபாரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் 9.11,000 எக்டரில் பேசன் பழ சாகுபடி நடக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 45.82,000 டன் பழங்கள் விளைகின்றன. கேரளத்தில் மூணாறு, வையநாடு பகுதியிலும், தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானலிலும், கர்நாடகத்தில் கொடகு மலையிலும், வடகிழக்கு மாநிலங்களான மிசோராம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரிலும் பேஷன் பழம் விளைகிறது.

நூறு கிராம் பழச்சதையில் வைட்டமின் ஏ, 1,300-2,500 ஐ.யு.வும், வைட்டமின் சி 30-50 மில்லி கிராமும் இருக்கும். தாதுப்புகளான சோடியம், மங்கனீசியம், கந்தகம், குளோரைடு ஆகியன உள்ளன. சிறுநீர்ப் பிரிப்பு, செரிமானத் தூண்டலுக்கு ஏற்றது. ஆஸ்துமா, இருமல், கக்குவான் இருமல், இரைப்பைப் புற்றுநோய் மற்றும் சிறுநீர்த் தொற்றுக்குச் சிறந்த நிவாரணி.

இரகங்கள்

பாசிபிளோரா குடும்பத்தைச் சார்ந்த பாசி்பிளோரா பேரினத்தில் 500 இனங்கள் உள்ளன. எனினும், பாசிபிளோரா எடுலிஸ் இனத்தைத் தான் பேஷன் பழம் என அழைப்பர். இவ்வினத்தில், மஞ்சள் பழங்களுள்ள செடிகள், ஊதாப் பழங்களுள்ள கொடிகள் என இரு பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டிலும் அமில அளவும், மாவுச்சத்து அளவும் வேறுபட்டிருக்கும். மஞ்சள் பழங்களில் அமிலத்தன்மை மிகுந்தும், மாச்சத்து குறைந்தும் இருக்கும். இரண்டு இரகங்களும் சந்தை வாய்ப்பு மிக்கவை.

ஊதாநிறப் பழங்கள்

இப்பழக் கொடிகள் சராசரி வீரியம் உள்ளவை. இப்பழம், மஞ்சள் பழத்தை விடச் சிறியதாக இருக்கும். பழத்தின் விட்டம் 4-5 செ.மீ. இருக்கும். பழத்தின் சராசரி எடை 37-50 கிராம் இருக்கும். இதில் சாறு 35-38% இருக்கும். இந்தச் சாறு, பதப்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சுவையும் மணமும் கொண்டதாக இருக்கும். விதைகள் கறுப்பாக இருக்கும். இந்தியாவில் தரமான இரகங்கள் இல்லை; ஊட்டி பர்புள், கூர்க் பர்புள், முடாபித்திரி பர்புள், திரிசூர் பர்புள், தாலிபரம்பா பர்புள், அம்பலவாயல் பர்புள், சீரபுஞ்சி பர்புள் ஆகிய உள்ளூர் வகைகளே உள்ளன.

மஞ்சள் பழங்கள்

மஞ்சள் பழக்கொடிகள் வீரியமிக்கவை. இப்பழம் ஊதாப் பழத்தை விடப் பெரிதாக, அதாவது, சராசரியாக 60 கிராம் எடையில் வட்டமாக இருக்கும். பழத்தோலில் புள்ளிகளும் இருக்கும். பழச்சாறு அமிலத் தன்மை மிக்கதாக இருக்கும். இந்தியாவில் தரமான மஞ்சள் பழ இரகங்கள் இல்லை; ஊட்டி மஞ்சள், கூர்க் மஞ்சள், மூணாறு மஞ்சள் ஆகிய உள்ளூர் இனங்களே உள்ளன.

மலர் உயிரியல் மற்றும் மகரந்தம்

அறுபது விழுக்காடு பழங்கள் முதிர்ச்சியடையும் நிலையில், மஞ்சள் பழக்கொடியில், முற்றிலும் வளைந்த பெண் மகரந்தக் குழாயுள்ள மலர்கள், ஓரளவு வளைந்த பெண் மகரந்தக் குழாயுள்ள மலர்கள், நிமிர்ந்த பெண் மகரந்தக் குழாயுள்ள மலர்கள் என, மூவகை மலர்கள், ஜூன்- அக்டோபரில் தோன்றும். இவை அதிகாலையில் பூக்கும். ஊதாப் பழக்கொடியில் இலையுதிர் காலத்தின் இறுதி அல்லது கோடையின் தொடக்கத்தில், அதாவது, ஜுலை-நவம்பரில் பூக்கள் தோன்றும்.

பூக்கள் சுய இணக்கத் தன்மை மிக்கவை. தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும். தேனீக்கள் இல்லையெனில், கையால் மகரந்தச் சேர்க்கையை உண்டாக்க வேண்டும். இப்படி, ஒரு மணி நேரத்தில் 600 மலர்களில் அயல் மகரந்தச் சேர்க்கையைச் செய்யலாம். இதனால் 70% காய்ப்புத்திறன் இருக்கும்.

இரகங்கள்

உலகளவில், ஆஸ்திரேலியா பர்புல், காமன் பர்புல், கபோஹோ செலக்சன், பிராட் ஹைபிரிட், செவ்சிக் செலக்சன், யுனிவர்சிட்டி ரவுண்ட் செலக்சன், யுனிவர்சிட்டி செலக்சன் எண் B 74, வைமனாலே செலக்சன், யீ செலக்சன் ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன.

இந்திய மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், செட்டாலியில் 1986 ஆம் ஆண்டு காவேரி ஹைபிரிட் என்னும் கலப்பினத்தை வெளியிட்டது. இது மஞ்சள் மற்றும் ஊதா இரகங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஓராண்டில் கொடிக்கு 40-60 பழங்கள் வீதம் கிடைக்கும். ஒரு எக்டரில் மூன்றாண்டு மகசூலாக 200 டன் பழங்கள் கிடைக்கும். பழங்கள் முட்டையாகவும் வட்டமாகவும் இருக்கும்.

பழத்தோல் ஊதாப் புள்ளிகளுடன் இருக்கும். பழங்களில் 20-30% பழச்சாறும் 11.5-12.0% சர்க்கரையும், 100 மி.கி. பழச்சாற்றில் 3.0-3.5 மி.கி. சிட்ரிக் அமிலமும் இருக்கும். வேர்ப்புழு, ஆல்டெர்னரியா, இலைப்புள்ளி மற்றும் பியுசோரிய அழுகல் நோயை ஓரளவு தாங்கி வளரும்.

மண் மற்றும் தட்பவெப்பம்

பேஷன் கொடி வெப்ப, மித வெப்பப் பகுதியில் நன்கு வளரும். ஆண்டு மழையளவு 100-125 செ.மீ. இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800-1500 மீட்டர் உயரத்தில் நன்கு வளரும். ஊதாப்பழக் கொடிகளுக்குக் குளிர்ச்சியான சூழல் நிலவ வேண்டும். ஏனெனில், இவற்றுள் பூக்கள் தோன்றவும், காய்கள் பிடிக்கவும் 18-23 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை.  இக்கொடிகள் மித வெப்ப மண்டலத்தில் அல்லது உயரமான பகுதியில் நன்கு வளரும்.

மஞ்சள் பழக் கொடிகள் வெப்ப மண்டலத்தின் தாழ்வான பகுதிகளில் நன்கு வளரும். பேஷன் பழக்கொடி பலவகை மண்ணில் வளரும் என்றாலும், நடுத்தர அமைப்புள்ள பொறை மண் சிறந்தது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். மண்ணில் அமிலத் தன்மை கூடியிருந்தால் சுண்ணாம்பைச் சேர்க்க வேண்டும்.

இனப்பெருக்கம்

பேஷன் பழக்கொடியை விதை, தண்டுக்குச்சி மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். குச்சிகளைவிட, விதை மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் கிடைக்கும் செடிகள் வீரியமாக இருக்கும். ஒட்டுக்கொடிகள் மற்றும் குச்சிக்கொடிகள் 6-7 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். விதைக்கொடிகள் 10-12 மாதங்களில் காய்க்கும். இந்த விதைக்கொடிகள் வணிக நோக்கிலான சாகுபடிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தண்டுக்குச்சி முறையில் இனப்பெருக்கம் செய்ய, நன்கு முற்றிய குச்சிகளில் இருந்து 30-35 செ.மீ. நீளத்தில் 3-4 கணுக்கள் உள்ள குச்சிகளாக நறுக்க வேண்டும். இவற்றைச் சரியான அளவில் மண், மணல், நன்கு மட்கிய தொழுவுரம் கலந்த கலவையில் ஊன்ற வேண்டும். 20 பிபிஎம் நாப்தலின் அசிடிக் அமிலக் கலவையில் 12 மணி நேரம் வரையில் இக்குச்சிகளை நனைப்பது வேர் வளர்ச்சியைத் தூண்ட ஏதுவாக இருக்கும். இக்குச்சிகளில் ஒரு மாதத்தில் வேர்கள் தோன்றி விடும்.

தற்போது பெங்களூரிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், செர்பன்டைன் பதியம் என்னும் நுட்பம் கண்டறியப் பட்டுள்ளது. இம்முறையில் முதன்மைக் கிளையிலிருந்து பிரியும் பக்கக் கிளைகளின் கணுவின் கீழ்ப்பகுதியைச் சாய்வாக வெட்ட வேண்டும். பின்பு, இத்தண்டுப் பகுதியை, மண், மணல், மட்குரம் 1:2:1 என்னுமளவில் கலந்த கலவையில் நட வேண்டும். இதை பிப்ரவரி மாதத்தில் செய்ய வேண்டும். 45 நாட்களில் வேர்கள் தோன்றி விடும்.

இப்படி வேர்கள் உருவாகிய பகுதியை ஏப்ரல், மே-யில் பிரித்தெடுக்க வேண்டும். இம்முறையில் 90-95% வெற்றி கிட்டும். முழுமையான கன்றுகளைப் பெற 75 நாட்களாகும். நிலத்தில் நடும்போது இந்தச் செடிகளின் உயிர்ப்புத்திறன் அதிகமாக உள்ளது.

நடவு மற்றும் இடைவெளி

நிலத்தை நன்கு உழுது உயிர் உரங்களை இட்டுப் பண்படுத்த வேண்டும். பழக்கொடிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை இடைவெளி தீர்மானிப்பதால், கொடிக்குக் கொடி இரண்டு மீட்டர் இடைவெளி மற்றும் வரிசைக்கு வரிசை மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். குழிகளை 45 செ.மீ. அழ, அகல, நீளத்தில் எடுத்து, அவற்றில், மூன்று பாகம் மேல் மண்ணையும் ஒரு பாகம் மட்குரத்தையும் கலந்து இட வேண்டும். ஜூன் ஜூலையில் மேக மூட்டமுள்ள நாட்களில் நடவு செய்ய வேண்டும். சரியான பருவத்தில் நட்டால் செடிகள் நன்கு இருப்புக் கொள்ளும்.

வடிவமைப்பு மற்றும் கவாத்து

பேஷன் கொடிகளை வடிவமைத்தல் மிக முக்கியமாகும். இது கொடி வகை என்பதால், இதன் வளர்ச்சிக்கும் காய்ப்புக்கும் ஆதரவாகத் தூண்கள் தேவை. கொடிகளை வடிவமைக்க குறுக்கு நெடுக்கமாக அடிக்கப்பட்ட தட்டிகளில் படர விட வேண்டும். நிலத்தில் 1.5-2 மீட்டர் இடைவெளியில் நடப்பட்ட கம்புகளில் கட்டப்பட்ட கம்பிகளின் சட்டகத்தில் கொடிகளைப் படர விட வேண்டும்.

வளரும் தளிர்களில் மட்டுமே காய்கள் தோன்றும். ஆகையால், கொடிகளை முறையாகக் கவாத்து செய்து புதிய தளிர்களை வளரச் செய்தால் கூடுதலான மகசூலைப் பெறலாம். மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் நவம்பரில் கவாத்து செய்ய வேண்டும். முந்தைய பருவத்தில் பக்கக் கிளையில் தோன்றிய பழ மொட்டுக்கு அடுத்த கீழ்மொட்டைக் கவாத்து செய்ய வேண்டும்.

முதிர்ந்த பக்கக் கிளைகளைக் கவாத்து செய்யும் போது, இளம் காய் மொட்டுகளுக்கு அருகில் செய்ய வேண்டும். ஏனெனில், கிளையின் கீழ்ப்பகுதியில் உள்ள மொட்டுகள் மலடாகி விடும். உறக்க நிலையிலுள்ள கொடிகளைக் கவாத்து செய்தால் வளர்ச்சி தடைபட்டு மகசூல் குறைந்து விடும். புதிய தளிர்களின் வளர் முனையில் உள்ள இலை விளிம்பில் பூக்கள் ஒற்றையாக மலரும்.

உர மேலாண்மை

ஒரு எக்டரில் 37 டன் பழங்களைத் தரும் வகையில் நடப்பட்டுள்ள 1,500 கொடிகளுக்குத் தேவைப்படும் சத்து விவரம்: தழைச்சத்து 202.5 கிலோ, மணிச்சத்து 174.0 கிலோ, சாம்பல் சத்து 184.2 கிலோ, சுண்ணாம்பு சத்து 25.0 கிலோ, இரும்புச்சத்து 770.4 கிராம், மாங்கனீசு 2810.2 கிராம், தாமிரம் 198.7 கிராம், துத்தநாகம் 316.9 கிராம், போரான் 295.8 கிராம். தென்னிந்தியாவில் நான்கு வயதுள்ள பேஷன் கொடிக்கு ஓராண்டில் தேவைப்படும் சத்துகள்: பழத்தோட்டத்தில் ஒரு கொடியின் வருடாந்திர தேவை தழைச்சத்து 110 கிராம், மணிச்சத்து 60 கிராம், சாம்பல் சத்து 110 கிராம்.

பாசன மேலாண்மை

ஜனவரி-மார்ச் காலத்தில் நீண்ட வறட்சி நிலவினால் பயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். இது, பக்கவாட்டில் தோன்றும் பூக்களின் வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கும். வறட்சிக் காலத்தில் மழை பெய்யாத நிலையில், பதினைந்து நாட்கள் இடைவெளியில் பாசனம் அவசியமாகும். கோடையில் தினமும் ஒவ்வொரு கொடிக்கும் 12-15 லிட்டர் வீதம் நீர் தேவைப்படும். குளிர் காலத்தில் 6-8 லிட்டர் நீர் தேவைப்படும். சொட்டுநீர்ப் பாசனம் மிகுந்த பயனுள்ளது. நீர்வழியே உரத்தை வழங்க மிகவும் ஏற்றது. சொட்டுநீர்ப் பாசனத்தின் வழியே சாம்பல் சத்தைக் கொடுத்தால் மகசூல் திறன் பன்மடங்கு கூடும்.

ஊடுபயிர்கள்

முதலாண்டில் பீன்ஸ், முட்டைக்கோசு, தக்காளியைப் பயிரிடலாம். வெள்ளரி, பூசணி, ஸ்குவாஷ் ஆகிய கொடி வகைகளைப் பயிரிடக் கூடாது. ஏனெனில், இவற்றால் வைரஸ் மற்றும் பழ ஈக்கள் வருவதற்கு வாய்ப்பாகும். ஊடுபயிர்களுக்குத் தனியாக உரமிட வேண்டும். இதனால், பேஷன் கொடிகள் மற்றும் ஊடுபயிர்களுக்கு இடையே சத்துப் பகிர்வுப் போட்டி நிகழாமல் இருக்கும்.

களை நிர்வாகம்

பேஷன் பழக்கொடிகளின் வேர்கள் 15 செ.மீ. ஆழத்தில் பரவியிருக்கும். எனவே, மண்ணை மேலோட்டமாகக் கொத்தி விட்டால் சல்லிடை வேர்களைப் பாதுகாக்கலாம். மண்ணை ஆழமாகக் கொத்தக் கூடாது. களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, மேல்மண்ணை லேசாகச் சுரண்டி விடலாம். கோடையில் மண்ணின் ஈரத்தைப் பாதுகாக்க, காய்ந்த இலைச்சருகுகள் அல்லது புற்களை நிலப்போர்வையாக இட வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

நல்ல சூழ்நிலையில் ஆண்டு முழுவதும் பழக்கொடிகள் பூக்கவும் காய்க்கவும் செய்யும். எனினும், காய்ப்புக்கு இரண்டு முக்கியப் பருவங்கள் உள்ளன. முதல் அறுவடை ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இருக்கும். இரண்டாம் அறுவடை மார்ச் முதல் மே வரை அமையும். முதல் காய்ப்பு, கொடிகளை நட்ட ஒன்பதாவது மாதத்தில் கிடைக்கும். முழுக் காய்ப்புத்திறன், நடவு செய்த 16-18 மாதங்களில் கிடைக்கும். காய்ப்பிடிப்பிலிருந்து 60-70 நாட்களில் அறுவடை செய்யலாம்.

காய்கள் பழமாகி விட்டால் கொடியிலிருந்து கீழே விழத் தொடங்கும். பழத்தோல் ஊதா நிறத்திலிருந்து லேசாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரு எக்டரிலிருந்து ஆண்டுக்கு 10-12 டன் பழங்கள் கிடைக்கும். நன்கு பராமரித்தால் 15-20 டன் மகசூலைப் பெறலாம்.

அறுவடைக்குப் பின்சார் நேர்த்தி

பழங்களின் எடை குறைவதைத் தவிர்க்க, அவற்றின் தோற்றம் சுருங்காமல் இருக்க, அறுவடை செய்ததும் சந்தைக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3-5 வாரங்களுக்குச் சேமிக்கலாம். 7-10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 90-95% ஈரப்பதத்தில் இரண்டு வாரங்களுக்குச் சேமிக்கலாம். ஊதா பேஷன் பழங்கள் 5-6 நாட்களுக்கும், மஞ்சள் நிறப் பழங்கள் 7-8 நாட்களுக்கும் கெடாமல் இருக்கும்.  

பேசன் பழத்திலிருந்து பழச்சாறு அல்லது அடர் பழச்சாறு எடுக்கலாம். இதில், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, சி, கரோட்டின் ஆகியன உள்ளன. அடர் பழச்சாற்றில் சர்க்கரை 50டி பிரிக்ஸ் இருக்க வேண்டும்; மொத்தச் சர்க்கரை 14-16டி பிரிக்ஸ் இருக்க வேண்டும். இதிலிருந்து பனிக்கூழ், காக்டெய்ல், கலப்புப் பழச்சாறுகள், சிரப் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். மேலும், பேசன் பழச்சாற்றைப் பிற பழச்சாறுகளில் கலந்து தரமான சாறுகளைத் தயாரிக்கலாம்.


பேஷன் பழ MANIVANNAN MI

முனைவர் ம.இ.மணிவண்ணன்,

முனைவர் ஐ.முத்துவேல், முனைவர் கொ.இளங்கோ,

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல்-624103.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading