கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
இயல்பாக உருவாவது இயற்கை. நிலம், நீர், காற்று, மரம், செடி, கொடி, மலை, குன்று, விலங்குகள் எல்லாம் இயற்கை தான். ஆக்கச் சிந்தனை இருப்பவர்கள் செயற்கையாகக் கூட, எழில் கொஞ்சும் இயற்கையை உருவாக்கி விடுகிறார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார், திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த நவீன். இவருக்குச் சமூக ஆர்வலர், இயற்கை விவசாய ஆர்வலர், பயிற்சியாளர், வன விலங்குகள் மீட்பாளர் எனப் பல முகங்கள் உண்டு.
இவர் செயற்கையாக ஓர் இயற்கைச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார் என்னும் செய்தி நம் செவிக்கு எட்ட, உடனே அவரைச் சந்திக்கும் நோக்கத்தில், திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள நவீன் கார்டன் ஆக்ஸிஜன் வளாகம் என்னும் அவரது பண்ணைக்குச் சென்றோம்.
அமைதியும் அழகும்
வாயிலில் நுழைந்ததும் பத்துக்கும் மேற்பட்ட உயரின நாய்கள் நம்மை மிரட்ட, அவற்றை அமைதிப்படுத்தி விட்டுப் புன்னகையுடன் நம்மை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் நவீன். ஆடுகள், மாடுகள், வாத்துகள், நாய்கள், மீன்கள், பறவைகள் என நிறைந்திருக்கும் பண்ணையில், அமைதிக்கும் அழகுக்கும் பஞ்சமே இல்லை.
மரத்தின் மேலே வீடு
முதலில் அந்தப் பண்ணையில் உள்ள மரத்தின் மேலே, மரங்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ள மரவீட்டில் நுழைந்தோம். நட்சத்திர விடுதிக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த மர வீட்டில், வெய்யில் நிறைந்த மதிய வேளையிலும் குளிர்ச்சி குடிகொண்டிருந்தது. சற்று நேரக் காத்திருப்புக்குப் பின்னர் அங்கே வந்த நவீன், பண்ணையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே பேசலாமே என்றார்.
அடிப்படைத் தொழில்
அங்கிருந்து கீழிறங்கி அந்தத் தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது நாம் அவரைப் பற்றிக் கேட்க, “என் பெயர் கி.நவீன். அப்பா கிருஷ்ணன், அம்மா கலையரசி. நான் திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். என் அப்பா பல்வேறு தொழில்களைச் செய்தாலும் அடிப்படை விவசாயம் தான். அதனால் சிறு வயதிலிருந்தே அப்பாவுடன் தோட்டத்துக்கு வருவேன். ஆகவே, அப்போதிருந்தே எனக்கு இந்த விவசாயம், சுற்றுச்சூழல், இயற்கை, செல்லப் பிராணிகள் வளர்ப்புப் போன்றவற்றில் ஆர்வம் உண்டாகி விட்டது.
கால மாற்றம்
எனது அப்பாவின் காலத்தில் விவசாயம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் இன்று விவசாயம் அப்படியில்லை. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப, விவசாயத்தில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இயற்கையும் சுற்றுச்சூழலும் அழிந்து வருவதைப் பார்க்கிறோம். இந்த நிலை நீடித்தால் நமது பிள்ளைகள் காலத்தில் சுத்தமான காற்றைக் கூடப் பணம் கொடுத்து வாங்கித் தான் சுவாசிக்க வேண்டும். இப்போதும் கூட அந்த நிலை சில இடங்களில் உள்ளது.
50 ஏக்கர் பண்ணை
எதிர்வரும் காலத்தில் நல்ல நிலம், நல்ல உணவு, நல்ல நீர், சுத்தமான காற்று முதலியவற்றை நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வது தான், நாம் அவர்களுக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து. அந்த வகையில் என் அப்பா எனக்கு இந்தத் தோட்டத்தைக் கொடுத்துள்ளார். இந்தத் தோட்டம் சுமார் 50 ஏக்கர் பரப்பைக் கொண்டது’’ என்றவர், அங்கு வனம் போல் மரங்களும், செடிகளும், கொடிகளும் அடர்ந்திருந்த பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
மியாவாக்கி காடு
“இது மியாவாக்கி காடு. தமிழ்நாட்டிலேயே தனியாருக்குச் சொந்தமாக உள்ள பெரிய மியாவாக்கி காடு என்றால் அது இந்தக் காடு தான். இது சுமார் மூன்று ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட வகையிலான 6000 மரங்கள் உள்ளன. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவாக்கி. அவர் வகுத்த முறை தான், இடைவெளி இல்லா அடர்காடு. அதனால், அவர் பெயரிலேயே மியாவாக்கி என அழைக்கப்படுகிறது.
மியாவாக்கியின் சிறப்பு
மியாவாக்கி காடு என்பது குறைந்த இடத்தில் அதிகளவில் மரங்களை நட்டு வளர்ப்பது. எடுத்துக்காட்டாக, 1000 சதுர அடி நிலத்தில், 300-400 மரங்களை வளர்க்கலாம். பத்து ஆண்டுகளில் வளரக்கூடிய மரங்களை, இரண்டே ஆண்டுகளில் வளர்ப்பது தான் இதன் சிறப்பு. ஒரு குழியில் பல கன்றுகளை நடும்போது, சூரிய ஒளியைப் பெறுவதற்காகப் போட்டிப் போட்டுக்கொண்டு வளரும். ஆழமான குழியில் நடும்போது வேர்கள் வேகமாகப் பூமிக்குள் இறங்கும். இதனால் பராமரிப்புச் செலவு குறையும். குறைந்த இடத்தில் அதிக மரங்கள் இருப்பதால், பூமியில் வெப்பம் குறையும். காற்றில் ஈரப்பதம் நிலையாக இருக்கும். பறவைகளுக்கான வாழ்விடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும்.
கொஞ்சம் மாற்றம்
மியாவாக்கி காடுகள், மனிதர்கள் உள்ளே நுழைய முடியாத அளவில் அடர்ந்த மரங்களைக் கொண்டிருக்கும். ஆனால் நான் இந்த மியாவாக்கி காட்டை, பத்துக்குப் பத்தடி இடைவெளியில் மூன்றடி ஆழத்தில் குழிகளை அமைத்து, குழிக்கு ஐந்து மரக்கன்றுகள் வீதம் நட்டுள்ளேன். அதனால், இந்த மியாவாக்கி காட்டுக்குள், எங்கள் பண்ணையை பார்வையிட வருவோர் எளிதாக உள்ளே சென்று சுற்றிப் பார்த்து விட்டு வர முடியும். இந்தக் காட்டை அமைத்துச் சுமார் ஆறு மாதங்கள் தான் இருக்கும். ஆனால், நான்கைந்து ஆண்டு மரங்களைப் போல, எல்லா மரக்கன்றுகளும் பெரியளவில் வளர்ந்து விட்டன. இங்கே இப்போதே பல்வேறு வகையான பறவைகள், அணில்கள், முயல்கள், உடும்புகள் போன்ற வனவிலங்குகள் வரத் தொடங்கி விட்டன’’ என்றவர், அதற்கருகில் கட்டப்படும் கட்டடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
மறுவாழ்வு இல்லம்
ஆளுயரச் சுற்றுச்சுவருக்கு நடுவில் இருந்த அந்தக் கட்டடம் முடியும் நிலையில் இருந்தது. இதுகுறித்துப் பேசிய நவீன், “மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையம் ஒன்றை இங்கே அமைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதை நிறைவேற்றும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு எங்கள் குடும்ப நண்பரான கெளரி ஸ்போக்கன் இங்கிலீஷ் உரிமையாளர் திருமதி கெளரி வாசுதேவனுடன் சேர்ந்து, அன்னை தெரசாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 26 ஆம் தேதி திருச்சிக் காவல் துணை ஆணையர் மயில்வாகனன் அவர்களை அழைத்து வந்து அடிக்கல் நாட்டிப் பணியைத் தொடங்கினோம். இப்போது முடிக்கும் நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு அன்னை தெரசாவின் பிறந்தநாளில் இது மறுவாழ்வு மையமாகி விடும்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து அருகிலிருந்த மாதுளைத் தோட்டத்துக்குச் சென்றோம். கனிந்த மாதுளம் பழங்களை, குருவிகளும் பறவைகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது, “இந்த மாதுளைத் தோட்டம் சுமார் ஏழு ஏக்கர் பரப்பில் உள்ளது. இதை அடர் நடவு முறையில் தான் அமைத்துள்ளோம். சாதாரண முறையில் ஒரு ஏக்கரில் 150 கன்றுகளை மட்டுமே நட முடியும். ஆனால், இங்கே அடர் நடவு முறையில் ஏழு ஏக்கரில் சுமார் 3,500 கன்றுகளை வைத்துள்ளோம்.
விற்பனைக்கல்ல
இந்த மாதுளம் பழங்களை நாங்கள் விற்பனைக்காகப் பறிப்பதில்லை. இவை முழுக்க முழுக்க, இங்கு வரும் பார்வையாளர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அணில்கள், காகம், குருவி போன்ற பறவைகள், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் உணவு தான். இந்தப் பழங்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவை. எங்கள் பண்ணையில் கொஞ்சம் கூட இரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன்படுத்துவதில்லை. பறவைகள் வர வேண்டுமென்றால் அச்சமற்ற மற்றும் அமைதியான இயற்கைச்சூழல் இருக்க வேண்டும். அதைத்தான் இங்கே அமைத்து வருகிறேன். பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் பறவைகள் சரணாலயம் போன்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறேன்’’ என்றார்.
விழிப்புணர்வு மொழிகள்
பண்ணையில் நடந்து செல்லும் பாதை முழுவதும் ஆங்காங்கே, சுற்றுச்சூழல், மண்வளப் பாதுகாப்பு, மழைநீர்ச் சேமிப்புப் பற்றிய வாசகங்கள் அடங்கிய தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. “பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் எனப் பலரும் இந்தப் பண்ணையைப் பார்க்க வருவதால், எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்குமே என்று வைத்துள்ளோம்’’ என்றார்.
பின்னர் அருகிலிருந்த கோழிப்பண்ணைக்குச் சென்றோம். அங்கே 500 க்கும் மேற்பட்ட சிறுவிடை நாட்டுக்கோழிகள், 5000 க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் இருந்தன.
அதிகக் குட்டிகளை ஈனும் செம்மறி ஆடு
அதைத் தொடர்ந்து ஆட்டுப்பட்டிக்குச் சென்றோம். செம்மறியாடுகள், வெள்ளாடுகள், மினியேச்சர் எனப்படும் குட்டையின ஆடுகள் என 100 க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அங்கிருந்த செம்மறியாடுகளைப் பற்றிக் கேட்டபோது, “இதற்கு பெக்பி ஜீன் ஆடுகள் என்று பெயர். நமது செம்மறியாடுகள் ஒரு குட்டிதான் இடும். ஆனால் இந்த பெக்பி ஜீன் ஆடு இரண்டு மூன்று குட்டிகளைப் போடும். இதனால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்’’ என்ற நவீன், நம்மை மாட்டுக் கொட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே கண்ணைக் கவரும் வகையில் கம்பீரமான காங்கேயம் காளை கட்டப்பட்டிருந்தது.
இலவச இனச்சேர்க்கை
“இந்த காங்கேயம் காளையை, இப்பகுதி விவசாயிகளின் மாடுகளை இனவிருத்திச் செய்வதற்காக வைத்துள்ளோம். சாதாரணமாக இனவிருத்திச் செய்வதற்கு 750 ரூபாய் வரை பணம் பெறுகிறார்கள். ஆனால், நாங்கள் முற்றிலும் இலவசமாகச் செய்து கொடுக்கிறோம். இதன் மூலம் நமது காங்கேயம் மாட்டினம் பெருகும்’’ என்றார்.
தத்தெடுக்கப்பட்ட விலங்குகள்
அதற்கு அருகிலேயே உயரின மற்றும் குட்டையினக் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து விட்டு, அருகிலிருந்த கழுதை, ஒட்டகம், வாத்து, புறா, அரிய வகை வண்ண மீன்கள், ஆளை மிரட்டும் உயரின நாய்கள் என அனைத்தையும் காட்டி அவற்றைப் பற்றி நமக்கு விளக்கிய நவீன், “இவை அனைத்தும் பிறரால் வளர்க்கப்பட்டவை. ஆனால், அவர்களால் தொடர்ந்து வளர்க்க முடியாமல் போனதால், இவற்றை நாங்கள் தத்தெடுத்து இங்கே வளர்த்து வருகிறோம்’’ என்றார்.
செயற்கைக் குன்று
அதைத் தொடர்ந்து அருகிலிருந்த சிறிய குன்றுக்கு நம்மை அழைத்துச் சென்றார். சுமார் 50 அடி உயரமுள்ள அந்தக் குன்றின் மேலிருந்து பார்க்கும் போது, அந்தப் பண்ணை முழுவதும் இரம்மியமாகத் தெரிந்தது. “இந்தக் குன்றை இந்தச் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களில் இருந்த கற்களைக் கொண்டு அமைத்துள்ளோம்’’ என்றவர், அங்கிருந்து மாதுளை மரங்களைக் காட்டினார். அந்த மரங்கள் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒரே நேர்கோட்டில் தெளிவாகத் தெரிந்தன. “இது, நடவு முறையில் நான் கையாண்ட விதம்’’ என்றவர், “தீவனத்துக்காக, சூப்பர் நேப்பியர் புல், கோ 5 புல், வேலிமசால் முதலியவற்றையும் பயிர் செய்துள்ளோம்’’ என்றார்.
மாபெரும் நீர்த்தொட்டி
அதையடுத்து அருகிலிருந்த பெரிய நீர்த்தொட்டிக்குச் சென்றோம். நீச்சல் குளம் போல் நீர் நிரம்பியிருந்தது. “இந்தத் தொட்டி 140 அடி நீளம், 70 அடி அகலம், 12 அடி ஆழத்தில் உள்ளது. இதில் சுமார் 35 இலட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைக்கலாம். ஒருமுறை இதில் நீரை நிரப்பினால் இந்தப் பண்ணைக்கு ஐந்தாறு மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். இந்தப் பகுதி மிகவும் வறண்டதாக இருப்பதால், சுமார் 3 கி.மீ. தொலைவில் இருந்து நீரைக் கொண்டு வந்து இதில் நிரப்புகிறோம்’’ என்ற நவீன், நிலத்தைச் சுற்றிலும் சுமார் ஒரு அடி கனத்தில் உள்ள வரப்பைக் காட்டி, “மழைநீர் எங்கள் நிலத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காக இந்த வரப்பை அமைத்துள்ளோம். இந்த நீர் நிலத்தடி நீராக மாறுவதுடன், இங்குள்ள தாவரங்களுக்கும் உதவும்’’ என்றார்.
தேனீக்களின் சிறப்பு
அதைத் தொடர்ந்து அருகிலிருந்த தேன் பண்ணைக்குச் சென்றோம். அங்குத் தேன் தட்டிகளில் தேனீக்கள் தேனைக் கொண்டு வந்து சேகரித்து வைப்பதை நமக்குக் காட்டினார். “உணவு உற்பத்தியில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த உலகத்தில் தேனீக்கள் அழிந்து விடுமானால், உணவு உற்பத்தியே நிலைகுலைந்து விடும். எனவே, தேனீக்களைக் காப்பதும் நமது முக்கியக் கடமையாகும். அந்த வகையில், இங்குள்ள பல்வேறு தாவரங்கள் மூலம் இந்தத் தேனீக்கள் இங்கே வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம்’’ என்றார்.
பயிற்சிக்கு வரும் வெளிநாட்டினர்
அதைத் தொடர்ந்து மீண்டும் மர வீட்டுக்கு வந்தோம். அங்கே தயாராக இருந்த சிற்றுண்டியைச் சுவைத்தபடியே பேச்சைத் தொடர்ந்தார் நவீன். அப்போது அங்கு வந்த ஜெர்மனி, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், அங்கிருந்த டிராக்டரை எடுத்து ஓட்டிக் கொண்டிருந்தனர்.
இதைப்பற்றிக் கூற வந்த நவீன், “கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் வந்து எங்கள் பண்ணையைப் பார்வையிட்டுப் பயிற்சியும் பெற்றுச் செல்கின்றனர். மேலும் வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் இங்கேயே தங்கியிருந்து பயிற்சிகளைப் பெற்றுச் செல்கின்றனர். இதுவரை சுமார் நாற்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே தங்கியிருந்து பயிற்சி எடுத்துள்ளனர்’’ என்றவர், வெளியிலிருந்து வருவோர் தங்குவதற்கான அறைகளைக் காட்டினார்.
அப்போது அங்கு ஓர் அறையில் தங்கியிருந்த கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த கணேஷ் நம்மிடம், “நான் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் பண்ணையைச் சுற்றிப் பார்க்க வந்தேன். அப்போது இந்தச் சூழல் மற்றும் நவீனின் பணிகள் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், என் மனைவி உஷா, மகன் ஸ்ரீதா ஆகியோருடன் மீண்டும் இங்கே வந்து இங்கேயே தங்கியிருந்து ஓராண்டுக்கும் மேலாக பயிற்சிப் பெற்று வருகிறேன்’’ என்றார்.
தொண்டு நிறுவனம்
அப்போது, “கடந்த 2011 ஆம் ஆண்டு குளோபல் நேச்சர் பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம், ஆடு மாடு வளர்ப்பு, மண்வளப் பாதுகாப்பு, மழைநீர்ச் சேமிப்பு, இயற்கை விவசாயம், கூட்டுப் பண்ணையம், செல்லப் பிராணிகள் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், வண்ணமீன் வளர்ப்பு, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் என, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த அனைத்துப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். இந்தப் பத்து ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட பயிற்சிகளை அளித்துள்ளோம்’’ என்ற நவீன், தான் பெற்றுள்ள விருதுகளைக் காட்டி விளக்கினார்.
கிடைத்த விருதுகள்
“கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கர்மவீரர் காமராஜர் விருதை எனக்கு வழங்கியது. 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிறந்த சூழலியலாளர் விருது கிடைத்தது. 2015 ஆம் ஆண்டு சமூக சேவகர் மேதா பட்கரிடமிருந்து சிறந்த சமூக சேவைக்கான மேதா பட்கர் விருதைப் பெற்றேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலிருந்து சிறந்த வழிகாட்டிக்கான விருது, தினமலர் வழங்கிய இளம் விவசாயச் சாதனையாளர் விருது என, பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
மேலும், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில், காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஆபத்தில் சிக்கிய மான், மயில், பாம்புகள் போன்ற வனவிலங்குகளை மீட்கும் பணியையும் செய்து வருகிறேன். இதுவரை 700 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டுள்ளேன்.
பெருமை சேர்க்கும் மனைவி
மேலும், சிட்டுக்குருவிப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி, குருவிகள் தங்குவதற்கான கூடுகளைச் செய்து கொடுத்து வருகிறோம். என் மனைவி புவனேஸ்வரியும் என்னுடன் இணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், மாணவர் அறிவியல் மன்றம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பற்றிய பயிற்சிகளை அளித்து வருகிறார். மேலும் அந்த மாணவர்களை அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்ள வைத்து நான்கு முறை மாநில அளவில் முதல் பரிசையும் பெற்றுத் தந்துள்ளார்’’ என்றார்.
இப்படி, தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் என, மாணவர்கள், விவசாயிகள், தன்னார்வலர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகளை அளித்து, சாதனை புரிந்து வரும் 37 வயது நவீனைப் பாராட்டி, மேலும் இவரின் பணிகள் தொடர வேண்டுமென வாழ்த்தி விடை பெற்றோம்.
மு.உமாபதி
படங்கள்: முசிறி மோகன்