சத்துமிகு சிறுதானியங்கள்!

சிறுதானியங்கள் HP 1

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

மது நாட்டில் சத்துப் பற்றாக்குறை என்பது சவாலாகவே உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அரிசி, கோதுமை போன்ற முக்கியத் தானியங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மக்களின் தேவையை நிறைவு செய்ய, மாற்றுப்பயிர் சாகுபடி அவசியமாகும்.

அதிக உற்பத்திக்காக இரசாயன உரம், பூச்சி மருந்து நோய் மருந்து மற்றும் களைக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்தி, நமது பாரம்பரிய விவசாயம் அழிக்கப்பட்டதால், விளைநிலங்கள் அனைத்தும் நஞ்சாகி விட்டன. அதனால், அந்த மண்ணில் விளையும் பொருள்களும் நஞ்சாக உள்ளன. இதுவே, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமாகும்.

தற்போது சிறுவயதிலேயே நீரிழிவு, புற்றுநோய், இதயநோய் போன்றவை அதிகரிக்கக் காரணம், நமது பாரம்பரிய உணவு முறையில் இருந்து நாம் மாறிவிட்டது தான். இயற்கையாக விளைந்த தானியங்களைச் சமைத்துச் சாப்பிட்டால், இத்தகைய நோய்களில் இருந்து நமது உடலைப் பாதுகாக்கலாம்.

பருவநிலை மாற்றங்களால் மழை குறைந்து வரும் நிலையில், குறைந்தளவு நீரைக் கொண்டு சிறுதானியங்களைப் பயிரிடலாம். நெல், கோதுமை, பார்லி, மக்காச்சோளம், சோளம், கம்பு ஆகியன தானிய வகையில் அடங்கும். கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு ஆகிய ஆறும் சிறுதானியங்கள் எனப்படும்.

இவை, வறண்ட பகுதிகளில் மானாவாரியாகவும் மற்றும் மலைப்பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றன. நீர்வளமற்ற புன்செய் பகுதியில் அதிகமாக விளைவதால், இவை புன்செய் பயிர்கள் எனப்படுகின்றன. மேலும், உரம், பூச்சி மருந்து எதுவுமின்றி சாகுபடி செய்யப்படுகின்றன.

ஒருமுறை நெல் சாகுபடிக்குப் பயன்படும் நீரை, இரண்டு முறை சிறுதானியச் சாகுபடிக்குப் பயன்படுத்தலாம். வளர்ந்து வரும் நாகரிகத்தால், விரைவு உணவக உணவை தேடிச் செல்லும் நிலை அதிகமாகி வருகிறது. இதனால் மக்களுக்குக் கிடைத்த பரிசு, உடல்நலக் குறைவுதான். பெரும்பாலான மக்கள் நீரிழிவால் அவதிப்படுகின்றனர்.

சிறுதானிய உணவுகள், உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதயநோய் வராமல் பாதுகாக்கும். இவை, காலங்காலமாகத் தமிழ்நாட்டில் விளைகின்றன. நாகரிக வளர்ச்சியால், நகர்ப்புற மக்களிடம் இவற்றின் பயன்பாடு குறைந்திருந்தாலும், கிராமங்களில் அன்றாட உணவில் இடம் பெறுகின்றன. அரிசி, கோதுமையை விடச் சத்துகள் நிறைந்தவை சிறுதானியங்கள் தான் என்பது அறிவியல் உண்மையாகும்.

கேழ்வரகில் பாலைக் காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரசியைக் காட்டிலும் பத்து மடங்கு கால்சியமும் உள்ளது. கேழ்வரகைத் தினமும் உண்டு வந்தால், உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகும். பல் மற்றும் எலும்புகளில் ஏற்படும் பாதிப்பபுகள் குணமாகும். கேழ்வரகுடன் பால், சர்க்கரையைச் சேர்த்துக் கூழாகக் காய்ச்சிக் கொடுத்து வந்தால் குழந்தைகள் நன்கு வளர்வார்கள்.

சாமையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தச்சோகையைத் தடுக்கும். சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளன. சத்துகள் நிறைந்தது தினைமாவு. நன்கு பசியெடுக்கும். இதயத்தை வலுவாக்கும்.

அதிக வறட்சியைத் தாங்கி வளரும் வரகில், அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இதில் மாவுச்சத்துக் குறைவாக இருப்பது உடல் நலத்துக்கு உகந்தது. குதிரைவாலி சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கலை தடுக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், செரிக்கும் போது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் மெதுவாக வெளியாகவும் இது உதவுகிறது.

சிறுதானியங்களைத் தினமும் உண்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இரத்தழுத்தம் சீராகி இதயம் நோயின்றி இயங்கும். இவற்றிலுள்ள நார்ச்சத்து உணவு நன்கு செரிக்க உதவும். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும்  சத்துக்குறை உள்ளோர்க்கு மிகவும் ஏற்றவை. சிறுதானியங்களை அரிசியாக அல்லது மதிப்புக்கூட்டிய பொருளாக, தின்பண்டங்களாக மாற்றுவதன் மூலம் நல்ல இலாபம் அடையலாம்.

சிறுதானியப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறைவு. மானாவாரி மற்றும் வறண்ட பகுதிகளில் பயிரிட ஏற்றவை. பயிர்களில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த நீரில் விளையும் தீவனப் பயிராகவும் உள்ளன.

மானாவாரியில் பயிரிட ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றை விதைத்தால் சிறந்த மகசூல் கிடைக்கும். மேலும், இதிலிருந்தே அடுத்த சாகுபடிக்கான விதைகளையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம், 04175 298001.


சிறுதானியங்கள் ANANDHI 1 e1629362269234

முனைவர் கி.ஆனந்தி,

முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் ப.பரசுராமன்,

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல் திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading