இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டி!

தண்டுத் துளைப்பான் Untitled 3

“அண்ணே.. பயிருல இலைகளையும் தண்டுகளையும் துளைக்கிற பூச்சிகள எப்பிடிண்ணே கட்டுப்படுத்துறது?..’’

“தம்பி.. பயிர்களின் இலைகளையும் தண்டுகளையும் பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துனா விளைச்சல் குறஞ்சு போகும்ப்பா.. அதனால இந்த இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் பூச்சிகளைச் சரியான நேரத்துல.. சரியான மருந்தைத் தெளிச்சுக் கட்டுப்படுத்தணும்.. இதுக்கு இயற்கையான மருந்தே இருக்குப்பா..’’

“அதுக்குப் பேரு என்னன்னு சொல்லுண்ணே..’’

“அதை இலை மற்றும் தண்டுத் துளைப்பான் விரட்டின்னு சொல்லுவாக..’’

“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’

“இதைத் தயாரிக்க, ஆடாதொடை 500 கிராம், பீச்சங்கு ஒரு கிலோ, சீதாப்பழ விதை 100 கிராம், சிறியா நங்கை 500 கிராம், தங்கரளிக் காய் அல்லது சீதா தழை ஒரு கிலோ, சோற்றுக் கற்றாழை ஒரு கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், தேவையான அளவு புற்று மண், புகையிலைத் தூள் ஒரு கிலோ வேணும்ப்பா..’’

“சரிண்ணே.. செய்முறையைப் பத்திச் சொல்லுண்ணே..’’

“இப்போ நான் சொன்ன பொருள்களில் புகையிலைத் தூள், மஞ்சள் தூள், புற்றுமண் தவிர மற்ற பொருள்களை ஒன்றாகக் கலந்து பசையைப் போல நல்லா அரச்சுக்கிறணும்.. அடுத்து, அஞ்சு லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூளைப் பன்னிரண்டு மணி நேரம் ஊற வைக்கணும்.. இதில், ஏற்கெனவே அரச்சு வச்சுருக்கும் கலவையைக் கலந்து ரெண்டுமூணு நாள் ஊற விட்டால் புளிச்சு வரும்.. இந்தக் கலவையோட மஞ்சள் தூளையும், புற்று மண்ணையும் சேர்த்துப் பசையைப் போல ஆக்குனா.. இலை மற்றும் தண்டுத் துளைப்பான்களைக் கட்டுப்படுத்தும் இடுபொருள் தயார்..’’

“சரிண்ணே.. இதை எப்படிப் பயன்படுத்துறது?..’’

“அதாவது.. ஒரு கிலோ பசையை 100-125 லிட்டர் தண்ணியில கலந்து, கைத்தெளிப்பான் அல்லது விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.. இதனால.. பயிரோட இலைகளையும் தண்டுகளையும் துளைக்கும் புழுக்கள் கட்டுப்படும்.. நஞ்சில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும்.. குறைந்த செலவில இதைத் தயாரிக்கலாம்.. சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இடுபொருளுப்பா..’’

“நல்லதுண்ணே.. நானு வர்றேண்ணே..’’


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading