கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020
உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச் சத்துகள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து இவற்றில் மிகுந்துள்ளன. பழ வகைகள் நம் உணவில், சுவை, மணம், நிறம் மற்றும் விருப்பத்தை உண்டாக்கக் கூடியவை. இவற்றிலுள்ள நார்ச்சத்து நமக்கு நிறைவைத் தருவதுடன், தேவையற்ற கொழுப்பையும் குறைக்கவல்லது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பிப் பருகும் வகையில் பழ பானங்கள் கிடைக்கின்றன. முக்கியமாக, குழந்தைகள் விரும்பும் அளவில் கிடைக்கின்றன. ஆனால், குழந்தைகளின் முக்கியப் பிரச்னையான சத்துக்குறையால் ஏற்படும் வளர்ச்சிக்குறை நோய்களைத் தடுக்கும் சக்தி புரதச்சத்துக்குத் தான் உண்டு. ஆனால், பழ வகைகளில் புரதச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
ஆகையால், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த பழ பானங்களுடன் புரதச்சத்தைச் செறிவூட்டி, சத்துக்குறையைத் தவிர்க்கும் நோக்கத்தில், புரதச்சத்து செறிவூட்டப்பட்ட பப்பாளிப்பழ பானம் தயாரித்தல், அந்த பானத்தின் இயல்புகள், சத்துகள் மற்றும் வாழ்நாளைக் கண்டறிதல் ஆகிய முறைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
தயாரிப்பு முறை
இந்த ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட பப்பாளிப் பழங்களுடன், பால் புரதமும் சோயா புரதமும் சேர்க்கப்பட்டன.
ஆய்வு முடிவு
பப்பாளி பானத்தில் மேற்கூறிய அளவுகளில் பால் மற்றும் சோயாப் புரதத்தைச் சேர்த்துச் செறிவூட்டி, நுகர்வோரின் தன்மை, ஒன்பது அளவுகோல்களில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், நிறம், மணம், சுவை, தன்மை, அனைவரும் விரும்பும் தன்மை போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 5% பால்புரதம் மற்றும் 10% சோயாப் புரதம் சேர்க்கப்பட்ட பப்பாளிப்பழ பானத்தை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். இதன் அடிப்படையில் இந்த இரண்டு பானங்களில் உள்ள சத்துகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், 5% பால் புரதம் சேர்க்கப்பட்ட பப்பாளிப்பழ பானத்தில், கார அமிலம் 5.1, சர்க்கரை 10.5, அமிலத் தன்மை 0.352, புரதச்சத்து 4.8 கிராம், பீட்டா கரோட்டீன் 654 மைக்ரோ கிராம், அஸ்கார்பிக் அமிலம் 0.79 மி.கி. இருப்பது கண்டறியப்பட்டது. இதைப் போல 10% சோயாப் புரதம் சேர்க்கப்பட்ட பப்பாளிப்பழ பானத்தில், கார அமிலம் 4.9, சர்க்கரை 10.5, அமிலத் தன்மை 0.419 கி., புரதம் 8.78 கி., பீட்டா கரோட்டீன் 670 மைக்ரோ கிராம், அஸ்கார்பிக் அமிலம் 0.71 மி.கி. இருப்பது அறியப்பட்டது.
புரதச்சத்து ஒப்பீடு
தனி பப்பாளிப் பானத்தில் 0.4 கிராம், பால் புரதம் சேர்க்கப்பட்ட பப்பாளி பானத்தில் 4.8 கிராம், சோயாப் புரதம் சேர்க்கப்பட்ட பப்பாளி பானத்தில் 8.78 கிராம் அளவில் புரதம் இருந்தது. இந்த ஆய்வின் முடிவில், புரதம் பத்து மடங்கு அதிகமாக இருப்பது அறியப்பட்டது.
ஆக, புரதம், பீட்டா கரோட்டீன், அஸ்கார்பிக் அமிலச் சத்துகள் நிறைந்த பப்பாளி பானம், பள்ளிக்குச் செல்லும் 5 வயது முதல் 17 வயது வரையான பிள்ளைகளுக்கு ஏற்றதெனவும், சத்துக்குறை நோய்கள், இரத்தச்சோகை போன்றவற்றைக் குறைக்கும் வல்லமை மிக்கது எனவும் உறுதி செய்யப்பட்டது.
முனைவர் கி.ஜோதிலட்சுமி,
ஏ.அபிநயா, சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மதுரை -625104.