கட்டுரை வெளியான இதழ்: 2015 செப்டம்பர்
இப்போது பழப்பயிர்கள் சாகுபடியில், அடர் நடவு என்னும் புதிய முறை கையாளப்படுகிறது. பெரும்பாலும் மா, வாழை, சப்போட்டா, கொய்யா, ஆப்பிள், பெருநெல்லி போன்ற பழப்பயிர்கள் சாகுபடியில் இந்த அடர் நடவு முறையைப் பயன்படுத்தும்படி விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்தத் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு ஏக்கர் பரப்பில் வளர்க்கப்படும் பழ மரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கிறது. இதனால், மகசூலும் இரு மடங்காகக் கிடைக்கிறது. அடர் நடவு முறையைப் பின்பற்றினால், பழ மரங்களைக் கவாத்து செய்வதிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
அடர் நடவு முறையில், மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழமரக் கன்றுகளை நடவு செய்ய விரும்பினால், குட்டையாகப் படரும் இரகங்களையும், குடை வடிவக் கிளைகளுள்ள இரகங்களையும் தேர்ந்தெடுத்தல் அவசியமாகும். ஏனெனில், இதனால் சூரிய ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த முடியும்.
கவனிக்க வேண்டியவை: சரியான இடைவெளியில் நடவு செய்தல். சரியான வடிவத்தில் கிளைகளைப் பராமரித்தல். சரியான குட்டை இரகங்களைத் தேர்ந்தெடுத்தல். சரியான பராமரிப்பு உத்திகளைப் பின்பற்றுதல்.
பொதுவாக, மா சாகுபடியில் 10×10 மீட்டர் இடைவெளியில் கன்றுகள் நடப்படுகின்றன. இதன் மூலம் ஓர் எக்டர் நிலத்தில் 100 கன்றுகளை மட்டுமே நட முடியும். மரங்களின் எண்ணிக்கை குறையும் போது, உற்பத்தியும் குறைவாகவே இருக்கும். எனவே, மாவின் உற்பத்தியை அதிகரிக்க, இரட்டை வரிசை அடர் நடவு முறையைத் தேர்வு செய்தால், அதாவது, 10+5+5 மீட்டர் இடைவெளியில் ஓர் எக்டர் நிலத்தில் 222 கன்றுகளை வளர்த்து, அதிக மகசூலைப் பெறலாம். இந்த மரங்கள், எட்டு முதல் பத்து வயதை எட்டும் போது இரண்டு மடங்கு உற்பத்தியைத் தரும்.
இப்போது, வழக்கமாகப் பின்பற்றி வரும் நடவு முறைக்கும் அடர் நடவு முறைக்கும் ஆகும் செலவு மற்றும் வருமான விவரங்களையும் பார்ப்போம். சாதாரண நடவு முறையில் ஓர் எக்டரில், எல்லா இரகங்களும் 10 மீட்டர் இடைவெளியில் 100 கன்றுகள் நடப்படும். ஆனால், அடர் நடவு முறையில் அம்ரபாலி 2.5 மீட்டர் இடைவெளியில் 1,600 கன்றுகள் நடப்படும்.
சாதாரண நடவு முறையில் ஓர் எக்டர் மாந்தோப்பை அமைக்க 30 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். அடர் நடவு முறைக்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். சாதாரண முறையில் ஆண்டுப் பராமரிப்புக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவை. அடர் நடவு மாந்தோப்பைப் பராமரிக்க ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாய் தேவை.
சாதாரண நடவு முறை மாந்தோப்பில் முழு மகசூலை எடுக்க 8-10 ஆண்டுகள் ஆகும். அடர் நடவு மாந்தோப்பில் 7-8 ஆண்டுகளிலேயே முழு மகசூல் கிடைக்கத் தொடங்கி விடும். சாதாரண நடவு முறையில் 6000-8000 கிலோ மகசூல் கிடைக்கும். அடர் நடவு முறையில் 16,000-19,000 கிலோ மகசூல் கிடைக்கும்.
கிலோ 10 ரூபாய் விலையில் கணக்கைப் பார்த்தால், சாதா நடவு முறையில் 60,000-80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அடர் நடவு முறையில், 1,60,000-1,90,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாதாரண நடவில் ஆண்டுப் பராமரிப்புச் செலவு போக, 40,000-60,000 ரூபாயும், அடர் நடவு முறையில் 1,25,000-1,65,000 ரூபாயும் நிகர இலாபமாகக் கிடைக்கும்.
எனவே, பழத் தோட்டங்களை அமைக்க விரும்பும் விவசாயிகள் புதிய முறையைக் கடைப்பிடிப்பதற்கு முன் அதற்கான தொழில் நுட்பங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு அவற்றைப் பயன்படுத்தினால் விளைச்சலைப் பெருக்கி நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
முனைவர் க.வேல்முருகன்,
இணைப் பேராசிரியர், முனைவர் பா.குமாரவேல்,
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.