நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தி Immune foods 1 scaled

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

டலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல் உருவாகும். நல்ல உணவு என்பது, முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், குறைந்த மாவுச்சத்து மற்றும் அதிகப் புரதமுள்ள உணவுகளைக் கொண்டதாகும். இதில், உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் கூட்டு கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து மற்றும் தாவர வேதிப்பொருள்கள் உள்ளன.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுப்புகள், நோயெதிர்ப்புச் சக்தி, பினாலிக் கூட்டுப்பொருள்கள் மற்றும் எதிர்ப்பு ஒவ்வாமைப் பொருள்கள் உள்ளன. பால், தயிர், யோகர்ட் என்னும் சுவையான தயிர் மற்றும் பால் பொருள்களில் கால்சியமும் புரதமும் மிகுந்துள்ளன. இவை உடற் செல்களை வலுப்படுத்தும். இவற்றிலுள்ள நல்ல நுண்ணுயிர்கள் நார்ச்சத்தை நொதிக்க வைத்து, குறுகிய சங்கிலியுள்ள கொழுப்பு அமிலங்களை உருவாக்கும். இவை நோயெதிர்ப்புச் சக்தியை அளிக்கும்.

மேலும், உணவில் பயன்படும் கிராம்பு, பட்டை, மஞ்சள், சீரகம், இஞ்சி, பூண்டு போன்ற மசாலாப் பொருள்களில், நோய்க் கிருமிகளிடம் இருந்து உடலைக் காக்கும் பண்புகள் உள்ளன. குறைவான கொழுப்புள்ள இறைச்சி, மீன், முட்டை, தாவரப் புரத உணவுகளான பீன்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் ஆகியன, நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்குகின்றன. நார்ச்சத்து மற்றும் தாவர வேதிப் பொருள்கள் அடங்கிய தாவரப் புரதங்கள், உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை உறுதி செய்கின்றன.

வைட்டமின் ஏ, சி, இ, டி, பி6, பி12, இரும்பு, துத்தநாகம், செலினியம், நார்ச்சத்து ஆகியன, நோயெதிர்ப்பு ஆற்றலைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் பெரியவர்கள் 30-40 கிராம் நார்ச்சத்து உணவை உண்ண வேண்டும். முழுத் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், நொதி உணவுகளான தயிர், யோகர்ட், இட்லி, ஆப்பம், நீராகாரம், ஊறுகாய் போன்றவை, நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இவை, தீய பாக்டீரியாக்களை அழிக்கும்.

எண்ணெய்யில் பொரித்த உணவுகள், சர்க்கரை இனிப்பு உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால், உடலில் கொழுப்பும் சர்க்கரையும் கூடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பதுடன், செரிவுறாக் கொழுப்புள்ள வனஸ்பதி, விரைவு உணவுகள், அதிகக் கொழுப்புள்ள இறைச்சி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். புகைக்கும் பழக்கத்தால், கட்டுப்பாடற்ற மூலக்கூறுகளான ப்ரிரேடிக்கல்ஸ் உருவாகி, நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். எனவே, சரிவிகித உணவை அன்றாடம் உண்டு உடல் நலத்தைக் காப்போம்.


நோயெதிர்ப்புச் சக்தி JESU PRIYA 1 e1631599152530

முனைவர் செ.ஜேசுப்பிரியா பூர்ணக்கலா,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன்.

முனைவர் கி.சாந்தி, இணைப் பேராசிரியர், சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading