கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
தாதுகள் அவற்றின் கனிம இயல்புகளால் வகைப்படுத்தப்பட்ட சேர்மங்களில் தனித்துவமான குழுவைக் கொண்டுள்ளன. எலும்பு, செதில், பற்கள், புறக்கூடு உருவாக்கம் மற்றும் உடலியக்கத்தில் பயன்படும் இவை, மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு மிகக் குறைவாகத் தேவைப்படுகின்றன. மீன்கள் தமக்குத் தேவையான தாதுப்பொருள்களில் சிலவற்றை நீரிலிருந்து செவுள்கள் மூலம் உறிஞ்சிக் கொள்கின்றன. நீரின் வெப்பநிலை, அமில காரத்தன்மை, நீரிலுள்ள தாதுகளின் அளவைப் பொறுத்து இவற்றின் உறிஞ்சும் தன்மை வேறுபடும்.
பெரிய தாதுகள் மற்றும் நுண் தாதுகள் என இருவகைப்படும். கால்சியம், குளோரைடு, பாஸ்பரஸ், மக்னீசியம், சல்ஃபர், சோடியம், பொட்டாசியம் ஆகியன பெருந்தாதுகள். ஜிங்க், மாங்கனீசு, நிக்கல், காப்பர், இரும்பு, கோபால்ட், அயோடின், வனேடியம், மாலிப்டினம், குரோமியம், ஆர்செனிக், ப்ளூரைன், டின், சிலிக்கான், செலேனியம் ஆகியன நுண்தாதுகள். இவற்றில் முக்கியத் தாதுகளைப் பற்றிக் காண்போம்.
கால்சியம்
மீன்களின் புறக்கூடு, செதில்கள், பற்கள் உருவாக்கம், இரத்தம் உறைதல், தசைகளின் இயக்கம், நரம்புகளில் செய்திப் பரிமாற்றம், சவ்வூடு பரவல் போன்ற உடலியல் செயல்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீனுணவில் 0.5%, இறால் உணவில் 0.5-1.25% தேவை.
பாஸ்பரஸ்
மீன்களின் எலும்பு, குருத்தெலும்பு, இறால்களின் புறக்கூடு உருவாக்கத்தில் முக்கிய தாதுவாகும். மேலும், பாஸ்ப்போ புரதங்கள், நியூக்ளிக் அமிலம், பாஸ்ப்போலிப்பிடுகள், ஹெக்சோஸ் பாஸ்பேட்ஸ் ஆகியவற்றின் அவசிய மூலக்கூறாகும். செல் வளர் சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் போன்ற செயல்களில் முக்கிய உயிரியல் பொருளாக உள்ளது. மீன்களின் உடல் திரவத்தின் அமில காரத் தொகுப்புச் சமநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மீனுக்கு 0.7%, இறாலுக்கு 1-2% தேவை.
மெக்னீசியம்
நொதிகளின் செயலை ஊக்குவித்தல், தசை மற்றும் நரம்புச் சுருக்கத்தைத் தூண்டுதல், கொழுப்பு, புரதம், கார்போஹைட்டின் வளர் சிதை மாற்றச் செயல்களுக்குத் தேவை. இது மீனுக்கு 0.05%, இறாலுக்கு 0.1-0.3% தேவை.
சோடியம், குளோரைடு, பொட்டாசியம்
மீன்களின் உடல் திரவம் மற்றும் உடலின் மென் திசுக்களில் இருக்கும். உடலில் சவ்வூடு அழுத்தம் மற்றும் அமில காரத்தின் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீனுக்கு 0.1-0.3% சோடியம், 0.1-0.3% பொட்டாசியம், 0.1-0.5% குளோரைடு தேவை. இறாலுக்கு 0.2-0.6% சோடியம், 0.7-0.9 பொட்டாசியம் தேவை.
சல்ஃபர்
இது சிஸ்டைன் மற்றும் மீத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்களில் அவசிய மூலக்கூறாகும். அதைப்போல் நறுமணச் சேர்மங்களின் நச்சு நீக்கலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீனுக்கு 0.3-0.5% தேவை.
இரும்பு
ஹீமோகுளோபின், மையோகுளோபின், சைட்டோகுரோம்களை உருவாக்கும் நொதிகளின் இயக்கம் மற்றும் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீனுக்கு 50-100 மி.கி./கி.கி., இறாலுக்கு 70-300 மி.கி./கி.கி. தேவை.
ஜிங்க்
கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், ஆர்.என்.ஏ மற்றும் புரத உருவாக்கம், காயங்களை ஆற்றுதல், வைரஸ்களைத் தடுத்தல், நோயெதிர்ப்பை அதிகரித்தல் போன்றவற்றில் இதற்கு முக்கியப் பங்குண்டு. இது மீனுக்கு 30-100 மி.கி./கி.கி., இறாலுக்கு 90-110 மி.கி./கி.கி. தேவை.
மாங்கனீசு
நொதிகளைத் தூண்ட, எலும்பு உருவாக, இரத்தச் சிவப்பணுக்களைப் புதுப்பிக்க, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கச் சுழற்சிக்கு, எபிதீலியல் திசுக்களைச் சரிசெய்ய, அமினோ அமில வளர்சிதை மாற்றம் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றம் ஆக இது உதவுகிறது. இது மீனுக்கு 20-50 மி.கி./கி.கி., இறாலுக்கு 20-45 மி.கி./கி.கி. தேவை.
கோபால்ட்
இரத்தச் சிவப்பணுக்கள், வைட்டமின் பி12 உருவாக, நரம்புத் திசுக்களைப் பராமரிக்க, பல்வேறு நொதிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்க இது உதவுகிறது. இது மீனுக்கு 5-10 மி.கி./கி.கி., இறாலுக்கு 5-10 மி.கி./கி.கி. தேவை.
காப்பர்
குருதியாக்கம், இரும்பு வளர்சிதை மாற்றம், மெலெனின் மற்றும் தோல்நிறமி உருவாக்கம், எலும்பு மற்றும் நரம்பு நார் உருவாக்கத்தில் பயன்படுகிறது. இது மீனுக்கு 1000-4000 மி.கி./கி.கி., இறாலுக்கு 10-35 மி.கி./கி.கி. தேவை.
அயோடின்
இது, தைராய்டு சுரப்பிகளின் செயல்களில் முக்கியக்கூறாக உள்ளது. ஒட்டுமொத்த உடலியக்க வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம், வளர்ச்சி, குருதியாக்கம் மற்றும் சுழற்சி, நரம்புத்தசை இயக்கம், வெப்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மீனுக்கு 100-300 மி.கி./கி.கி., இறாலுக்கு 30 மி.கி./கி.கி. தேவை.
செலினியம்
மீன்கள் அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. பெர்ராக்சைடுகளின் விளைவுகளிலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈயுடன் சேர்ந்து, உயிரியல் எதிர் ஆக்ஸிஜனேற்றியாக இயங்கி, செல் மற்றும் துணைச் செல்களில் உள்ள பல்நிறைவுறா பாஸ்ப்போ புரதங்களைப் பாதுகாக்கிறது. பல்வேறு நொதிகளின் இணைக்காரணியாகச் செயல்படுகிறது. இது மீனுக்கு 0.1-0.2 மி.கி./கி.கி. தேவை.
சு.பாரதி,
டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி, பொன்னேரி-601204.
செரில் ஆண்டனி, மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி-628008.
ர.சோமு சுந்தரலிங்கம், வளங்குன்றா மீன்வளர்ப்பு நிலையம், பாரூர்.