நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

இலைப்பேன்

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

லைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை நிறத்தில் மெல்லிய உடலுடன் இருக்கும். இறக்கைகள் நீண்டு குறுகிய சீப்பைப் போலப் பல பிளவுகளுடன் இருக்கும். இதன் வாழ்க்கைச் சுழற்சி 13-19 நாட்களாகும்.

தாக்குதலுக்கான நிலை

நாற்றங்காலுக்கு அல்லது வயலிலுள்ள இளம் பயிருக்குப் போதிய பாசனம் செய்யாத நிலையில், அதாவது வறட்சியான சூழலில், வெப்பக் காலத்தில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

சேத அறிகுறிகள்

இளம் குஞ்சுகளும், வளர்ந்த பேன்களும் தளிர் இலைகள் மற்றும் இளம் குருத்துகளின் சாற்றை உறிஞ்சிச் சேதத்தை ஏற்படுத்தும். அதிகமாகத் தாக்கப்பட்ட பயிர்களின் இலைகள் நீளவாக்கில் நுனியிலிருந்து சுருண்டும், காய்ந்தும், தீய்ந்ததைப் போலிருக்கும். பேன்களின் தாக்குதல் மிகுந்தால் நாற்றுகள் இறந்து விடும். நாற்றங்காலில் இதன் தாக்குதல் மிகவும் அதிகமாக இருக்கும்.

பொருளாதாரச் சேதநிலை

ஒரு சதுர மீட்டரில் 10 சத நாற்றுகளின் முதல் இரு இலைகளின் ⅓ அல்லது ½ நுனி சுருண்டிருத்தல். நீரில் நனைத்த உள்ளங்கையை இலைகளின் மேல் 12 இடங்களில் தடவி எடுக்கும்போது 60 மஞ்சள் நிறக் குஞ்சுகள் அல்லது சிறு கரும்புள்ளிகள் போன்ற இலைப்பேன்கள் கைகளில் ஒட்டியிருத்தல்.

கட்டுப்படுத்துதல்

நாற்றுகளை ஒருநாள் முழுதும் நீரில் மூழ்கச் செய்து பின்பு நீரை வடிகட்ட வேண்டும். நாற்றுகளின் மேல் ஈரத்துணியை மேலோட்டமாக இழுத்துச் சென்றால் அதில் இலைப்பேன்கள் ஒட்டிக்கொள்ளும். நல்ல மழை பெய்தால் இப்பேன்கள் மறைந்து விடும். இப்பேன்களைச் சாப்பிடும் பொறி வண்டுகள், தரைநீள் வண்டுகள் வயலில் நிறைய இருந்தால் இயற்கையாகவே இலைப்பேன்கள் கட்டுக்குள் இருக்கும். வேப்பெண்ணெய் மருந்தான அசடிராக்டினை 0.03 சத அளவில் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு 40 கிராம் வீதம் தயோமீதாக்ஸாம் 25 WG என்னும் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

இலைச் சிலந்தி அல்லது செம்பேன்

நெற்பயிரைத் தாக்கும் ஒலிகோனைகஸ் ஒரைஸே என்னும் இலைச்சிலந்தி, பூச்சியினம் அல்லாத உயிரினமாகும்.

சேத அறிகுறிகள்

இலையின் அடியில் கூட்டம் கூட்டமாக இருக்கும் மிகச்சிறிய குஞ்சுகள் மற்றும் வளர்ந்த செம்பேன்கள் சாற்றை உறிஞ்சிப் பச்சையத்தை இழக்கச் செய்யும். இதனால், இலைகளில் வெண்ணிறப் புள்ளிகள் உண்டாகும். பிறகு இவை ஒன்றாகி, நீளவாக்கில் கீற்றைப் போல மாறும். அதிகளவில் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாகும். சில நேரங்களில் சாம்பலைத் தூவியதைப் போலிருக்கும். நாற்றங்கால் மற்றும் இளம் பயிர்களில் 45 நாட்கள் வரை இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாக்குதல் வரப்பு ஓரங்களில் தொடங்கி, காற்று வீசும் திசையில் வயலுக்குள் நீளும்.

தாக்குதலுக்கான நிலை

பகல் வெப்பம் 35-37 டிகிரி இருத்தல். காற்று, மணிக்கு 6-13 கி.மீ. வேகத்தில் வீசுதல். தொடர்ந்து நீர்ப் பற்றாக்குறை அல்லது வறட்சி நிலவுதல்.

கட்டுப்படுத்துதல்

அறுவடைக்குப் பின்பு அடித்தாள்களை நன்கு மடக்கி உழ வேண்டும். சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். வரப்புப் புல்லில் சிலந்திகள் உற்பத்தியாகி வயலுக்குள் பரவும். எனவே, வரப்புகள் களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஏக்கருக்கு 500 மில்லி டைகோபால் 18.5 EC மருந்து அல்லது 400 கிராம் நனையும் கந்தகம் 50 WP மருந்தைத் தெளிக்கலாம்.


இலைப்பேன் RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

நீடாமங்கலம்-614404, திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading