கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கியப் பழமரம் மா. வெப்ப மண்டலப் பயிரான மாமரம், மார்ச்-ஜூன் காலத்தில் காய்க்கும். இந்த மரங்கள், காய்கள், பழங்களைப் பலவகைப் பூச்சிகள் தாக்கி, பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தத்துப் பூச்சிகள்
தாக்குதல் அறிகுறிகள்: தாய்ப் பூச்சிகள், பூங்கொத்து, இலை நடுநரம்புகளில் முட்டைகளை இடும். பிறகு, அவற்றிலிருந்து வெளிவரும் இளம் பூச்சிகளுடன் சேர்ந்து, இளங்குருத்துகள், பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சும். இதனால், குருத்துகளும் பூங்கொத்துகளும் கருகி விடும். அப்போது, தேனைப் போன்ற கழிவு வெளியேறிக் கரும் பூசணமாக இலைகளில் படரும். இதனால், ஒளிச்சேர்க்கை குறைந்து மகசூல் பாதிக்கும்.
கட்டுப்படுத்துதல்: இளந்தளிர்கள் வருமுன், மரத்திலுள்ள காய்ந்த சிம்புகளை அகற்ற வேண்டும். இதனால் சிம்புகளின் பட்டை வெடிப்புகளில் மறைந்துள்ள தத்துப் பூச்சிகள் அழிக்கப்படும். இளந்தளிர் மற்றும் பூக்கும் பருவத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 0.6 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 2 மில்லி பாஸ்போமிடான் 40 எஸ்.எல். அல்லது 2 மில்லி மானோகுரோட்டாபாஸ் அல்லது 1.5 கிராம் அசிபேட் அல்லது 2 மில்லி டைமித்தயேட் அல்லது 2 மில்லி பப்ரோசின் வீதம் கலந்து இருமுறை தெளிக்க வேண்டும். இந்தப் பூச்சிக்கொல்லிகளில் ஒன்றுடன், ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெய் வீதம் கலந்து தெளிக்கலாம்.
இலைகளைப் பிணைக்கும் புழுக்கள்
தாக்குதல் அறிகுறிகள்: இலைகளையும், குருத்துகளையும் பிணைக்கும் இளம் புழுக்கள், அதற்குள் இருந்து கொண்டு முதலில் இலையின் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். இதனால் பெருமளவில் தாக்கப்பட்ட மரம் தீயினால் எரிந்ததைப் போலிருக்கும்.
கட்டுப்படுத்துதல்: கன்றுகளைச் சரியான இடைவெளியில் நட வேண்டும். இதனால் போதிய வெளிச்சம் கிடைப்பதால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். மாதம் ஒருமுறை உழுதால், சூரிய வெப்பம் மற்றும் பறவைகளால் புழுக்கள் அழிக்கப்படும். ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி குளோர்பைரிபாஸ் அல்லது 1.5 மில்லி மானோகுரோட்டோபாஸ் அல்லது 2 மில்லி புரோபெனோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டுத் துளைப்பான்
தாக்குதல் அறிகுறிகள்: மரப்பட்டையின் வெடிப்பில் தாய் வண்டுகள் முட்டைகளை இடும். அவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள் தண்டுக்குள் நுழைந்து, அதன் உட்பகுதியைத் தின்னும். அப்போது, தண்டிலுள்ள துளைகள் வழியாகச் சாறு வடியும். மேலும், துளைகள் வழியே காய்ந்த சக்கைகள் உருண்டையாக வெளியேறும். தாக்குதல் தீவிரமானால் மரம் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: அதிகளவில் தாக்குண்ட கிளைகள் மற்றும் காய்ந்த மரங்களைத் தோப்பில் இருந்து வெட்டி அகற்ற வேண்டும். பப்பாளி மரத்தண்டைத் துண்டுகளாக வெட்டி மாமரத்தின் அருகில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கலாம். மழைக்குப் பிறகு விளக்குப்பொறியை வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மரத்தில் உள்ள துளையில் கம்பியைச் செலுத்திப் புழுக்களை அகற்ற வேண்டும். இத்துளையில் மண்ணெண்ணெய் அல்லது கிரியோசேட் அல்லது பெட்ரோல் எந்திர எண்ணெய்யைப் பஞ்சில் நனைத்து, களிமண்ணால் மூட வேண்டும்.
மரம் ஒன்றுக்கு 3 கிராம் செல்பாஸ் மாத்திரை அல்லது கார்போபியூரான் 5 கிராம் வீதம் துளையில் இட்டுக் களிமண்ணால் மூட வேண்டும். தாக்குண்ட மரத்தின் பட்டையில் நனையும் பஞ்சில் 10 மில்லி மானோகுரோட்டோபாஸ் மருந்தை வைத்து, பாலித்தீன் தாளால் மூடியும் கட்டுப்படுத்தலாம். மரத்தண்டில் ஓட்டை பெரிதாக இருந்தால், 5 கிராம் கார்போபியூரான் குருணையை இட்டுக் களிமண்ணால் மூடிவிட வேண்டும்.
மாங்கொட்டைக் கூன்வண்டு
தாக்குதல் அறிகுறிகள்: சதைப்பற்றுள்ள காய்களில் முட்டைகளைக் குவியலாக இடும் தாய் வண்டுகள், அந்தக் காய்களின் மூக்குப்பகுதியில் சிறிய காயத்தை உண்டாக்கி விடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் காய்களின் சதைப்பற்றைக் குடைந்து, மாங்கொட்டையின் உட்பகுதியை அடைந்து, வண்டாக மீண்டும் மாங்கொட்டையில் இருந்து வெளிவரும். முட்டையிடப்பட்ட பகுதியிலிருந்து மஞ்சள் நிறத்தில் சாறு வடியும். தாக்கப்பட்ட காய்கள் பெருமளவில் உதிர்ந்து விடும். ஒரு சில பழங்கள் உதிராமல் இருந்தாலும் அவை உண்ணும் வகையில் இருக்காது.
கட்டுப்படுத்துதல்: மரத்தின் வெடிப்பு, இடுக்குகளில் மண்ணெண்ணெய்யைத் தடவி வண்டுகளைக் கொல்ல வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு மாலத்தியான் 2 மில்லி அல்லது பென்தியான் 1 மில்லி வீதம் கலந்து, மார்ச் மாதத் தொடக்கத்திலும், அடுத்து 15 நாட்கள் கழித்தும், ஏப்ரலில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
பழ ஈ
தாக்குதல் அறிகுறிகள்: முட்டைகளை இடும் உறுப்பால், சற்றுப் பழுத்த காய்களைத் துளைத்து அதற்குள் இந்த ஈக்கள் முட்டைகளை இடும். இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள், பழச்சதையைத் தின்று விடுவதால், பழம் பழுப்பதற்கு முன்பே அழுகிக் கீழே விழுந்து விடும். புழுக்கள் தாக்கிய பழங்களில் பூசணம் வளர்ந்திருக்கும்.
கட்டுப்படுத்துதல்
பழ ஈக்கள் தாக்கிய பழங்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். தோப்பில் பாசனத்தை அதிகப்படுத்தியும், மரங்களைச் சுற்றி உழுது கீழ்மண்ணை மேலே புரட்டியும் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். தோப்பில் 5 சத வேப்பங்கொட்டைச் சாற்றைத் தெளித்தும் பழ ஈக்களின் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
மாந்தோப்பில் மீதைல் யூஜினால் கவர்ச்சிப் பொறியை ஐந்தடி உயரத்தில் எக்டருக்கு 12 வீதம் வைக்க வேண்டும். இதனால் ஆண் பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு மாலத்தியான் 2 மில்லி அல்லது டைமெத்தயேட் 2 மில்லி அல்லது பென்தியான் 1 மில்லி வீதம் கலந்து, அத்துடன் 1% வெல்லக் கரைசலையும் சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.
முனைவர் சு.இருளாண்டி,
முனைவர் ஜே.இராஜாங்கம், தோட்டக்கலைக் கல்லுரி, பெரியகுளம்,
முனைவர் ஆ.சோலைமலை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி.