தானிய சாகுபடியுடன், ஆடு, கோழி, மீன், முயல், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தோட்டக்கலைப் பயிர்கள், மரங்கள் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிப்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் என்கிறோம். விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைப்பதன் மூலம் தொடர்ந்து வேலை வாய்ப்பைப் பெறலாம். இதனால் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஒன்றையொன்று சார்ந்து வாழும் விலங்கினங்கள் மூலம் செலவினங்கள் குறைந்து வருமானம் பெருகும். எடுத்துக்காட்டாக, மீன் வளர்ப்புக் குட்டைக்கு மேலே பரணை அமைத்துக் கோழிகளை வளர்த்தால், அந்தக் கோழிகள் இடும் எச்சம், மீன்களுக்கு உணவாக அமையும். மேலும், குட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீரைப் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்குப் பாய்ச்சுவதன் மூலம், இருக்கின்ற வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி அதிக வருவாயை ஈட்டலாம்.
எனவே, ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயிகள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய வாழ்வியல் உத்தியாகும். இதை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக, பச்சை பூமி சார்பில், வெள்ளிக் கிழமை 11.02.2022 அன்று மாலை 4 முதல் 6 மணி வரை இணைய வழியில், ஒருங்கிணைந்த பண்ணையம் என்னும் தலைப்பில் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தேனியில் உள்ள சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வகிக்கும் பொ.மகேஸ்வரன் பயிற்று வித்தார். ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன? அதை புஞ்சை நிலத்தில் மேற்கொள்வது எப்படி? நஞ்சை நிலத்தில் மேற்கொள்வது எப்படி என்று விரிவாக விளக்கினார்.
ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் இரட்டிப்பு மகசூல் எடுக்க முடியும் என்று தக்க ஆதாரத்துடன் எடுத்துரைத்தார். தொடர்ந்து விவசாயிகள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களை பொ.மகேஸ்வரன் நிவர்த்தி செய்தார்.
இயற்கை வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த இதுபோன்ற இணையவழிப் பயிற்சியை பச்சை பூமி வாரந்தோறும் நடத்தும். அதில், விருப்பமுள்ளவர்கள் மட்டும், பதிவுக் கட்டணம் செலுத்தி கலந்துகொண்டு பயன் பெறலாம்.
பச்சை பூமி