பச்சை பூமி சார்பில், நாமக்கல்லில் இரண்டாம் முறையாக, 2023 மே மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இது, பச்சை பூமி நடத்திய பத்தாவது விவசாயக் கண்காட்சியாகும்.
+ மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த இந்தக் கண்காட்சியில், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கத் தேவைப்படும் நாட்டு விதைகள், நவீன விதைகள் நிறைந்த அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
+ மண்ணையும் மக்களையும் காக்கும் வகையில், இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்கான, இயற்கை உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
+ டிராக்டர் நிறுவனங்கள், ரொட்டோவேட்டர் போன்ற உழவுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் அங்கம் வகித்தன.
+ சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில், சூரிய மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன.
+ விவசாய வேலைகளுக்குத் தேவையான அரிவாள், மண்வெட்டி, கொத்து உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.
+ பயிர்களைக் காக்க உதவும், நவீனச் சூரிய மின்வேலி மற்றும் கம்பிவேலி தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகள் இடம் பிடித்திருந்தன.
+ எளிய வகையில் உடல் நலம் காக்கும் மூலிகை மருத்துவப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.
+ தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, பலா, மாதுளை போன்ற பழமரக் கன்றுகள், தேக்கு, சந்தனம், மகாகனி போன்ற பணமதிப்புள்ள மரக்கன்றுகள் அடங்கிய நாற்றுப் பண்ணைகளின் அரங்குகள் அங்கம் வகித்தன. ஈஷா அமைப்பின் சார்பில் 3 ரூபாய் விலையில் கன்றுகள் வழங்கப்பட்டன.
+ அரசு நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
+ இந்தக் கண்காட்சியில் சிற்றுண்டி மற்றும் உணவு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
+ மொத்தத்தில், ஏராளமான அரங்குகளுடன், எந்தக் குறையும் இல்லாமல், கண்காட்சியில் பங்கேற்கும் அனைவரும் மனநிறைவைப் பெறும் வகையில், இந்தக் கண்காட்சி சிறப்பாக அமைந்திருந்தது.
+ விவசாயிகள், பொது மக்கள் என, பல்லாயிரம் பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை இலவசமாகப் பார்த்துப் பயனடைந்தனர்.
+ இந்தக் கண்காட்சியை, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பார்வையிட்டுச் சிறப்பித்தார்.
பச்சை பூமி