கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
கடந்த 24.02.2019 அன்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர், “நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு 72,000 கோடி ரூபாயை உதவித்தொகையாக வழங்கும் திட்டத்தை, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதை இப்போது நாங்கள் செயல்படுத்துகிறோம். இந்தத் திட்டத்தில் முதல் தவணையாக 1.1 கோடி விவசாயிகளுக்குத் தலா 2,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 கோடி விவசாயிகளுக்கும் விரைவில் முதல் தவணைத் தொகை வழங்கப்படும்.
இதற்காகப் பயனாளிகள் பட்டியலை விரைந்து அனுப்பும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்னும் இலக்குடன் அரசு செயலாற்றி வருகிறது. இதை உறுதியாகச் செய்து காட்டுவோம்’’ என்றார்.
அதன்படி, இந்தத் திட்டத்தைச் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் கே.எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைய தினம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சியடையும் விதத்தில், விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தைத் தொடக்கி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. சிறு குறு விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய இடுபொருள்களை வாங்கிப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற்றுப் பண்ணை வருவாயைப் பெருக்கத் தேவையான நிதியுதவியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தியா முழுவதும் உள்ள 2 எக்டர் அல்லது 5 ஏக்கர் வரை விளை நிலங்களை உடைய சிறு, குறு விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு முறையே 6,000 ரூபாய் வீதம் இந்தத் திட்டத்தின் வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகை மூன்று தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
நாங்கள் மேடையிலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தேனியிலிருந்து விவசாயி ஒருவர், எனக்கு முதற்கட்டத் தொகை 2 ஆயிரம் ரூபாய் தன்னுடைய வங்கிக் கணக்குக்கு வந்து விட்டதென்று நமது வேளாண் துறையின் முதன்மைச் செயலாளர் அவர்களிடம் கூறியுள்ளார். பாரதப் பிரதமர் அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் தொடக்கி வைத்த மறுநொடியிலேயே அந்த விவசாயியின் கணக்கில் அந்தப் பணம் சேர்ந்து விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 22 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளின் விவரங்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையினால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், முறையான சரிபார்த்தலுக்குப் பின் இன்றைக்குச் சிறு, குறு விவசாயக் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக இன்றே தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்களும், மாண்புமிகு அம்மாவின் அரசும் விவசாயிகளின் நலனுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அம்மா அவர்கள் மேற்கொண்ட இடையறாத சட்டப் போராட்டத்தின் காரணமாக, காவிரிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அம்மா அவர்கள் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டம் 2023 இல் உள்ளபடி வேளாண்மைத் துறையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பாசன வசதிக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், ஏரி, குளங்களைத் தூர்வாருதல், வேளாண் பொருள்களைப் பாதுகாக்கக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்துதல், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல் போன்றவை அறிவிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைத் தணிக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் 5,318 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-ஆம் ஆண்டு வறட்சி நிவாரணமாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக 2017-18 கரும்பு அரவைப் பருவத்துக்காக, மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையை விட, கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக, அதாவது, 125 கோடியே 77 இலட்சம் ரூபாய், 1,35,890 கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத போது, டெல்டா பாசன விவசாயிகளின் நலனுக்காக, குறுவைத் தொகுப்புத் திட்டம், சம்பா தொகுப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் சாகுபடிக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
நுண்ணீர்ப் பாசனத்தை அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கப்படுவதுடன், இக்கருவிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை முழுமையாக மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் மட்டும் 1,43,000 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனத்தை அமைத்திட 950 கோடி ரூபாய் அளவுக்குப் பணியாணை வழங்கப்பட்டு, இந்தத் திட்டம் சிறப்பாகத் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவிக்க, இரண்டு ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 4 இலட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், 802 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரிச் சிறப்புத் தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,600 கோடி ரூபாய், காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பளிக்கப்பட்டு, காப்பீடு செய்த 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இப்படி, வேளாண் பெருமக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை உணவு தானியங்களை 100 இலட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் உற்பத்தி செய்து, மத்திய அரசின் உயரிய விருதான கிருஷி கர்மான் விருதை, தமிழக அரசு தொடர்ந்து 4 முறை பெற்றுள்ளது.
மேலும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்குப் பயிர் நிவாரணமாக 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இப்புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மறுசாகுபடி செய்வதற்கான, வாழ்வாதாரத் திட்டம் 228 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், மாண்புமிகு அம்மா அவர்களால், கடந்த 15.8.2005 அன்று தொடங்கப்பட்டது.
அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், வேளாண் பெருமக்களுக்காகப் பல்வேறு அம்சங்களுடன் புதிய விரிவான முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தைத் தாயுள்ளத்தோடு செயல்படுத்தினார்கள். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை மரணம் மற்றும் விபத்துக்கு உள்ளாகும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அவர்தம் குடும்பத்தினர்க்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். இந்தத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.
மேலும், வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் பொருள்களைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டிச் சந்தைப்படுத்த, தமிழ்நாட்டில் 10 உணவுப் பதனப் பூங்காக்களை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, திண்டிவனம், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் இப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும், தனியார் துறையில் உணவுப் பதனத் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரெஞ்ச் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் முதலீடு உறுதியாகி உள்ளது. இந்த த்தகு உணவுப் பூங்காக்கள் மூலம் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் பெருகவுள்ளது.
இன்றைய தினம் மாண்புமிகு அம்மா அவர்கள் பிறந்த நாள். இந்நாளில், இந்தியாவிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு திட்டத்தைப் பாரதப் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது விவசாயப் பெருமக்களுக்கு வரப்பிரசாதமான திட்டம். ஏனெனில், விவசாயிகள் இரத்தத்தை வியர்வையாக்கி மண்ணிலே சிந்தி உழைக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பல்வேறு சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறார்கள். அதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் பாரதப் பிரதமர், சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூன்று தவணையாக 6,000 ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவித்து, விவசாயிகள் மகிழும் வகையில் இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்திருக்கிறார். அதற்கு நான் மனமார, உளமார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
மு.உமாபதி