எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சாதனை
திருச்சி முசிறியில் இயங்கி வரும் எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மரவள்ளித் தழையில் இருந்து, மக்களுக்குப் பயன்படும் உணவுப் பொருள்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளனர். இதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். உலகத்தில் இதுவரை இந்த மரவள்ளிக் கிழங்கின் இலையில் இருந்து எவ்வித உணவுப் பொருளும் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்து கொள்ள எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவரான இளங்கோவன் அவர்களிடம் பேசினோம். நமது கல்லூரிக்கு வாருங்களேன் என்றார். அவரது அழைப்பை ஏற்றுத் திருச்சி முசிறியில் உள்ள எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரிக்குச் சென்றோம். எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான முனைவர் அ.குமரவேல் நம்மை வரவேற்றார். அவரிடம் பேசினோம்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், இந்த மரவள்ளிக் கிழங்கைப் பற்றிய பாடத்தை மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்த போது, மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தனியார் கல்லூரி ஒன்றிலிருந்து, புதுமைக் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில், கல்லூரி மாணவர்களுக்காக நடத்தும் போட்டியைப் பற்றிய அறிவிப்பு வந்தது.
அப்போது, மரவள்ளிக் கிழங்கிலிருந்து பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்பட்டு வெளிவரும் நிலையில், மரவள்ளிக் கிழங்கின் இலையிலிருந்து உலகில் இதுவரை எந்தவொரு பொருளும் தயாரிக்கப்படவில்லை என்பதை அறிந்தேன். மேலும், மரவள்ளி இலையில் நமது உடலுக்கு நன்மை தரும் சத்துகள் பல இருக்கும் நிலையில், இந்த இலையையே ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு, புதிதாக என்ன கிடைக்குமென்று பார்க்கலாமே என்று முடிவு செய்து, போட்டியில் கலந்து கொள்ளவும் தீர்மானித்தேன்.
மாணவர்களின் களப் படிப்பு மற்றும் பயிற்சிக்காக எங்கள் கல்லூரியிலேயே சில ஏக்கர் நிலத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கண்டுபிடிப்பான YTP-2 என்னும் புதிய மரவள்ளிக் கிழங்கு வகையைப் பயிர் செய்திருந்ததும் எங்களுக்கு மிகவும் வசதியாகிப் போனது.
இதைத் தொடர்ந்து, மூன்றாமாண்டு இளங்கலை வேளாண் மாணவர்களான அருண், பிரனேஷ், சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் சேர்த்துக் கொண்டு, அடுத்த கட்ட முயற்சியில் இறங்கினேன் என்ற அவர், இந்தக் கண்டுபிடிப்பில் என்னுடன் இணைந்து பணியாற்றிய மாணவர்கள் களப் பயிற்சியில் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பேசலாமே என்று கூறி, கல்லூரிக்குப் பின்னால் இருந்த, மரவள்ளி சாகுபடிப் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
அங்கே மாணவர்களுக்குப் பேராசிரியர்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். மாணவர்களும் ஆர்வத்துடன் மரவள்ளிச் செடிகளுக்கு இடையில் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். நாம் அங்கே சென்று விவரத்தைக் கூறியதும், மரவள்ளித் தழை ஆய்வில் பங்கேற்ற அருண், பிரனேஷ், சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்கள் நம்முடன் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய பேராசிரியர் குமரவேல், பலகட்ட யோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, மரவள்ளி இலையிலிருந்து சூப், குல்கந்து, மரவள்ளித் தழை டீ தூள் என மூன்று பொருள்களைத் தயாரிக்கலாம் என்னும் முடிவுக்கு வந்தோம்.
அதன் முதல் கட்டமாக, எங்கள் கல்லூரி மரவள்ளி இலைகளைப் பறித்து உலர்த்தி, அதனுடன் கறிவேப்பிலை, மிளகு, பூண்டு, கடுகு, மிளகாய் ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் பொடியாக்கி மரவள்ளித் தழை சூப் பொடியைத் தயாரித்தோம். அதாவது, அரை லிட்டர் நீரில் இரண்டு தேக்கரண்டி சூப் பொடியைக் கலந்து சுமார் 20 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்தோம். பிறகு, கொஞ்சம் ஆற வைத்து வடிகட்டி அருந்திய போது, மரவள்ளித் தழையிலுள்ள சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கி, மிகவும் சுவையாக இருந்தது.
எங்களின் முதல் முயற்சியில் கிடைத்த இந்த வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, மரவள்ளி இலையிலிருந்து குல்கந்து தயார் செய்யும் முயற்சியில் இறங்கினோம். பொதுவாக, எல்லாரும் ரோஜாப்பூவின் இதழ்களைக் கொண்டு தான் குல்கந்து தயார் செய்வார்கள். ஆனால், நாங்கள் மரவள்ளி இலைகளைப் பறித்து, நீராவியில் வேக வைத்து, நிழலில் உலர்த்தி, அதனுடன் தேனைக் கலந்து சுமார் 6 நாட்கள் ஊற வைத்துச் சாப்பிட்டுப் பார்த்த போது மிகவும் சுவையாக இருந்தது. இப்படி, இரண்டாம் முயற்சியிலும் வெற்றி பெற்றோம்.
அதைத் தொடர்ந்து எங்களின் மூன்றாம் முயற்சியாக, மரவள்ளி இலையிலிருந்து தேநீர்த் தூள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதற்கு மரவள்ளி இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி, அதனுடன் தேநீர்ச் சுவைக்காக, பச்சைத் தேயிலையைச் சம அளவு சேர்த்துத் தூளாக்கி, தேநீர்த் தூளைத் தயாரித்தோம். அதைச் சிறு சிறு பைகளில் இட்டு, பல்வேறு வகைகளில் தேநீர்த் தூளாக மேலும் மதிப்புக் கூட்டினோம்.
இப்படித் தயாரித்த இந்தப் பொருள்களைத் திருச்சியில் உள்ள உணவு ஆய்வகத்துக்கு அனுப்பிச் சோதித்துப் பார்த்தோம். சோதனை முடிவுகள் சரியாக இருப்பதாக வந்ததும், இந்தப் பொருள்களை எல்லாம், அந்தத் தனியார் கல்லூரி நடத்திய புதுமைக் கண்டுபிடிப்புகள் போட்டிக்கு எடுத்துச் சென்றோம்.
அந்தப் போட்டிக்கு வந்திருந்த நடுவர்கள் மற்றும் விருந்தினர்கள் எனப் பலர், மரவள்ளி இலையிலிருந்து தயாரிக்கப்பட்ட சூப் நன்றாக இருப்பதாகக் கூற, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் இராஜகோபால் சுங்கரா ஐ.ஏ.எஸ். அவர்களும் அருந்திப் பார்த்து நன்றாக இருப்பதாகக் கூறினார். முடிவில் அந்தப் போட்டியில், நாங்கள் இரண்டாம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 15,000 ரூபாய் ரொக்கமும் சான்றிதழும் பெற்றோம் என்றார்.
அப்போது அவரது செல்பேசிக்கு வந்த அழைப்பு, கல்லூரியின் துணைத் தலைவர் இ.பிரவீன்குமார் கல்லூரிக்கு வந்திருப்பதாகவும், நம்மை அழைப்பதாகவும் கூற, மீண்டும் கல்லூரி அலுவலகத்துக்குச் சென்று பார்வையாளர்கள் அறையில் அமர்ந்தோம். அப்போது மீண்டும் நம்மிடம் தொடர்ந்தார் பேராசிரியர் குமரவேல்.
எங்களின் இந்த வெற்றியும், பாராட்டும் எங்கள் கல்லூரியின் தலைவர் திரு.இளங்கோவன் மற்றும் துணைத் தலைவரான திரு.பிரவீன்குமார் அவர்களையே சேரும். ஏனென்றால், இந்தக் கல்லூரியைத் தொடங்கிய கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இதே கல்லூரியில் தான் பணிபுரிந்து வருகிறேன். இன்னும் சொல்லப் போனால் இந்தக் கல்லூரி தொடங்கிய போது முதன் முதலாக நான் தான் பேராசிரியராக நியமிக்கப்பட்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை கல்லூரிக் கட்டமைப்பு முதல், மாணவர்களின் வசதிகள் வரை, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து வருவதோடு, மிகுந்த ஆர்வத்துடன் எங்களை ஊக்குவித்தும் வருகின்றனர். பரிசு பெற்ற எங்களை அழைத்து வெகுவாகப் பாராட்டினர். மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், அதற்குக் கல்லூரி நிர்வாகம் எல்லா வகையான உதவிகளையும் செய்யும் என்றும் கூறி, தற்போது அந்தப் பொருள்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகாரம் பெறவும் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றார்.
அதைத் தொடர்ந்து அவரிடம், மரவள்ளி இலைகளை மதிப்புக்கூட்டி மூன்று பொருள்களைத் தயார் செய்துள்ளீர்கள். இந்த மரவள்ளி இலைகளால் அப்படி எத்தனை நன்மைகள் தான் கிடைக்கின்றன என்று கேட்டோம். அதற்குப் பதிலளித்த பேராசிரியர் குமரவேல், மரவள்ளித் தழை, நமது இரத்தத்திலுள்ள ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது, கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, இரத்தச் சோகையைக் கட்டுப்படுத்துகிறது, வாத நோய் வராமல் தடுக்கிறது, முடி உதிர்வு மற்றும் தோல் நோய்களைத் தடுக்கிறது, சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது என்று சொல்லி முடித்தார்.
அப்போது நம்மை உள்ளே அழைத்த எம்.ஐ.டி. கல்லூரியின் துணைத் தலைவர் இ.பிரவீன்குமாரிடம் பேசினோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார். நீங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எங்கள் கல்லூரியைப் பற்றி, பச்சை பூமி மாத இதழில் சிறப்பாக எழுதி இருந்தீர்கள். அப்போது அந்த இதழுக்காக நான் பேசிய தரமான வல்லுநர்களை உருவாக்கும் வேளாண்மைக் கல்லூரி என்பதையே தலைப்பாக வைத்தும் இதழை வெளியிட்டு இருந்தீர்கள்.
அதன்படி எங்கள் கல்லூரியில் தரமான வல்லுநர்களையே உருவாக்கி வருகிறோம் என்பதற்குச் சாட்சியாக எங்கள் கல்லூரி மாணவர்கள் சாதித்துள்ளனர். மாணவர்களின் கல்வி விஷயத்தில், பேராசிரியர்களும், மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்பதை விட நிறையவே செய்து வருகிறோம். இன்னும் மேலும் மேலும் தொடர்ந்து எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள், எங்கள் கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்றார்.
அவருக்கும், கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இணைப் பேராசிரியர் குமரவேல் மற்றும் அருண், பிரனேஷ், சந்தோஷ்குமார் ஆகிய மாணவர்களுக்கும் வாழ்த்துகளைக் கூறி விடை பெற்றோம்.
மு.உமாபதி
படங்கள் : க.கெளதம்