கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018
உலக அளவிலான பாலுற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் 16 ஆம் இடத்தில் இருந்தோம். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் பாரத ரத்னா டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் கடுமையாக உழைத்தோம். அதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளோம். 2011-12 ஆம் ஆண்டில் 130 மெ.டன் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்தோம். 2020 ஆம் ஆண்டில் 200 மெ.டன் பாலை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகளவில் 17% பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் கூட நமது பால் நுகர்வு ஆளுக்கு 300 மில்லி மட்டுமே. ஒருவர் ஒரு நாளைக்கு 500 மில்லி பாலைப் பருக வேண்டும் என்பது அகில இந்திய மருத்துவக் குழுவின் பரிந்துரையாகும்.
உலகப் பாலுற்பத்தியில் இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்காவில், ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் என்னுமளவில் பாலைப் பருகி நலமாக வாழ்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தான் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஜூன் முதல் நாளை உலகப் பால் நாளாகக் கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பால் நாள் கொண்டாடப்படுகிறது.
பால் அருமையான இயற்கை உணவாகும். இதில், லாக்டோஸ், புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள் மிகுதியாக உள்ளன. அதர்வண வேதத்தின் ஒரு பகுதியான ஆயுர்வேத மருத்துவம், பாலை அமிர்தம் என்று கூறுகிறது. இந்திய மருத்துவத்தை அறிமுகப்படுத்திய தன்வந்திரி பகவான், பால் மனிதர்களுக்குத் தேவையான உணவு என்று கூறியுள்ளார். பசுவின் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
உலகப் பால் நாள்
1878 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி, முதன் முதலாகக் கண்ணாடிக் குடுவையில் வைத்துப் பாலை விற்பனை செய்ததால் அது கெடாமலும் சுத்தமாகவும் இருந்தது. அதற்கு முன், பாதுகாப்பற்ற கலன்களைப் பயன்படுத்தியதால், பால் கெட்டுப் போனதுடன், பல்வேறு நோய்க் கிருமிகள் உருவாகவும் காரணமாக இருந்தது. 1938 ஆம் ஆண்டு குளிர் சாதனப் பெட்டி வந்த பிறகு தான் பால் கெடாமல் இருந்தது. அமெரிக்காவில் 1878 ஜனவரி 29 ஆம் தேதி, திருகு மூடியைக் கொண்ட கண்ணாடிக் குடுவையில் வைத்துப் பாலை வழங்கினார்கள். இதற்கு, லெஸ்டர் மில்க் ஜார் என்று பெயரிட்டனர். கடந்த நூற்றாண்டில் பிரான்சில் பால் உற்பத்தியாளர்கள் பால் நாளைக் கொண்டாட முடிவு செய்தனர். பன்னாட்டுப் பால் உற்பத்தியாளர் கழகம், 1961 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை உலகப் பால் நாளைக் கொண்டாட முடிவு செய்தது.
கொண்டாட வேண்டியதன் அவசியம்
பாலில் இருந்து நெய், பன்னீர், தயிர், யோக்கர்ட் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளவும், பாலிலுள்ள ஊட்டச் சத்துகளைப் பற்றி அறிந்து கொள்வதுடன், அதைப் பயன்படுத்தி நோயற்று வாழவும், பாலுற்பத்தியில் கிடைக்கும் பொருளாதாரத்தின் அவசியத்தை உணர்த்தவும் உலகப் பால் நாள் கொண்டாடப்படுகிறது.
ஜூன் முதல் நாள் ஏன்?
அமெரிக்கா, சீனா, கம்போடியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டுத் திருவிழாவாக மே மாதத்தின் பல்வேறு நாட்களில் கொண்டாடின. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம், அனைத்து நாடுகளிலும் உள்ள பால் பண்ணையாளர்களிடம் இதைப்பற்றி விவாதித்தது. ஆனால், மே மாதத்தில் பல்வேறு முக்கிய நாட்களைக் கொண்டாடி வருவதாகக் கூறி, சீனம் மட்டும் இதற்கு மறுத்து விட்டது. அதன் பிறகு அனைவரின் கருத்தாக ஜூன் முதல் நாள் உலகப் பால் நாளாக ஏற்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைப்பிக்கப்படுகிறது.
உலகப் பால் நாள் நடவடிக்கைகள்
பாலுற்பத்தியாளர்கள், அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் உலகப் பால் நாள் நிகழ்ச்சியில் ஆர்வமாகக் கலந்து கொள்கின்றனர். கறவை மாடுகள் பராமரிப்பு, நோய்த்தடுப்பு, இனப்பெருக்க மேலாண்மை, பால் விற்பனை குறித்த ஆலோசனைகள், கருத்தரங்கம், கவியரங்கம் போன்றவற்றின் மூலம் பாலுற்பத்தியாளர்களுக்கு விளக்கப்படுகின்றன. பாலிலுள்ள சத்துகள், பாலைப் பருக வேண்டியதன் அவசியம் குறித்து, நாளிதழ்கள் மற்றும் பல்வேறு இதழ்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்நாளில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பாலைப் பருகுவதன் அவசியம்
பாலில், கேசின், சீரம் புரோட்டின் என இருவகைப் புரதங்கள் உள்ளன. கேசின் 83% உள்ளது. சீரத்தில், லாக்டோ ஆல்புமின், லாக்டோ கிளாபுளின் என இரு வகைகள் உள்ளன. புரதக் குறையால் ஏற்படும் குவாசியர்கர் நோய் மற்றும் உடல் மெலிவைப் போக்குவதில் பாலிலுள்ள கேசினும், சீரமும் சிறந்த மருந்தாக உள்ளன. பாலிலுள்ள 18 வகையான அமினோ அமிலங்களில் முக்கியமான 8 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. தானியங்களில் லைசீன் சத்து குறைவாக உள்ளது. இந்தக் குறையை, பாலாடைக்கட்டி, கோவா, பன்னீர் போன்றவற்றில் நிறைந்துள்ள லைசீன் சரி செய்து விடுகிறது.
தாய்ப்பாலிலும் பசும்பாலிலும் பீட்டா கேசின் ஒரே அளவில் உள்ளது. அதனால் தான் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கப்படுகிறது. பாலிலுள்ள வைட்டமின் ஏ, நோயெதிர்ப்புச் சக்தி, நினைவாற்றல் ஆகியவற்றைக் கூட்டுவதுடன், ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாகவும் செயல்படுகிறது. வைட்டமின் பி12, சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நரம்பு மண்டலம் சீராக இயங்கவும் உதவுகிறது. வைட்டமின் டி, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
பாலிலுள்ள கால்சியம், எலும்புகள், பற்களின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும், குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் அவசியம். இதிலுள்ள பொட்டாசியம், உடலில் கார அமிலத் தன்மை சீராக இருக்க உதவுகிறது. பாலிலுள்ள 350-400 மி.கி. பொட்டாசியம், உயர் இரத்தழுத்தம் வராமல் தடுக்கிறது. மேலும், நரம்பு மண்டலமும், தசை நார்களும் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. பாலிலுள்ள புரதம், மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கும் நலமாக இருக்கவும் துணை செய்கிறது. இதிலுள்ள லாக்டிக் ஆசிட், தோலுக்கு மென்மை, மினுமினுப்பைத் தருகிறது.
பசு நெய் பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோயைக் குணமாக்கும். இதிலுள்ள ஆன்ட்டி கார்சினோ ஜெனிட்டிக் காம்பௌன்ட், புற்றுநோயைத் தடுக்கிறது. பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்குக் குடல் புற்று நோயும் வருவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் கொலஸ்ட்ரால் 2-3 மி.கி. மட்டுமே உள்ளது.
ஆஸ்டியோ போரோசிஸ் நோய்
வயதான மனிதர்களின் எலும்புகளில் கால்சியம் குறைகிறது. இதைப்போல, மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் கால்சியம் குறைந்து விடுகிறது. இதனால், எலும்புகள் வலுவிழந்து உடையும் தன்மைக்கும், ரப்பரைப் போல வளையும் தன்மைக்கும் வந்து விடுகின்றன. இதுதான் ஆஸ்டியோ போரோசிஸ் ஆகும். இதனால் வயதான பெண்கள் யானையைப் போல அசைந்து அசைந்து நடப்பார்கள். இதைத் தடுக்க, ஒரு நாளைக்கு 1,000 மி.கி. கால்சியமும் பாஸ்பரசும் தேவை. இது ஒரு லிட்டர் ஆவின் பாலில் உள்ளது.
எனவே, இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆவின் பாலைத் தினமும் அரை லிட்டர் அளவில் பருகுவோம்; நலமாக வாழ்வோம்.
டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன்,
முன்னாள் இணை இயக்குநர்,
கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம்-636008.