மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

தத்துப் பூச்சி HP 07905fa035456b3ecdec9d3ad6538851 scaled

முக்கனிகளில் முதல் கனியான மா, இந்தியா மற்றும் பர்மாவில் தோன்றியது. இன்று உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடியில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 25 இலட்சம் எக்டரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் 1.8 கோடி டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் 1.4 இலட்சம் எக்டர் மா சாகுபடி மூலம் 8.96 இலட்சம் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் விளையும் மாம்பழங்களில் 80 விழுக்காடு உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனையாகி விடுகின்றன. மீதமுள்ள பழங்கள், ஐக்கிய அரபு நாடுகள், வங்கதேசம், சவுதி அரேபியா, நேபாளம், குவைத், சிங்கப்பூர், பக்ரைன் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் மொத்த மா சாகுபடியில் 40 விழுக்காடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ளது.

மாவின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பலவிதமான பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குகின்றன. மாமர வேர்கள், தண்டு, பட்டை, கிளைகள், இலைகள், பூ மொட்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள் என, எல்லாப் பாகங்களையும் பூச்சிகள் தாக்குகின்றன. மா சாகுபடியில் நல்ல மகசூலை எடுக்க, இத்தகைய பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

தத்துப் பூச்சிகள்

மூன்று இனங்களைச் சேர்ந்த தத்துப்பூச்சிகள், மாவின் புதுத் தளிர்கள், இலைகள் மற்றும் பூங்கொத்துகளைத் தாக்கி அதிகளவில் சேதத்தை விளைவிக்கின்றன. இந்தப் பூச்சிகளுக்கு மாவைத் தவிர வேறு உணவுப் பயிர் இல்லை. இவை, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளன. இப்பூச்சிகள், ஆண்டு முழுவதும் மாந்தோப்புகளில் இருந்தாலும், நவம்பர்-பிப்ரவரி காலத்தில் மாமரங்கள் பூக்கும் போது, மிக அதிகளவில் தென்படும். பூக்களற்ற காலத்தில் மரப் பட்டைகளின் அடியில் உறக்க நிலையில் இருக்கும்.

தாக்குதல் அறிகுறிகள்: குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பூங்கொத்துகளின் சாற்றைத் தொடர்ந்து உறிஞ்சுவதால் பூங்கொத்துகள் வாடியிருக்கும். தாக்குதல் அதிகமானால், மொட்டுகளும் பூக்களும் கருகி உதிர்ந்து விடும். இந்தப் பூச்சிகள் சுரக்கும் தேன் போன்ற திரவம், இலையின் மேற்பரப்பில் சர்க்கரைப் பாகைத் தெளித்ததைப் போலத் தெரியும்.

இந்தத் திரவத்தில் கேப்னோடியம் என்னும் பூசணம் வளர்ந்து கரும்படல நோயை ஏற்படுத்தும். இதனால், இலைகள் கறுப்பாக மாறி விடும். காய்ப்பிடிப்பு 25-60 சதம் வரை குறையக் கூடும்.

வாழ்க்கைச் சரிதம்: ஒரு பெண் பூச்சி, குறைந்தது 200 முட்டைகளை, மாவின் பூங்கொத்து, பூக்காம்பு மற்றும் பூ மொக்குகளில் தனித்தனியாக இடும். மங்கிய வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த முட்டைகளில் இருந்து 4-6 நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவந்து சாற்றை உறிஞ்சும். பிறகு, 10-15 நாட்களில் நன்கு வளர்ந்து இறக்கைகள் உள்ள தத்துப் பூச்சிகளாக மாறும். மாமரங்கள் பூக்கும் காலத்தில் இந்தப் பூச்சிகள் 2-3 தலைமுறைகளை உருவாக்கி விடும்.

மற்ற காலத்தில் மரத்தின் இடுக்குகளில் இருந்து கொண்டு குறைந்தளவில் சேதத்தை ஏற்படுத்தும். இவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் இளம் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். நன்கு வளர்ந்த மரங்களைத் தாக்கும் போது, அவற்றின் உற்பத்தித் திறனும் மகசூலும் பாதிக்கப்படும்.

தத்துப்பூச்சி இனங்கள்: அமிரிடோடஸ் அட்கின்சோனி மற்றும் இடியோஸ் கோப்பஸ் கிளைப்பியாலிஸ் இனப்பூச்சியானது, மிகப் பெரியதாக இருக்கும். தலையை அடுத்துள்ள மார்புப் பட்டையில் இரண்டு கரும் புள்ளிகள் காணப்படும்.

இடியோஸ்கோப்பஸ் கிளைப்பியாலிஸ் இனப் பூச்சியானது, பழுப்பு நிறத்தில் இருக்கும். தலைப்பகுதி அகன்றும், உடற்பகுதி சிறுத்தும் இருக்கும். முதுகிலும் தலைப் பட்டையிலும் இரண்டு புள்ளிகள் இருக்கும்.

இடியோஸ்கோப்பஸ் நிவயோஸ்பார்சஸ் இனப் பூச்சியானது, நடுத்தர பருமனில் இருக்கும். முதுகுப் பட்டையில் மூன்று கரும் புள்ளிகள் இருக்கும். தலையில் வெண்கோடு பட்டையாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: நெருக்க நடவு முறையைத் தவிர்க்க வேண்டும். சூரியவொளி நன்கு படும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும். மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்த சத வேப்பம் புண்ணாக்குக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8% எஸ்.எல். அல்லது 0.3 கிராம் தயாமீதாக்சைம் 25 என்.ஜி. வீதம் எடுத்துக் கலந்து, மரங்கள் பூக்கும் காலத்தில், பதினைந்து நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துடன் 2 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து தெளித்தால், கரும்படல நோயைத் தடுக்கலாம்.

தண்டுத் துளைப்பான், பேட்டோசீரா ரூமேக்கலேட்டா

மா மரத்தைத் தவிர, பலா, மல்பெரி, அத்தி, இரப்பர், முருங்கை, தைல மரம் மற்றும் இலவம் பஞ்சு மரங்களையும் தாக்கும்.

தாக்குதல் அறிகுறிகள்: இந்தப் புழுக்கள், பெரும்பாலும் மரத்தில் கிளைகள் பிரியும் இடத்தில் துளைத்து, தண்டுக்குள் சென்று, திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும். துளைக்கப்பட்ட பகுதியைச் சுற்றி, மரத்தூளும், புழுவின் கழிவும் தள்ளப்பட்டிருக்கும். தண்டைக் குடைந்து, ஒழுங்கற்ற வடிவில் துளைகளை உண்டாக்கி, உணவைக் கடத்தும் திசுக்களை உண்பதால், மரக்கிளைகள் நாளடைவில் வாடிக் காய்ந்து விடும். இப்படி, பல கிளைகள் தாக்கப்படும் போது, மரம் முழுவதும் காய்ந்து மடிந்து விடும்.

வாழ்க்கைச் சரிதம்: பெண் வண்டுகள், மரக் கிளைகள் பிரியும் இடங்களில் உள்ள மரப் பட்டைகளின் அடியில் முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து 7-14 நாட்களில் வெளிவரும் இளம் புழுக்கள், தண்டுப் பகுதியைத் துளைத்துச் சென்று, ஒழுங்கற்ற துளைகளை ஏற்படுத்தும். இப்படி, 7-8 மாதங்கள் வரை, திசுக்களை உண்டு புழுக்கள் நன்கு வளரும்.

புழுவின் முன்பகுதி அகன்று பெருத்து இருக்கும். தலை பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் இருக்காது. முழுமையாக வளர்ந்த புழுக்கள், தண்டின் உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறி 21-28 நாட்களில் வண்டாக வெளிவரும்.

வண்டுகள் 4-6 செ.மீ. நீளத்தில், சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகள் கடினமான ஓட்டைப் போல, ஒழுங்கற்ற அழுக்கு வெண் புள்ளிகளுடன் இருக்கும். முதல் மார்புக் கண்டத்தில் இரண்டு இளம் சிவப்புப் புள்ளிகள் இருக்கும். இரு புறத்திலும் கடினமான முள் போன்ற அமைப்பும் இருக்கும். இந்த வண்டுகள் இரவில் மட்டுமே நடமாடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்கப்பட்ட அல்லது சேதமடைந்த கிளைகளை அகற்றி விட வேண்டும். எதிர்ப்புதிறன் மிக்க இரகங்களான நீலம் மற்றும் ஹிமாயூதீனைப் பயிரிட வேண்டும். மாற்று உணவுப் பயிர்களை அகற்றி விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் கார்பரில் வீதம் கலந்து, மரத்தின் அடியிலிருந்து இரண்டி உயரத்தில் பூசி, பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வண்டு சேதப்படுத்திய துளையில் உள்ள புழுவை அகற்றி விட்டு, மரத்தின் வயதைப் பொறுத்து, 10-20 மில்லி மேனோகுரோட்டாபாசை, அந்தத் துளையில் செலுத்த வேண்டும். ஒரு துளைக்கு 5 கிராம் கார்போபியூரான் குருணை வீதம் இட்டு, களிமண்ணால் அடைத்து விட வேண்டும்.

பட்டைத் துளைப்பான், இன்டார்பெலா டெட்ரானிஸ்

மியான்மார், வங்காள தேசம், இலங்கை மற்றும் இந்தியாவில் இவை பரவிக் கிடக்கின்றன. வேம்பு, எலுமிச்சை, கொய்யா, நாவல், மல்பெரி, மாதுளை, முருங்கை, லிட்சி, காட்டு மரங்கள் ஆகியன, இந்தப் பூச்சிகளின் மாற்று உணவுப் பயிர்களாகும்.

தாக்குதல் அறிகுறிகள்: இளம் மரங்களை அதிகளவில் தாக்கும். புழுக்கள், மரப்பட்டையைத் துளைத்து உள்ளே சென்று வலைப் பின்னலை உருவாக்கி, உணவைக் கடத்தும் திசுவை உண்ணும். இரவில் மட்டுமே மரப்பட்டையை உண்ணும் இவை, பகலில் மரத்துளைகளில் மறைந்திருக்கும். இவற்றின் தாக்குதல் அதிகமானால், பாதிக்கப்பட்ட கிளைகள் வாடி இறந்து விடும்.

வாழ்க்கைச் சரிதம்: பெண் பூச்சியானது 2,000 முட்டைகள் வரை, 15-20 குழுக்களாக மரப்பட்டைகளின் இடுக்கில் இடும். முட்டையில் இருந்து 8-10 நாட்களில் புழுக்கள் வெளிவரும். முதலில் பட்டையை உண்டு தண்டுக்குள் போகும். உண்ணும் வழியில் வலைப் பின்னலை ஏற்படுத்தி மரத்தூளையும் எச்சத்தையும் கொண்டிருக்கும்.

புழுக்கள் முழுமையாக வளர 9-10 மாதங்கள் ஆகும். அதற்குப் பிறகு, 3-4 வாரங்களில் கூட்டுப்புழுப் பருவத்தை முடித்து அந்துப் பூச்சிகளாக வெளிவரும். பெரும்பாலும் அந்துப் பூச்சிகளின் நடமாட்டம் கோடைக் காலத்தில் இருக்கும். ஒரு தலைமுறை உருவாக ஓராண்டு ஆகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: அதிகமாகத் தாக்கப்பட்ட மற்றும் வாடிய கிளைகளை அகற்ற வேண்டும். மாற்று உணவுப் பயிர்களை அகற்றி விட வேண்டும். பெண் பூச்சி முட்டையிடுவதைத் தடுப்பதற்கு, நிலக்கரித் தார் மற்றும் மண்ணெண்ணெய்யை 1:2 விகிதத்தில் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் கார்பரில் 50 wp வீதம் கலந்து, மரத்தின் அடியில் இருந்து மூன்றடி உயரம் வரை தடவிவிட வேண்டும்.

கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கிராம் வீதம் இட்டு, களிமண்ணால் துளையை அடைத்து விட வேண்டும். இதுவரை கூறியுள்ள பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றினால், மாவில் அதிக மகசூலைப் பெறலாம்.


தத்துப் பூச்சி DR.K.GOVINDHAN

கு.கோவிந்தன்,

சி.சிவக்குமார், பி.சி.பிரபு, ப.பரசுராமன், மண்டல ஆராய்ச்சி நிலையம்,

பையூர் – 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading