கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020
இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர் நிவாரணம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மீனவர்கள் தங்களின் மீன் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி வளம் காண ஏதுவாக, மத்திய அரசின் சார்பில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், பல்வேறு கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;
“பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், மீன் வணிகம் செய்யும் மீனவ மகளிருக்கு 33,000 ரூபாய் கடனாக வழங்கப்படும். சைக்கிள் மூலம் மீன் வணிகத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு 33,000 ரூபாய் கடனாக வழங்கப்படும். கருவாடு வணிகத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு 35,000 ரூபாய் கடனாக வழங்கப்படும்.
இரு சக்கர வாகனத்தில் குளிர்சாதனப் பெட்டியை வைத்து மீன் வணிகத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு 1,15,000 ரூபாய் கடனாக வழங்கப்படும். வங்கிகள் மூலம் வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால் 4 சதம் வட்டி வசூலிக்கப்படும். கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த ஓராண்டுக்கு மேலானால் 7 சதம் வட்டி வசூலிக்கப்படும்.
இந்தக் கடன் திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் விண்ணப்பத்தைப் பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். இந்தக் கடனைப் பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் யாராவது அணுகினால், அவர்களைப் பற்றிய தகவலை அவரவர் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டம் உள்நாட்டு மீனவர்களுக்கும், கடல் மீனவர்களுக்கும் பொருந்தும். இந்தக் கடன் திட்டத்தைப் பற்றி, மண்டல இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட மீனவர் வாட்ஸாப் குழுக்களுக்குத் தகவல் அனுப்பி, இத்திட்டத்தின் பயனை அனைத்து மீனவ மக்களும் அறியும்படி செய்ய வேண்டும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் பயனாளிகளைச் சேர்க்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இடைத்தரகர்கள் யாரும் நுழையாத வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும். அத்தகைய புகார்கள் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். மொத்தத்தில், இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, அதிகளவிலான மீனவ மக்களைப் பயனடையச் செய்ய வேண்டும்’’ என்றார்.
மு.உமாபதி