விதை மூலம் சின்ன வெங்காயத்தைப் பயிரிடும் முறைகள்!

Cultivation of onions by seed

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020

ன்றாடம் சமையலில் பயன்படும் காய்களிகளில் ஒன்று வெங்காயம். இதில் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் என இருவகை உண்டு. உலகளவில் வெங்காய உற்பத்தியில் சீனம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. எகிப்தில் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் உள்ளது. இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரக சம்கிதா மருத்துவக் கட்டுரையில் வெங்காயத்தின் மருத்துவக் குணம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பெரிய வெங்காயம் 80%, சின்ன வெங்காயம் 20% அளவில் பயிரிடப்படுகின்றன. ஆந்திரம், கர்நாடகம் மற்றும் ஒடிசாவிலும் சின்ன வெங்காயம் விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் விளைந்தாலும், பெரம்பலூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது.

உற்பத்தியாகும் சின்ன வெங்காயத்தில் பெருமளவு விதைக்காகக் பயன்படுத்தப்படுவதால், சமையலில் இதன் பங்கு குறைவாகவே உள்ளது. ஒரு ஏக்கர் நடவுக்கு 600 கிலோ தேவைப்படுவதால், சாகுபடிச் செலவும் கூடுகிறது. இதனால், பெரும்பாலும் இதன் விலை அதிகமாகவே உள்ளது. எனவே, சின்ன வெங்காயத்தை விதை மூலம் சாகுபடி செய்தால் செலவு குறையும். ஒரு ஏக்கருக்குத் தேவையான ஒரு கிலோ விதைகளின் விலை ரூ.2,000-3,000 மட்டுமே.

நாற்றாங்கால் தயாரிப்பு

ஒரு ஏக்கருக்குத் தேவையான வெங்காய நாற்றுகளை உற்பத்தி செய்ய, 2 சென்ட் நிலம் தேவை. இதை 2-3 முறை உழுது புழுதியாக்கி, சென்ட்டுக்கு 50 கிலோ மண்புழு உரம் அல்லது 100 கிலோ தொழுவுரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட வேண்டும். தொழுவுரத்தை இட்டால் களைகள் நிறைய முளைக்கும் என்பதால், மண்புழு உரமே நல்லது. வேப்பம் புண்ணாக்கு, இலைப்பேனைக் கட்டுப்படுத்தும். பிறகு, 2.5 அடி அகலம், அரையடி உயரம் மற்றும் போதுமான நீளத்தில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். 

விதை நேர்த்தி மற்றும் விதைப்பு

ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய ஒரு கிலோ விதைகள் தேவை. ஒரு கிலோவில் 2.5 இலட்சம் விதைகள் இருக்கும்.  விதையின் முளைப்புத்திறன் மற்றும் நாற்றங்கால் பராமரிப்பைப் பொறுத்து நாற்றுகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் எடுத்து ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நேர்த்தி செய்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

அதாவது, ஒரு சதுரடியில் ஒரு கிராம் விதைகள் வீதம் தூவ வேண்டும். பிறகு, இந்த விதைகளை மண்புழு உரம் அல்லது மணலைத் தூவி மூடி விட்டு நீரைப் பாய்ச்ச வேண்டும். விதைகள் 6-8 நாட்களில் முளைக்கும்.  விதைகள் முளைக்கும் வரை நாற்றங்கால் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நாற்றுகள் முளைத்த பிறகு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப, 2-3 நாட்களுக்கு ஒருமுறை நீரைப் பாய்ச்சலாம். நாற்றங்காலில் களை முளைப்பைத் தடுக்க, விதைத்ததும் ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி பென்டிமெத்தலின் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நாற்றுப் பாதுகாப்பு

இலைப்பேன் தாக்குதலில் இருந்து நாற்றுகளைப் பாதுகாக்க, 5% வேப்பங்கொட்டைக் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி அசாடிராக்டின் வீதம் கலந்து தெளிக்கலாம். முக்கிய நோயான நாற்றழுகல், பித்தியம், பைட்டோப்தோரா, ரைசக்டோனியா, பியூசேரியம் போன்ற பூஞ்சைகளால் ஏற்படும். இவை நாற்றுகள் முளைப்பதற்கு முன் விதைகளை அழுகச் செய்தும், முளைத்த பின் நாற்றுகளின் கழுத்துப் பாகத்தை அழுகச் செய்தும் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு வீதம் கலந்து, வேர்கள் நனையும்படி ஊற்றலாம்.

நிலத் தயாரிப்பு

காய்களை நடுவதற்கு நிலத்தைத் தயாரிப்பதைப் போலவே, நாற்று நடவுக்கும் நிலத்தைத் தயார் செய்யலாம். நிலத்தை 3-4 முறை உழுது பார்களை அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்யலாம். அல்லது 3-4 அடி அகலம், 15 செ.மீ. உயரமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைத்துச் சொட்டுநீர் முறையிலும் பாசனம் செய்யலாம். இதற்கு 16 மி.மீ. அளவுள்ள பக்கக் குழாய்களை, படுக்கைக்கு இரண்டு வீதம் அமைக்கலாம். முப்பது செ.மீ. இடைவெளியில் சொட்டுவான்களை அமைக்க வேண்டும். இவற்றின் நீர் வெளியேற்றும் திறன் மணிக்கு 4 லிட்டர் வீதம் இருக்க வேண்டும்.  நுண்தெளிப்புப் பாசனத்துக்கு 20 மி.மீ. தெளிப்புக் கருவியை 6 மீட்டர் இடைவெளியில் அமைக்கலாம். இதன் நீர் வெளியேற்றும் திறன் மணிக்கு 135 லிட்டர் வீதம் இருக்க வேண்டும்.

நடவு

35-45 நாள் நாற்றுகளை நடலாம். இச்சமயத்தில் 15-20 செ.மீ. உயரம் மற்றும் 3-4 தாள்களுடனும் நாற்றுகள் இருக்கும். தடித்த நாற்றுகளை நட வேண்டும். வயது அதிகமான நாற்றுகளை நட்டால், தாள்கள் தடித்துப் புதிய வளர்ச்சி ஏற்படக் காலத் தாமதமாகும். வயது குறைந்த நாற்றுகளை நட்டால் சரியாக வளராமல் பூச்சி, நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்.

களைக் கட்டுப்பாடு

நடுவதற்கு முன், ஏக்கருக்கு 800 மில்லி புளுகுளோரலின் வீதம் நிலத்தில் தெளிக்கலாம். அல்லது நடவு முடிந்த மூன்று நாட்களில், ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டிமெத்தலின் அல்லது 250 மில்லி ஆக்ஸிபுளுரோயென் களைக்கொல்லியை மணலில் கலந்து நிலம் ஈரப்பதமாக இருக்கையில் தூவ வேண்டும். பிறகு, 1-2 முறை கைக்களை எடுக்கலாம்.

உரமிடல்

கடைசி உழவின்போது ஏக்கருக்கு 10 டன் நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது 5 டன் மண்புழு உரம் அல்லது நன்கு மட்கிய கோழியெருவை இட வேண்டும். பார்களை அமைக்கும் போது ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20 கிலோ பொட்டாசை இட வேண்டும். மேலுரமாக, 30 நாளில் 22 கிலோ யூரியா அல்லது 58 கிலோ அம்மோனியம் சல்பேட்டை இடலாம்.

சொட்டுநீர்ப் பாசனம் வழியாக உரமளிக்க, ஏக்கருக்கு 112 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, பார்களை அமைக்கையில் அடியுரமாக இட வேண்டும். அடுத்து, நீரில் கரையும் உரங்களை மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். இதற்கு, ஏக்கருக்கு 19:19:19 உரம் 13 கிலோ, 12:61:0 உரம் 6 கிலோ, 13:0:45 உரம் 6 கிலோ 0:0:50 உரம் 14 கிலோ மற்றும் யூரியா 44 கிலோ தேவைப்படும். நட்டு 40 மற்றும் 50 நாளில், காய்கறி நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளித்தால், காய்களின் எடையும் நிறமும் கூடும்.

விதைமுறை சாகுபடி இரகங்கள்

கோ.5: காய்கள் இளஞ்சிவப்பாக இருக்கும். நட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 6 டன் மகசூல் கிடைக்கும்.  மார்ச் முதல் ஜுலை வரையில் காய்கள் உற்பத்திக்கும், நவம்பர் முதல் ஜனவரி வரை விதை உற்பத்திக்கும் பயிரிடலாம். ஏக்கருக்கு 100-120 கிலோ விதைகள் கிடைக்கும்.

கோ.6: காய்கள் இளஞ்சிவப்பாக இருக்கும். நட்டு 90 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 7.5 டன் மகசூல் கிடைக்கும். ஒரு செடியில் 5-7 காய்கள் இருக்கும். காய்கள் பெரிதாக இருக்கும். மே முதல் செப்டம்பர் வரை காய்கள் உற்பத்திக்கும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை விதை உற்பத்திக்கும் பயிரிடலாம். ஏக்கருக்கு 120 கிலோ விதைகள் கிடைக்கும்.

அர்க்கா உஜ்வால்

காய்கள் சிவப்பாக இருக்கும். ஏற்றுமதிக்கு உகந்தது. ஒரு செடிக்கு 3-5 காய்கள் இருக்கும். நட்டு 85 நாட்களில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 8-10 டன் காய்கள் கிடைக்கும். இதைப்போல, ஒரியா, ஸ்ரீகா இரகங்களையும் பயிரிடலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

ஊதாக்கருகல் நோய்: இது, அல்டர்னேரியா போரி என்னும் பூஞ்சையால் ஏற்படும். வெப்பநிலை குறைந்தும், காற்றின் ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும் போது இப்பூஞ்சை வேகமாகப் பரவும். முதிர்ந்த தாள்களில் தோன்றி இளம் தாள்களுக்கும் பரவும். சிறிய கண் வடிவ வெள்ளைப் புள்ளிகள் தோன்றி நாளடைவில் ஊதா நிறமாக மாறும். இதைச் சுற்றி மஞ்சள் வளையங்களும் இருக்கும். நாளடைவில் தாள்கள் முழுவதும் மஞ்சள் அல்லது பழுப்பாக மாறி மடிந்து விடும். காய்கள் சிறுத்து மகசூல் குறையும். இந்நோயால் பாதித்த காய்களைச் சேமித்து வைத்தால் அழுகி விடும்.

கட்டுப்பாடு: சரியான இடைவெளி மற்றும் களைக்கட்டுப்பாடு மூலம் நிலத்தில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, தாள்களின் ஈரத்தன்மையைக் குறைக்கலாம்.  தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச்சுழற்சி முறை அவசியம். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி டிரைசைக்ளோசோல் அல்லது ஹெக்சோகோனசோல் வீதம் கலந்து தெளிக்கலாம். இலைப்பேன் தாக்கிய தாள்களை இப்பூஞ்சை எளிதாகத் தாக்குவதால் இலைப்பேனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அடிச்சாம்பல் நோய்: இது, பெரனோஸ்போரா டெஸ்ட்ரக்டர் என்னும் பூஞ்சையால் ஏற்படும். வெப்பநிலை குறைந்தும் காற்றின் ஈரப்பதம் மிகுந்தும் இருக்கும் போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட வெங்காயத் தாள்களில் வெளிர்நிறப் புள்ளிகள் தோன்றி, பின்னர் பழுப்பாக மாறும். செடிகளின் வளர்ச்சியும் குன்றும். காய்கள் சிறியதாக, மிகவும் மென்மையாக இருக்கும்.

கட்டுப்பாடு: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச்சுழற்சி முறை அவசியம். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம்  மெட்டலாக்சில் மேங்கோசெப் வீதம் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கலாம்.

பூச்சிகள்

இலைப்பேன்: இது புதிதாகத் தோன்றும் வெங்காயத் தாள்களில் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். இதனால், 30-100% இழப்பு ஏற்படும். இளம்பேன் வெண்மை அல்லது இளமஞ்சள் நிறத்தில் 0.5 மி.மீ.-12 மி.மீ. நீளத்திலும், வளர்ந்த பேன் 2 மி.மீ. நீளத்திலும் இருக்கும். மஞ்சள் அல்லது பழுப்பு இறக்கையுடன் இருக்கும். தாள்கள் பிரியுமிடத்தில் நிறைய இருக்கும். தாள்களில் சாற்றை உறிஞ்சுவதால் பச்சையம் இன்றி, வெண் புள்ளிகள் தோன்றி இலைகள் வெளுத்து விடும். ஒளிச்சேர்க்கை தடைபடுவதால் பயிரின் வளர்ச்சியும் குன்றிவிடும். தாக்குதல் அதிகமானால், தாள்கள் காய்ந்து கருகியதைப் போலிருக்கும்.

கட்டுப்பாடு: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. பயிர்ச்சுழற்சி முறை அவசியம். நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. ஏக்கருக்கு 5 வீதம் மஞ்சள் ஒட்டும் பொறிகளை வைக்க வேண்டும். வரப்பு ஓரங்களில் கவர்ச்சிப் பயிராக மக்காச்சோளத்தைப் பயிரிடலாம். பத்து லிட்டர் நீருக்கு 100 கிராம் பிவேரியா பேசியானா வீதம் கலந்து தெளிக்கலாம். வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 400 மில்லி வீதம் எடுத்து ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம். பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி புரோபினோபாஸ் அல்லது 20 மில்லி டைமெத்தோயேட் அல்லது 10 கிராம் அசிபேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.

புகையிலைப் புழு: இளம்புழு பச்சையாகவும், வளர்ந்த புழு பழுப்பாகவும் இருக்கும். தாள்களைச் சுரண்டிச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி, 5 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைக்கலாம். 10 லிட்டர் நீருக்கு 20 மில்லி குளோர்பைரிபாஸ் 20 இ.சி. அல்லது 3 மில்லி புளுபென்டையமைடு 480 எஸ்.சி. வீதம் கலந்து தெளிக்கலாம்.  


சின்ன வெங்காய kathiravan e1630179750738

ஜெ.கதிரவன்,

தொழில்நுட்ப வல்லுநர், ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் நிலையம்,

வாலிகண்டபுரம், பெரம்பலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading