இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

அயலக மீன் 1 9C4OCJLPaEg Kh9P3I3Kvg scaled

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

மீனினப் பெருக்க நாடுகளில் முக்கியமானது இந்தியா. குறிப்பாக, நன்னீர் மீன்வளத்தில் உலகளவில் எட்டாம் இடத்திலும், ஆசியளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகளவிலான நன்னீர் மீனினங்களில் 40% இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20% மீனினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகளவில் நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கமானது, அவற்றின் வாழ்விடங்கள் அழிப்பு, சூழல்மாசு, அயலின அறிமுகம், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், மனித செயல்பாடுகள் போன்றவற்றால் குறைந்து வருகிறது. இவற்றில் அயல் மீன்களின் வரவு உள்நாட்டு மீன்வளத்தைத் தடுக்கிறது. ஏனெனில், நன்னீர்ச் சூழலில் அனைத்து உயிரினங்களின் பகிர்வு மற்றும் கிடைப்புத் தன்மையைத் தீர்மானிக்கும் சக்தியாக அயலக மீனினம் விளங்குகிறது.

அயல்நாட்டு இனங்கள் என்பவை, இயல்பாகவோ அல்லது திட்டமிட்டோ, இயற்கையாக இவ்வுயிரினங்கள் வாழும் எல்லைக்கு வெளியே வரப்படுபவை. மீனுற்பத்தி, பொழுதுபோக்கு, அழகுபடுத்தல், கொசுவைக் கட்டுப்படுத்தல் என, பல காரணங்கள் இருப்பினும், அயல் மீனினங்களை இறக்குமதி செய்வதன் முக்கிய நோக்கம் மீனுற்பத்தியை அதிகரிப்பது தான். ஏனெனில், அயலக மீனினங்கள் ஏழைகளின் மீனுணவுத் தேவையை நிறைவு செய்கின்றன. மேலும், கடல் மீன்கள் குறைந்து வருவதால், வளர்ப்பு மீன்களைப் பெருக்க வேண்டியுள்ளது.

நம் நாட்டின் நன்னீர் மீனுற்பத்தியில் அயலக மீன்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தியாவின் மொத்த நன்னீர் மீனுற்பத்தியில் அயலக மீன்களின் பங்கு 40% ஆகும். இந்த மீன்களின் அறிமுகம், மீன்வளம் மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்தச் சரியான வழியாகும்.

மீனுற்பத்தியில் அயலக மீன்களின் பங்கு

கூட்டுமீன் வளர்ப்பு என்பது, அயல்நாட்டு மீன்களான வெள்ளிக்கெண்டை, சாதாக்கெண்டை, புல்கெண்டை ஆகியவற்றை, இந்தியப் பெருங்கெண்டை மீன்களுடன் சேர்த்து வளர்ப்பதாகும். இவை, உள்நாட்டு மீன்களுடன் இணக்கமாக வளர்ந்து மீனுற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. தற்போது வந்துள்ள பங்காசினோடான் ஹைப்தாலாமஸ், லிட்டோபினேயஸ் வனாமி இனங்கள், இந்திய மீன் மற்றும் இறால் உற்பத்தியை ஒருபடி மேலே உயர்த்தியுள்ளன. ஆப்பிரிக்க சிக்லிட், திலேப்பியா ஆகியன, ஆப்பிரிக்காவை விட ஆசியாவில் நன்கு வளர்கின்றன.

இதுவரையில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட அயலக இனங்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகளவில் 27 அயலக மீனினங்கள் தீமை பயப்பனவாக மாறியுள்ளன என்று, வெல்கம் (1988) என்பவர் தனது ஆய்வின் மூலம் அறிந்துள்ளார்.

ஆப்பிரிக்க சிக்லிட் மீனின் வருகை, மீன்வள வல்லுநர்களின் வெற்றியாகக் கருதப்பட்டாலும், அது, நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்வளர்ப்பில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இம்மீன்கள் ஆற்றுநீரில் வாழும் சூழலை உருவாக்கிக் கொண்டு, அனைத்து இயற்கை நீர்நிலைகளிலும் உள்நாட்டு மீன்களைவிட அதிகளவில் பெருகியுள்ளன. எடுத்துக்காட்டாக, கேரளத்தின் பாரதப்புழா ஆற்றில் திலேப்பியா மீன்கள், உள்நாட்டு மீன்களுக்குப் பதிலாகப் பல்கிப் பெருகியுள்ளன.

இந்தியாவில் டால், லோக்டாக் ஏரிகளில் விடப்பட்ட சாதாக் கெண்டைகளால், நமது இனங்களான சைசேதொராக்ஸ், ஆஸ்டியோபிரேமா பிலோங்கரி ஆகியன அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிந்தசாகர் நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட வெள்ளிக் கெண்டைகளால், நமது கட்லா, மகசீர் போன்ற மீன்கள் குறைந்து வருகின்றன. கொசுப் புழுக்களை உண்ணும் கம்பூசியா, கப்பி போன்ற மீன்கள், நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மையில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இவை, நமது மீனினங்கள் வாழும் நீர்நிலைகளில் பல்கிப் பெருகும் திறனைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற மீன்வள வல்லுநர் மயர்ஸ் (1965), கம்பூசிய மீனை, உள்நாட்டு மீன்களை அழிக்கும் இனமாகக் குறிப்பிடுகிறார். கப்பி மீனின் வருகையால் உலகளவில் உள்நாட்டு நீர்வாழ் உயிரினங்கள் சில அழிந்துள்ளதாக ஐயூசிஎன் (1986) கூறுகிறது.

பொழுதுபோக்கு மீன்கள் இதுவரை எவ்வித மாற்றத்தையும், நீர்வாழ் உயிரினச் சூழலில் அல்லது பல்லயிர்த் தன்மையில் ஏற்படுத்தவில்லை. எனினும், ட்ரவுட் போன்ற அயலக மீன்கள் உணவுக்காக உள்நாட்டு மீன்களுடன் போட்டியிடுகின்றன. மேலும், உள்நாட்டு மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உண்ணுகின்றன. பெருந்தலைக் கெண்டை, ஆப்பிரிக்க கெளுத்தி, சிவப்புப் பிரானா போன்ற விலங்குண்ணிகள் மற்றும் அதிவேக உணவுண்ணிகள் சட்டவிரோதமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டவை.

இவற்றால், இயற்கை மீன்களும், முதுகெலும்பற்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, தொழிற்சங்க வேளாண்மை அமைச்சகம், இந்த மீன்களை அடியோடு அழிக்க உத்தரவிட்டது. ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாததால், இவற்றை அழிக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அயலக மீன்களின் நன்மைகள்

இனப்பெருக்கம் செய்தல் எளிது. சிறிய பண்ணையாளர்களும் மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்ய இயலும். இம்மீன்களுக்கு நோயெதிர்ப்பு, கிடைத்ததை உண்ணும் திறன் ஆகிய தன்மைகள் இருப்பதால், குறைந்தளவு கவனத்தில் எளிதாக வளர்க்கலாம். மேலும், விரைவான வளர்ச்சி, அதிக ஆயுட்காலம் இருப்பதால், உள்நாட்டு மீன்களை விட அதிக உற்பத்திக் கிடைக்கும். வேளாண் சூழல் அமைப்புகளுடன் இணைந்து வாழ்வதால், ஒருங்கிணைந்த மீன்வளர்ப்புக்கு ஏற்றவை. குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழைகளும் பயனடைய முடியும்.

தீமைகள்

அயலக மீன்கள் மழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் மற்றும் மனிதர்களால் அடுத்த நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன. எடுத்துக்காட்டாக மத்திய அமெரிக்க மெல்லுடலியான மைடிலோப்சிஸ் சாலை மீன், கப்பல் மூலம் இந்தியாவுக்கு வந்ததாகும். அயலக மீன்களால் மீன் உற்பத்திக் கூடியிருந்தாலும், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. உணவு மற்றும் உறைவிடத்துக்காக ஒரே நீர்நிலையில் போட்டியிடும் அயலக மீன்களுக்கு, உள்நாட்டு மீன்கள் இரையாகின்றன.

இவற்றால் நமது நீர்நிலைகளில் புதிய நோய்கள், ஒட்டுண்ணிகள் பரவலாம். அயலக மீன்களுடன் இனவிருத்தியில் ஈடுபடுவதால், நமது மீன்களின் மரபணுக்கள் சிதைந்து போகலாம். மேலும், நீர்வாழ் சூழலின் இயற்பியல், வேதியியல் அமைப்புகள் சிதைவதால், பல்லுயிர்ப் பெருக்கத்தில் சிக்கல் ஏற்படும்.

பல்லுயிரியல் பாதுகாப்பு

அயலக மீன்களால் பல்லுயிரியலில் விளையும் தீமைகளைக் கருத்தில் கொண்டு, இம்மீன்களை இறக்குமதி செய்வதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். முறைப்படி இவற்றைக் கொண்டு வருமுன், புதுதில்லியில் உள்ள இந்திய கடல்வாழ் இனங்களை அறிமுகப்படுத்தும் தேசியக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். மீன்வளர்ப்பு அபிவிருத்தி ஆணையர் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட குழு, இறக்குமதி செய்யப்படும் புதிய இனம் இந்திய நீர்ச் சூழலில்  ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்த பின்பே அனுமதிக்க வேண்டும். எனினும், அயல் மீன்களின் சட்ட விரோத இறக்குமதியைக் கட்டுப்படுத்த எவ்விதத் தடுப்பு முறையும் இல்லை.

அயலக மீன்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைச் செயல்படுத்த, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் செயல்முறைகளை திருத்தியமைக்க வேண்டும். புதிய இனங்களை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு டி சில்வா என்னும் அறிஞரின் வழிகாட்டுதல்கள், ஐரோப்பிய உள்நாட்டு மீன்வள ஆலோசனை ஆணைக்குழு மற்றும் கடல் ஆய்வுக்கான  பன்னாட்டுக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த வேண்டும்.

மக்கள் பெருக்கமும், இயற்கை நீர்நிலைகளில் அயலக மீன்களின் அறிமுகமும், உள்ளூர் நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த் தன்மையை இழக்கச் செய்கின்றன. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கா விட்டால், இழப்பு மேலும் கூடும். பல்வேறு நீர்நிலைகளில் விடப்பட்ட மீனினங்களால் ஏற்படும் விளைவுகளை அறிய விரிவான விசாரணை வேண்டும். மேலும், தீமை பயக்கும் இனங்களை அழிக்க வேண்டும்.   

இந்தியாவில் வளர்ப்பு மீனினங்கள் ஏராளமாக உள்ளன. பங்காசியஸ் பங்காசியஸ், ஆரிச்தைஸ் சிங்கீலா, ஆ. ஓர், வல்லாகோ அட்டு, கிளாரியஸ் பெட்ராகஸ், ஹெட்டிரோப்நியுடஸ் ஃபோசிலிஸ் போன்றவற்றை வளர்க்க வேண்டும். தற்போதைய தேவை, அயலக மீன்களைத் தவிர்த்து விட்டு, நமது மீன்களைப் பாதுகாப்பதுடன், அவற்றின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

நமது மீன்கள், சமூகத்தின் அன்றாடத் தேவைகளுடன் இணைக்கப்பட வேண்டும். உள்ளூர் மீன்களான மேக்ரோபோடஸ், அப்ளோசெய்லஸ் ஆகியவை கொசுக்களைச் சிறப்பாகக் கட்டுபடுத்துகின்றன. இதைப் போல வண்ண மீன்களும் உள்ளன. இந்தியாவில் உள்நாட்டு மீனினங்களின் அடிப்படையில் தரவுகளை உருவாக்க வேண்டும். அதிகமாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அழிவு நிலையிலுள்ள மீன்கள் வாழும் நீர்நிலைகளை, சரணாலயங்கள் அல்லது நீர்வாழ்  பல்லுயிரி மேலாண்மைப் பகுதிகளாக மாற்ற வேண்டும். இது, நமது மீன்கள் மீதான விழிப்புணர்வு மற்றும் நீர்வாழ் பல்லுயிர்  வளங்களைப் பாதுகாக்க உதவும்.


அயலக மீன் T.GOWSALYA

த.கௌசல்யா,

ஆசிரிய உதவியாளர், முனைவர் பா.சுந்தரமூர்த்தி, முதல்வர்

டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, தலைஞாயிறு, நாகை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading