மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே
ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே
புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே
நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே!
மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் இடம் பெறுகிறது. முன்பு புராண இதிகாசங்களிலும், பின்பு இந்திய வரலாற்றிலும் வெற்றிலையின் பங்கு வெகுவாகக் காணப்படுகிறது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் வெற்றிலையை நில வரியாகச் செலுத்தும் வழக்கம் இருந்துள்ளது. இப்படிச் சிறப்பு வாய்ந்த வெற்றிலையைப் பற்றிய நிறையத் தகவல்களை இனி அறியலாம்.
வளரியல்பு
தாயகம் மலேசியா என்று சொல்லப்பட்டாலும் வெற்றிலை, இந்தியாவின் பாரம்பரியமிக்க பொருள். இது, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்தியாவின் வெப்பப் பகுதிகளிலும் சதுப்புப் பகுதிகளிலும் பயிரிடப்படும் கொடிக்கால் பயிர். இது மரமேறும் கொடி. இலைக்காகவே பயிரிடப்படுகிறது.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், போத்தனூர், கரூர் மாவட்டத்தில் புகளூர், திருச்சி மாவட்டம் தொட்டியம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் உள்ளது. மிதமான தட்ப வெப்பம், மண்வளம், நீர்வளம் உள்ள பகுதிகளில் இது பயிராகிறது.
கரும்பச்சை வெற்றிலையை ஆண் என்றும் இளம்பச்சை வெற்றிலையைப் பெண் என்றும் சொல்கிறார்கள். தாம்பூலம், தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, வெள்ளிலை, மெல்லடகு என, வெற்றிலைக்குப் பல பெயர்கள் உண்டு. Piper betel என்னும் தாவரப் பெயரும் betel leaf என்னும் ஆங்கிலப் பெயரும் உண்டு.
குணமும் செய்கையும்
வெற்றிலையின் பயன்படு உறுப்பு இலை. இது காரச்சுவையுடன் சற்றுக் கடுப்பைக் கொண்டது. வெப்பத் தன்மையது. சீரண நிலையில்கூட இதன் சுவை கார்ப்பாகும். ஆகவே, வெற்றிலை உமிழ்நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும். துவர்ப்புச் சுவையுடன் வெப்பத்தை உண்டாக்கிக் கோழையை அகற்றும். நம் வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும். பாலைப் பெருக்கித் தாய் சேய் நலம் காக்கும். காமத்தைப் பெருக்கி இல்லறத்துக்கு வளம் சேர்க்கும். இப்படிப் பல்வேறு மருத்துவக் குணங்களையும் செய்கைகளையும் கொண்டது.
மருந்து முறை
வேண்டிய அளவு நல்லெண்ணெய்யில் இரண்டு வெற்றிலைகளைப் பிய்த்துப் போட்டு அத்துடன் மூன்று மிளகைத் தூளாக்கி, சாம்பிராணி ஒரு துண்டு, வேண்டிய அளவு தும்பைப் பூக்களைச் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்து, வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து வெந்நீரால் குளித்தால், சைனஸ் எனப்படும் மூக்கடைப்பு, இருமல், ஒவ்வாமையால் வரும் தும்மல், ஆஸ்துமா என்னும் நுரையீரலில் சிக்கிய சளி இயல்பாய் வெளியாகி உடல் நலமாகும்.
தீப்புண் மீது, வெற்றிலையை வைத்து ஆற்றலாம். வெற்றிலைச் சாற்றைத் தடவி வந்தால் ஆறாத இரணங்கள் விரைவில் குணமாகும். வெற்றிலை வேரைத் தின்றால் இனிமையான குரல்வளத்தைப் பெறலாம். பெரிய வெற்றிலையில் 11 மிளகை வைத்து மடித்து மென்று சாப்பிட்டால், தேள் கொட்டிய நஞ்சு நீங்கிக் கடுப்பு அகலும். வெற்றிலைச் சாற்றை அருந்த, நல்லெண்ணெய்யால் ஏற்பட்ட ஒவ்வாமை குணமாகும்.
மகவை ஈன்ற தாய்க்கு மார்பில் பால் கட்டிக் கொள்ளும் நிலையில் வலி, வீக்கம், குத்தல் ஏற்படும். இந்தத் தொல்லைகள் நீங்க, ஆமணக்கு எண்ணெய்யை வெற்றிலையில் தடவி வாட்டி, இளஞ்சூட்டுடன் மார்பகத்தில் வைத்துக் கட்டுவர். இதனால் தாய்க்குச் சுகமும் குழந்தைக்கு வேண்டிய பாலும் கிடைக்கும். இது நம் முன்னோரின் கைகண்ட மருத்துவ முறையாகும்.
வெற்றிலையில் 84.4 சதம் நீர்ச்சத்து, 3.1 சதம் புரதச்சத்து, 0.8 சதம் கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் ஏ, சி ஆகியன உள்ளன. கோகைன் தாவரத்திலுள்ள காமப்பெருக்கி ஆல்கலாய்டான அரகேன் என்னும் சத்துக்கு இணையான ஆல்கலாய்டு வெற்றிலையில் உள்ளது. சித்த மருந்துகளில் மாதரசப்பூரச் சரக்குகளின் சுத்திக்கு வெற்றிலை மிகவும் தேவையாகும்.
முறையாகத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் அரிதாகி வரும் இந்நாளில், வெற்றிலையைப் பயனுள்ள மருந்தாகப் பயன்படுத்துவோம்.
பகலில் பகலவன் கதிரொளியால்
தாவரப் பச்சையம் உருவாகும்
நிசி நிலா தண்ணொளியால்
அது மருந்தாக உருவாகும்
மரு.ப.குமாரசுவாமி,
மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.