கட்டுரை வெளியான இதழ்: 2022 செப்டம்பர்
கோழிகளின் காலில் ஏற்படும் நோய்த் தொற்றினால் ஆணிக்கால் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கோழிகளின் காலின் அடிப்பகுதி வீங்கிச் சிவந்திருக்கும். சில சமயம் கால்கள் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை தரவில்லை எனில், மற்ற தசை மற்றும் எலும்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.
நோய்க் காரணிகள்
காலின் அடித்தோலில் ஏற்படும் சிறு காயத்தின் வழியே நுண்ணுயிரிகள் புகுந்து நோயை உண்டாக்கும். குறிப்பாக, ஸ்டைபைலோ காக்கஸ் என்னும் நுண்ணுயிரி புகுவதால், காலில் சீழ் உண்டாகி, நாள்பட்ட பிறகு ஆணிக்கால் நோயாக மாறும். அதிக எடையுள்ள கோழிகள், ஈரப்பதம் மிகுந்த சகதித் தரையில் நடக்கும் போது அல்லது மேலிருந்து குதிக்கும் போது, காலின் அடியில் சிறு காயம் அல்லது தோலில் வெடிப்பு ஏற்படின், ஸ்டைபைலோ காக்கஸ் நுண்ணுயிரி உள்ளே புகுந்து விடும்.
மேலும், பண்ணையின் ஆழ்கூளம் சரியில்லை என்றாலும், காலில் வெடிப்பு உண்டாகி ஆணிக்கால் ஏற்படும். நீண்டு வளர்ந்த கால் நகங்கள் மூலம் காலில் காயம் ஏற்பட்டாலும் ஆணிக்கால் உருவாகலாம். மேலும், தீவனத்தில் உயிர்ச்சத்து ஏ குறைந்து, கால் தோலின் பாதுகாப்புத் தன்மை குறைந்தாலும், ஆணிக்கால் ஏற்படும்.
நோய் அறிகுறிகள்
காலின் அடிப்பகுதி நிறமாறி இருக்கும். அதாவது, காலின் அடிப்பகுதித் தோல், கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உலர்ந்த நிலையில் இருக்கும். கால் வீங்கி இருக்கும். தாங்கித் தாங்கி நடக்கும். அல்லது நடக்க முடியாமல் ஒரே இடத்தில் இருக்கும். நடத்தையில் மாற்றம் தெரியும்.
ஆணிக்கால் நிலைகள்
கோழிகளைத் தாக்கும் ஆணிக்கால் நோயை, அதன் தன்மையைப் பொறுத்து ஐந்து நிலைகளாகப் பிரிக்கலாம். அதாவது, முதல் நிலையில், சிறியளவில், காலின் அடிப்பாகத்தில் வெளிரிய தோல் தென்படும். இரண்டாம் நிலையில், வீக்கம் ஏதுமின்றி நோய்த்தொற்று இருக்கும். மூன்றாம் நிலையில், சீழ்ப் பிடித்துக் காலில் வீக்கம் ஏற்படும்.
நான்காம் நிலையில், நோய்த் தொற்றானது நாள்பட்ட காயமாக, காலின் உள் தசைக்கும் பரவும். அப்போது, கோழிகளில் மூட்டுவலி ஏற்படும். இதனால், தாங்கித் தாங்கி நடக்கும். ஐந்தாம் நிலையில், காலானது வீங்கியும், அதைச் சுற்றியுள்ள தசை அழுகியும் இருக்கும்.
சிகிச்சை
நோயுற்ற கோழிகளைத் தனிமைப்படுத்தி, நோய் குணமாகும் வரை சிகிச்சை அளிக்க வேண்டும். தகுந்த படுக்கையை ஏற்படுத்தித் தர வேண்டும். வளர்ப்பிடத்தை மாற்றினாலே குறைந்தளவு ஆணிக்கால் நோய்த் தொற்றைக் குணப்படுத்த முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி, எதிர் உயிரி மருந்தை அளிக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் மெக்னீசியம் சல்பேட்டைக் கலந்து, கோழிகளின் கால்களை ஊற வைக்கலாம். அதற்குப் பிறகு, வீக்கம் இளகியதும் உள்ளேயுள்ள சீழை அகற்றி விட்டு, 2% குளோர்ஹெக்சிடின் அல்லது பொவிடோன் அயோடின் கிருமிநாசினியால், சீழுள்ள பகுதியைத் துடைத்து விடலாம். சிறிய பஞ்சு உருண்டையை, ஆணிக்கால் பாதத்தில் வைத்துக் கட்டுப் போட்டு, வீக்கத்தையும், தாங்கித் தாங்கி நடப்பதையும் குறைக்கலாம்.
ஆணிக்கால் வராமல் தடுத்தல்
முதலில் ஆணிக்கால் வந்த கோழிகளைத் தனிமைப்படுத்த வேண்டும். கோழிகள் வளரும் இடத்தில் கிருமிநாசினியைத் தெளிக்க வேண்டும். ஆழ்கூளம் சுத்தமாக இருக்க வேண்டும். பண்ணையின் தரைப்பகுதி அல்லது பறவைகள் பறந்து அமரும் இடம், தரையிலிருந்து உயர்வாக இருத்தல் வேண்டும்.
மரு.மா.வெங்கடேசன்,
முனைவர் ஏ.வெங்கடேஷ் குமார், முனைவர் க.கரு.பொன்னுசாமி,
கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி, சேலம்-636 112.