கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021
நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.
சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்
இலைப்பேன்: இது, நாற்றங்காலிலும், வயலிலும் இளம் பயிர்களைத் தாக்கும். அதிக வெப்பமும் காற்றில் குறைந்த ஈரப்பதமும் உள்ள சூழலில், இதன் தாக்கம் மிகுந்திருக்கும். இளங்குஞ்சுகளும், தாய்ப்பூச்சிகளும் இலைச்சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் வெளிர் மஞ்சளாக மாறிவிடும். இலை நுனி லேசாகக் கருகிவிடும். இலையின் ஓரங்கள் நடுநரம்பை நோக்கிச் சுருண்டு விடும்.
இந்த இலைகளை விரித்துப் பார்த்தால் மினுமினுப்பாக இருக்கும். தாக்குதல் தீவிரமானால், நாற்றங்கால் தீய்ந்தது போலாகி விடும். இதன் தாக்குதலைக் கண்டறிய, உள்ளங்கையை நீரில் நனைத்து, தாக்குண்ட இலைகள் மேல் தடவினால், இலைப்பேன்கள் கைகளில் ஒட்டியிருப்பதைக் காணலாம்.
கட்டுப்படுத்துதல்: நாற்றுகள் நன்கு மூழ்கும்படி ஓரிரு நாட்கள் நீரை நிறுத்தி வடித்தால், இலைப்பேன்கள் நீரில் சென்று விடும். 20 சென்ட் நாற்றங்காலில் 4 கிராம் தயோமீத்தாக்சோம் 25% WG மருந்தை, தேவையான நீர் மற்றும் ஒட்டும் திரவத்தைக் கலந்து, இலைகளில் நன்கு படும்படி கைத்தெளிப்பானில் தெளிக்க வேண்டும்.
தத்துப்பூச்சி: தமிழ்நாட்டில் மூன்று வகையான தத்துப்பூச்சிகள் இருந்தாலும், பச்சைத் தத்துப்பூச்சியே மிகவும் முக்கியமானது. இது, நாற்றங்காலிலும், நடவு வயலிலும் நெற்பயிரைத் தாக்கும். குறைந்த வெப்பம், அதிக மழை மற்றும் ஈரப்பதமான சூழலில் அதிகமாக இருக்கும்.
இளம் பூச்சிகளும், தாய்ப்பூச்சிகளும் இலைச்சாற்றை உறிஞ்சுவதால், இளம் இலைகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறிக் காய்ந்து விடும். இதனால், பயிர்களின் வளர்வது பாதிக்கப்படும். மேலும், இப்பூச்சி துங்ரோ மற்றும் மஞ்சள் குட்டை வைரஸ் நோயையும் பரப்பும்.
இதனால் பாதிக்கப்பட்ட பயிர் இலைகள், நுனியிலிருந்து கீழ்நோக்கி மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், பயிர்கள் வளராமல் குட்டையாகவே இருக்கும். இந்நோய், இளம் பயிர்களைக் கடுமையாகத் தாக்குவதால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்துதல்: திருந்திய நெல் சாகுபடி முறையில் தத்துப்பூச்சித் தாக்குதல் குறைவாக உள்ளது. துங்ரோ வைரஸ் நோய் தாக்கிய நெற்பயிரை வேருடன் பிடுங்கி அழித்துவிட வேண்டும். தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. விளக்குப்பொறி மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையை அறிந்து, அதற்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
வயலில் ஏக்கருக்கு 50 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8% SL அல்லது 40 கிராம் தயோமீத்தாக்சோம் 25% WG அல்லது 400 மில்லி பாஸ்போமிடான் 40% அல்லது 400 மில்லி கார்போசல்பான் 25% EC அல்லது 400-600 மில்லி பிப்ரோனில் 5% SC அல்லது 10 கிலோ பிப்ரோனில் 0.3% G அல்லது 320 மில்லி பியூபுரோபெசின் 25% SC மருந்தில் 200 மில்லி ஒட்டும் திரவத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
புகையான்: நடவு வயலில் கடந்த சில ஆண்டுகளாக இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போது, இப்பூச்சி வேகமாகப் பரவி பயிரையே அழித்து விடும். பாசனநீரின் மூலம் ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்குப் பரவும்.
இளம் பூச்சிகளும், தாய்ப்பூச்சிகளும் நீருக்குச் சற்று மேலுள்ள தண்டில் கூட்டமாக இருந்து நெற்பயிரின் சாற்றை உறிஞ்சும். இதனால், பயிர் வலுவிழந்து சாய்ந்து விடும். ஆங்காங்கே பயிர்கள் பழுப்பாகி, புகைந்ததைப் போல இருக்கும். பால் பிடிக்குமுன் கதிர்கள் காய்ந்து பதராகி விடும்.
இந்தப் பூச்சியின் தாக்குதலால் நெற்பயிர் எரிந்து, புகைந்து விட்டதைப் போல இருப்பதால், இது புகையான் எனப்படுகிறது. மேலும் இப்பூச்சி, கந்தல் குட்டை மற்றும் குள்ளப்புல் நோயையும் பரப்பிப் பேரிழப்பை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்துதல்: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. வயலில் எட்டடிக்கு ஒரு அடி பாதை விட்டு நடவு செய்தால், புகையான் தாக்குதல் தெரியும் போது, பயிரின் தூர்களில் பூச்சிக்கொல்லிகளை நன்கு தெளிக்கலாம். இரவில் விளக்குப்பொறி மூலம் பூச்சிகளின் அளவைக் கவனித்து, அதற்கேற்ப மருந்தைத் தெளிக்க வேண்டும். வயல் நீரை வடித்து விட வேண்டும்.
புகையானின் இயற்கை எதிரிகளான சிலந்தி, மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்றவை, புகையானைக் கட்டுப்படுத்தும். பயிர்கள் பூப்பதற்கு முன் புகையானைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 கிராம் அசிபேட் 75% SP அல்லது 40 கிராம் அசிட்டாம்பிரிட் 20% SP அல்லது 10 கிலோ பிப்ரோனில் 70% WG அல்லது 50 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8% SL அல்லது
400 மில்லி கார்போசல்பான் 25% EC அல்லது 4 கிலோ குளோரான் டிரினிலிபுரோல் 0.4% G அல்லது 400-600 மில்லி பிப்ரோனில் 5% SC அல்லது 50 மில்லி அசாடிராக்டின் 0.03% அல்லது 320 மில்லி பியூபுரோபெசின் 25% SC மருந்தில், 200 மில்லி ஒட்டும் திரவத்தைக் கலந்து பயிர்களின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
கதிர் நாவாய்ப்பூச்சி: இது, பால் பிடிக்கும் நிலையிலுள்ள நெல் மணிகளில் பாலை உறிஞ்சிக் குடித்துக் கதிரைப் பதராக்கி விடும். இத்தகைய நெல் மணிகளில் கறுப்புப் புள்ளிகளும் ஒருவித நாற்றமும் இருக்கும். இப்பூச்சியின் உடலிலிருந்தும் கெட்ட நாற்றம் வீசும். இதை வைத்து, இப்பூச்சியின் தாக்குதலை அறியலாம்.
கட்டுப்படுத்துதல்: ஏக்கருக்கு 10% நொச்சி அல்லது வேம்பு அல்லது வசம்பு இலைச்சாறு அல்லது 10 கிலோ வேப்பந்தூளை 10 லிட்டர் நீரில் ஊற வைத்து, அதிலிருந்து ஒரு லிட்டர் நீருக்கு 50 மில்லி வீதம் எடுத்து, ஒரு சத சோப்புக் கரைசலையும் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 கிலோ வீதம் குயினால்பாஸ் 15% தூளைத் தூவலாம். அல்லது 200 மில்லி மாலத்தியான் 50% இசி மருந்தைத் தெளிக்கலாம்.
மாவுப்பூச்சி: இது, இலையுறைக்கும் தண்டுக்கும் இடையே இருந்து சாற்றை உறிஞ்சும். இதனால் பாதிக்கப்படும் பயிர்கள் வளர்ச்சிக் குன்றி மஞ்சளாக மாறிவிடும். தாக்குதல் தீவிரமானால், பயிர்கள் வளராமல் திட்டுத் திட்டாக அப்படியே இருக்கும். இளம் பயிர்கள் முற்றிலும் கருகிவிடும். கதிர்கள் சரியாக வெளிவராது. வெளிவந்த கதிர்களில் மணிகள் குறைவாக இருக்கும். வளர்ச்சியற்ற பயிரைப் பிடுங்கி, தோகைகளை உரித்துப் பார்த்தால், வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சிகள் இருக்கும்.
கட்டுப்படுத்துதல்: இப்பூச்சிகள் வாழும் புல், பூண்டுகளை வரப்புகளில் இருந்து நீக்க வேண்டும். ஏக்கருக்கு 400 மில்லி மீத்தைல் டெமட்டான் 25% EC மருந்தை, ஒட்டும் திரவத்துடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம், பயிர்கள் நன்கு நனையும் படியும், தோகை இடுக்குகளில் மருந்து படும்படியும் அடிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்கள்
குருத்துப்புழு: முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது, தன் வாயிலிருந்து சுரக்கும் நூலைப் போன்ற திரவத்தின் வழியே கீழிறங்கி, நீரில் நீந்தி அருகிலுள்ள பயிரின் தண்டை அடையும். பிறகு, தண்டைத் துளைத்து நடுக்குருத்தை உண்ணும். இதனால் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும். இத்தகைய பயிர்களில் வளர்ச்சி இருக்காது.
இப்புழுக்கள், கதிர் விடும் நிலையிலுள்ள பயிர்களைத் தாக்கினால், கதிர் மணிகள் பால் பிடிக்காமல் சாவியாகி விடும். எனவே, மகசூல் பெருமளவில் குறைந்து விடும். காய்ந்த குருத்துகள் மற்றும் வெண் கதிர்களை இழுத்தால் அவை எளிதில் கையோடு வந்துவிடும்.
கட்டுப்படுத்துதல்: இலை நுனியிலுள்ள முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி, 5 இனக்கவர்ச்சிப் பொறி வீதம் வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், பூச்சிகளின் நடமாட்டத்தைக் கவனித்து மருந்தைத் தெளிக்கலாம். அந்துப்பூச்சி நடமாட்டம் இருந்தால், ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வீதம் வயலில் கட்டி, குருத்துப் பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
தாக்கம் பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால், ஏக்கருக்கு 60 மில்லி குளோரான்டிரிலினிப்ரோல் 18.5% SC அல்லது 400 கிராம் அசிப்பேட் 75% SC அல்லது 40 கிராம் தயோமீதாக்சோம் 25% WC அல்லது 400 மில்லி கார்போசல்பான் 25% EC அல்லது
600 கிராம் பிப்ரோனில் 5% எஸ்சி அல்லது 50 கிராம் புளுபென்டியமைடு 20% WC அல்லது 500 மில்லி குளோர்பைரிபாஸ் 20% EC அல்லது 400 கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP வீதம் எடுத்து, 200 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
ஆனைக்கொம்பன் ஈ: இது தாக்குவதால் நெற்பயிரின் இலையுறை, நீண்ட குழலாக மாறி வெங்காய இலையைப் போலத் தெரியும். எனவே இதை, வெங்காய இலை என்றும், இக்குழல் வெள்ளியைப் போலப் பளபளப்பாக இருப்பதால் வெள்ளிக்குருத்து என்றும், யானைத் தந்தத்தைப் போல வெள்ளையாக இருப்பதால் ஆனைக்கொம்பன் என்றும் அழைப்பர்.
இத்தகைய பயிரிலிருந்து குருத்து வெளிவராது. புழுவானது குருத்துக்குச் சென்று திசுக்களைத் தின்னும். இதனால், மாறுதல்களை அடையும் பயிரின் இலையுறை, குழலாக நீண்டு விடும். இந்த ஈ, கொசு அளவே இருக்கும்.
கட்டுப்படுத்துதல்: விளக்குப்பொறி மூலம் முதிர்ந்த பூச்சியின் நடமாட்டத்தைக் கவனிக்கலாம். பிளாட்டிகேஸ்டர் ஒரைசே ஒட்டுண்ணியை, 10 ச.மீ.க்கு ஒன்று வீதம் வயலில் இடலாம்.
ஏக்கருக்கு 500 மில்லி குளோர்பைரிபாஸ் 20% EC அல்லது 320-400 மில்லி கார்போசல்பான் 25% EC அல்லது 400-600 கிராம் பிப்ரோனில் 5% SC அல்லது 6.67-10 கிலோ பிப்ரோனில் 0.3% G அல்லது 2 கிலோ குயினால்பாஸ் 5% G அல்லது 40 கிராம் தையோ மீதாக்சோம் 25% WG வீதம் எடுத்து, 200 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
இலையைத் தாக்கும் பூச்சிகள்
இலைச்சுருட்டுப் புழு: இதன் தாக்குதல் எல்லாப் பருவங்களிலும் இருக்கும். ஆனால், குறைந்த மழையும், காற்றில் ஈரப்பதம் மிகுந்தும் உள்ள சூழலில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும். மேலும், வரப்பு மரநிழல் பகுதி, அதிகளவில் தழைச்சத்தை இட்ட வயல் மற்றும் போரேட், கார்போபியூரான் போன்ற குருணை மருந்தை இட்ட வயலில் இவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். வயலில் அந்துப்பூச்சிகள் பறப்பதை வைத்து இதன் தாக்குதலைத் தெரிந்து கொள்ளலாம்.
தாக்கப்பட்ட இலைகள் வெள்ளை வெள்ளையாக இருக்கும். இதனால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர்கள் வளர்ச்சியின்றி இருக்கும். பயிரின் வளர்ச்சிக் காலத்தில் 10% இலைகளில் பாதிப்பு அல்லது பூக்கும் காலத்தில் 5% கண்ணாடி இலைகள் இருப்பது, பொருளாதாரச் சேத நிலையாகும். கண்ணாடி இலைகள் அதிகமானால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.
கட்டுப்படுத்துதல்: தழைச்சத்தை அதிகமாக இடக்கூடாது. யூரியாவை வேப்பம் புண்ணாக்கில் கலந்து இட வேண்டும். ஏக்கருக்கு 40,000 டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி வீதம், நட்ட 30 நாள் கழித்து மூன்று முறை விட வேண்டும்.
தாக்குதல் தீவிரமானால், ஏக்கருக்கு 60 மில்லி குளோரான்டிரிலினிப்ரோல் 18.5% SC அல்லது 400 கிராம் அசிப்பேட் 75% SC அல்லது 40 கிராம் தயோமீதாக்சோம் 25% WC அல்லது
400 மில்லி கார்போசல்பான் 25% EC அல்லது 60 மில்லி இன்டாக்சாகார்ப் 15.8% அல்லது 600 கிராம் பிப்ரோனில் 5% SC அல்லது 50 கிராம் புளுபென்டியமைடு 20% WC அல்லது 500 மில்லி குளோர்பைரிபாஸ் 20% EC அல்லது
400 கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP மருந்தை, 200 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். இப்பூச்சி பெருகக் காரணமாக இருக்கும், கார்போபியூரான், போரேட் போன்ற குருணை மருந்தை வயலில் இடவே கூடாது.
கூண்டுப் புழு: இதன் தாக்குதல் நாற்றங்காலிலும் வயலிலும் காணப்படும். பாதிக்கப்பட்ட நாற்றின் நுனி வெட்டப்பட்டிருக்கும். இப்படி வெட்டப்பட்ட இலைத் துண்டுகளால் ஆன கூடுகள் நீரில் மிதக்கும்; பயிரிலும் தொங்கும். இதற்குள் பழுப்புத் தலையுடன் புழுக்கள் இருக்கும். சிவந்த மஞ்சள் நிறத் தலையுடனும் இருக்கும்.
கட்டுப்படுத்துதல்: வயலின் எதிரெதிர் வரப்புகளில் இருந்து, பயிர்களின் மேல் படும்படி கயிற்றை இழுத்தால் கூண்டுகள் நீரில் விழுந்து விடும். பிறகு, நீரை வடித்துவிட்டு ஒரு லிட்டர் ம.எண்ணெய்யில் 3 கிலோ மணலைக் கலந்து வயலில் இட வேண்டும். தாக்குதல் தீவிரமானால், ஏக்கருக்கு 400 மில்லி பென்தயோட் 50% EC மருந்தை, ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
வெட்டுப்புழு அல்லது படைப்புழு: கோடையைத் தொடர்ந்து மழை பெய்யும் போது இப்புழுவின் தாக்குதல் தோன்றும். நாற்றங்காலிலும், அறுவடைக்கு முன் நீரில்லாத வயலிலும் தாக்குதல் அதிகமாக இருக்கும். நாற்றங்காலில் நாற்றுகளை வெட்டி விடும். பகலில் இப்புழுக்கள் வரப்பு வெடிப்புகளில், களைகளில் இருக்கும். இரவில் படையாகத் திரண்டு அறுவடைக்குத் தயாரான கதிர்களை வெட்டி விடும். இதனால், வயலானது மாடு மேய்ந்ததைப் போலக் காணப்படும்.
கட்டுப்படுத்துதல்: வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். வயலில் நீர் இருக்க வேண்டும். மாலையில் எட்டு சென்ட் நாற்றங்காலுக்கு 80 மில்லி குளோர்பைரிபாஸ் 20% EC வீதமும், வயலில் ஏக்கருக்கு 500 மில்லி வீதமும் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
குருத்து ஈ: இதன் புழு இலை மற்றும் இலை ஓரங்களைத் தாக்கும். எனவே, குருத்திலிருந்து வெளிவரும் இலைகள், ஓரங்கள் சுருங்கியும், துளைகளுடனும் இருக்கும்.
கட்டுப்படுத்துதல்: நடவு செய்து 30 நாட்கள் வரை, காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம் இருக்க வேண்டும். அசோலா இட்ட வயலில் இதன் தாக்கம் குறைவாக இருக்கும். 25% இலைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொருளாதாரச் சேத நிலையாகும்.
இந்நிலையில், ஏக்கருக்கு 10 கிலோ கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 4% G அல்லது 500 மில்லி குளோர்பைரிபாஸ் 20% EC அல்லது 400-600 மில்லி பிப்ரோனில் 5% SC அல்லது 10 கிலோ பிப்ரோனில் 0.3% G வீதம் தெளிக்க வேண்டும்.
மருந்துத் தெளிப்பில் பின்பற்ற வேண்டியவை
விசைத் தெளிப்பான் எனில், ஏக்கருக்கு 60 லிட்டர் நீரும், கைத்தெளிப்பான் எனில், ஏக்கருக்கு 200 லிட்டர் நீரும் வேண்டும். பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் போது, டாங்க்குக்கு 20 மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைச் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி ஒட்டும் திரவம் வீதம் சேர்க்க வேண்டும்.
திரும்பத் திரும்ப ஒரே மருந்தை அடிக்காமல், வெவ்வேறு மருந்துகளைச் சுழற்சி முறையில் அடிக்க வேண்டும். காலை அல்லது மாலையில் தான் மருந்தைத் தெளிக்க வேண்டும். சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான புகையான், நெல் சிலந்திகளின் மறு உற்பத்தித் திறனைக் கூட்டவல்ல, செயற்கை மருந்துகளை அடிக்கக் கூடாது.
முனைவர் இரா.இராம்ஜெகதீஷ்,
முனைவர் ச.ஆறுமுகச்சாமி, நெல் ஆராய்ச்சி நிலையம்,
அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம்.