கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020
கப்பி மீன் உலகில் பரவலாக இருக்கும் வெப்ப மண்டல மீனினம். பல்வேறு வண்ணங்கள், வடிவம், அளவு மற்றும் பலதரப்பட்ட வால் துடுப்புகளுடன் முந்நூற்றுக்கும் மேலான கப்பியினங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் தாயகம் தென்னமெரிக்கா. போசிலிடே குடும்பத்தைச் சார்ந்தது.
1866 இல் ராபர்ட் ஜான்லாச்மரே கப்பி என்பவரால், டிரினிட் தீவுகளில் கண்டறியப்பட்டதால் இம்மீன் கப்பி எனப்படுகிறது. பிறகு, இம்மீன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் குந்தர் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டு, கிராடினஸ்குப்பி எனப் பெயரிடப்பட்டது. பிறகு, பல்வேறு பெயர்களுக்கு மாறிய இம்மீன், இப்போது போசிலியா ரெட்டிகுலாட்டா என்னும் அறிவியல் பெயரைக் கொண்டுள்ளது.
குணம்
கப்பி மீன் சிறியதாகவும் சாதுவாகவும், பல நிறங்களிலும் இருக்கும். இதை மற்ற இனங்களைச் சேர்ந்த அமைதியான மீன்களுடன் ஒரே தொட்டியில் வளர்க்கலாம். எப்போதும் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நீந்திக்கொண்டே இருப்பது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். எனவே, புதிதாக அலங்கார மீன் வளர்ப்போர் மற்றும் அனுபவமிக்க அலங்கார மீன் வளர்ப்போர் இம்மீனை விரும்புகின்றனர். ஆண் மீன்கள் துடுப்புகளை மேலும் கீழும் மற்றும் பக்கவாட்டில் அசைத்தும், பெண் மீன்களை முட்டியும், அவற்றைக் கவரும் முயற்சியில் ஈடுபடும்.
வண்ணம்
நாம் கற்பனை செய்து பார்க்கும் அனைத்து நிறங்களிலும் கப்பி மீன்கள் உள்ளன. எனவே, இவற்றுக்கு வானவில் மீன்கள் என்னும் பெயரும் உண்டு. கப்பி மீன்களின் மேல்பகுதி வெளிர் நிறத்திலும், பின்பகுதி பளிச்சென அழகான நிறத்திலும் உள்ளன. சிலவகை மீன்கள், இரிடோபொர்ஸ் என்னும் நிறமற்ற, ஒளியைப் பிரதிபலிக்கும் செல்களைக் கொண்டுள்ளன. இவை தம்மீது படக்கூடிய ஒளியைப் பிரதிபலிப்பதால், ஜொலிக்கும் உலோகங்களைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளன.
வண்ண வடிவமைப்பு
சிலவகைக் கப்பி மீன்கள் அழுத்தமான நிறங்களில் உள்ளன. சிலவகை மீன்கள் பல நிறங்களில் உள்ளன. நிற அமைப்புகளை வைத்து, இந்த மீன்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கப்பி மீன்களில் வால் அழுத்தமாக ஒரு நிறத்தில் அல்லது பல நிறங்களில் இருக்கும். எனவே, வாலை வைத்து இவற்றின் பெயர்கள் அமைந்துள்ளன.
வாலின் வடிவங்கள்
விசிறி வடிவம், முக்கோண/டெல்டா வடிவம், வாள் வடிவம் (மேல்வாள் மற்றும் கீழ்வாள்), கொடி வடிவம், மண்வெட்டி வடிவம், வட்ட வடிவம், ஈட்டி வடிவம், அரைநிலா வடிவம், ஊசி வடிவம், லயர்டையில் வடிவம்.
தொட்டி அமைப்பு
கப்பிமீன் வளர்ப்புக்கு நன்கு இயங்கும் வடிகட்டியுடன் கூடிய, சுத்தமான மற்றும் வெதுவெதுப்பான (22-26 டிகிரி செல்சியஸ்) நீருள்ள மீன்தொட்டி தேவை. மீனின் பளிச்சிடும் தோற்றமும் நலமும், மீன்தொட்டிப் பராமரிப்பைப் பொறுத்தே அமையும். கப்பிமீன் வளர்ப்புக்கு, 50 லிட்டர் நீருள்ள அலங்கார மீன் தொட்டியே போதும். இம்மீன்கள் 5.5-8.5 கார அமிலத் தன்மையில் வளரக் கூடியது. இதில் 7.0-7.2 கார அமிலத் தன்மை மிகவும் ஏற்றது.
நீர்வாழ் தாவரங்கள், கற்கள் மற்றும் மணலால் அமைக்கப்பட்ட மீன்தொட்டி, இந்த மீன்களை, உயிருள்ள அணிகலன்களாக உருவகப்படுத்தும். பொதுவாக, கப்பி மீன்கள் தொட்டி நீரின் நடுவில் வசிக்கக் கூடியவை. எனவே, தொட்டியின் அடிப்பாகத்தைக் கல், மண் போன்ற எந்தப் பொருளையும் பயன்படுத்தி அமைக்கலாம்.
கப்பி மீன்களின் அழகான, வண்ணமிகு தோற்றம் காரணமாகவே மக்கள் இவற்றை விரும்புகின்றனர். இதிலும், பெண் மீன்களைவிட அதிக நிறத்திலுள்ள ஆண் மீன்களே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. 50 லிட்டர் நீருள்ள தொட்டியில் 8 மீன்களை வளர்க்கலாம். ஆண், பெண் மீன்களை 3:1 என்னும் விகிதத்தில் ஒன்றாக வளர்க்கலாம்.
குட்டியிடும் வகையைச் சேர்ந்த மோலி, பிளாட்டி, வாள்வால் மீன்கள் மற்றும் கௌராமி, கோரிடோரா, சாதுவான டெட்ரா போன்ற சாதுவான மீனினங்களுடன், கப்பி மீன்களையும் வளர்க்கலாம். சிவப்புவால் சுறா, பார்ப், முரட்டு டெட்ரா போன்ற முரட்டுத்தனமான பெரிய மீன்களுடன், கப்பி மீன்களை வளர்க்கக் கூடாது.
ஆண், பெண் வேறுபாடு
கப்பி மீன்களில் ஆண், பெண் மீன்களை எளிதாகக் கண்டறியலாம். பெண் மீன்களைவிட ஆண் மீன்கள் அழுத்தமான நிறத்தில் பளிச்சென இருக்கும். மேலும், ஆண் மீன்களின் வயிற்றுப் பகுதித் துடுப்பானது, கோனபோடியம் எனப்படும் குச்சி போன்ற அமைப்பில் இருக்கும். பெண் மீன்களில் இதே துடுப்புக்குப் பின்புறம் கர்ப்பப்புள்ளி இருக்கும். இது கர்ப்பக் காலத்தில் மிகவும் கறுப்பாக மாறுவதுடன், அதன் அளவும் அதிகரிக்கும். ஆறு, ஏரி போன்ற இயற்கை வாழிடங்களில் காணப்படும் பெண் மீன்கள் சாம்பல் நிறத்திலும், ஆண் மீன்கள் பல்வேறு நிறங்களுடன் கூடிய கோடு, புள்ளி மற்றும் திட்டுகளுடனும் இருக்கும்.
வண்ணமீன் வளர்ப்பாளர்கள் கப்பிமீனில் மேற்கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் காரணமாக, பளிச்சிடும் பல நிறங்களைக் கொண்ட நிறைய இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண் மீன்கள் சிறியளவில் 0.6-1.4 அங்குலம் வளரும், பெண் மீன்கள் சற்றுப் பெரியளவில் 1.2-2.4 அங்குலம் வளரும்.
உணவு முறை
கப்பி அனைத்துண்ணி மீனாகும். செயற்கை உணவுகள், உயிருள்ள கொசுப்புழுக்கள் போன்றவற்றை உண்ணும். புரதம் நிறைந்த தரமான உணவுகளைத் தர வேண்டும். கோதுமை மற்றும் சோயா உணவுகளைத் தரக் கூடாது. உயிருள்ள மற்றும் உறையில் இடப்பட்ட இறால் மற்றும் இரத்தப் புழுக்களைத் தரலாம். தினமும் 1-2 முறை உணவிட வேண்டும். இரண்டு நிமிடத்தில் உண்ண முடியும் அளவில் மட்டுமே தர வேண்டும்.
இதைவிடக் கூடுதலாகத் தரப்படும் உணவு மற்றும் உண்ணப்படாத உணவால் நீரின் தரம் பாதிக்கப்படும். பலவகை உணவுகளை அளித்தால், மீனில் சத்துக்குறை ஏற்படாது. மேலும், சத்துக்குறையைத் தவிர்க்க, செயற்கையான குருணை உணவு, உயிருள்ள உணவு மற்றும் குளிர்ப்பதன உணவை வெவ்வேறு நாட்களில் அளிக்கலாம்.
இனப்பெருக்கத் தொட்டி
கல், மணல் ஏதுமற்ற வெற்று அடிப்பகுதியைக் கொண்ட தொட்டி, கப்பிமீன் இனப்பெருக்கம் செய்ய ஏற்றது. இதன் மூலம் உண்ணப்படாத உணவு மற்றும் மீன் கழிவை எளிதாக வெளியேற்றலாம். நீரித் தாவரங்களை இந்தத் தொட்டியில் வளர்ப்பது, மீன்குஞ்சுகள் ஒளிவதற்கான இடமாகவும், நீரைச் சுத்தப்படுத்தவும் உதவும். அடுத்து, வாரம் ஒருமுறை இனப்பெருக்கத் தொட்டியைச் சுத்தம் வேண்டும்.
இனப்பெருக்கம்
கப்பிமீன், குட்டிகளை ஈனும் வகையைச் சார்ந்தது. இதை இனப்பெருக்கம் செய்யக் கடின முயற்சிகள் தேவையில்லை. பெண் மீனின் உடலிலேயே முட்டை கருவுற்று, கருமுட்டைப் பையில் வளர்ந்து இளமீனாகப் பிறக்கும். கருவுற்ற மீன்களையும், கருவுறாத மீன்களையும் கண்டறிய இயலும். பெண் மீனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆண் மீன், விந்து மூட்டையை, கோனபோடியம் மூலம் பெண்மீனின் உடலில் செலுத்தும். இம்மூட்டையானது, சிறிய பைகளாக மாற்றப்பட்டு, பெண்மீனின் உடலில் சேமித்து வைக்கப்படும். ஆண் மீனின் தொடர்பே இல்லாமல், இந்த விந்து மூலமாக, ஒரு பெண் மீன் 6-7 முறை கருவுற இயலும்.
கர்ப்பக்காலம்
கப்பி மீனின் கர்ப்பக்காலம் 21-30 நாட்களாகும். கருவுற்ற பிறகு முட்டையில் முழுக்கரு உருவாக 3-4 நாட்கள் ஆகின்றன. மீதமுள்ள கர்ப்பக் காலத்தில் கருவிலிருந்து உடல் உறுப்புகள் உண்டாகின்றன. கர்ப்பக் காலத்தின் இறுதி நாட்களில், வயிற்றிலுள்ள மீன் குஞ்சுகளின் கண்களை, ஒளி ஊடுருவும் பெண்மீனின் தோல்வழியாகக் காணலாம்.
கப்பி மீன்கள் தங்களின் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை. எனவே, பெரிய மீன்களிடம் இருந்து குஞ்சுகளைக் காக்க, பாதுகாப்பான இடம் அவசியம். இதற்குப் பலவகையான இனப்பெருக்கக் கூடுகளைப் பயன்படுத்தலாம். அல்லது மீன் தொட்டியில் தாவரங்களை விடலாம். மிகச் சிறிய மீன் குஞ்சுகளுக்கு இடும் உணவை, இடித்து அல்லது மசித்துச் சிறு துகள்களாகத் தர வேண்டும். இப்படி ஒருநாளில் 5-6 முறை தர வேண்டும்.
நோய்கள்
இச் நோய்: கப்பி மீன்கள் மிகவும் கடினமானவை என்றாலும், அவற்றின் நீண்ட வால்கள் காரணமாகப் பூசண நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குளிர் காலத்தில் புரோட்டடோசோவா மூலம் இச் எனப்படும் அரிப்பு நோய் ஏற்படுவதால், சிறிய வெண்புள்ளிகள் உடலில் உருவாகும். இதனால், உடலை ஏதாவது ஒரு பொருளின் மீது தேய்க்கும். இந்த நோயிலிருந்து குணமாக்க, அலங்கார மீன் கடைகளில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது உப்புக் கரைசல் சிகிச்சை தரலாம்.
துடுப்பழுகல் நோய்: இதனால், கப்பி மீன்களின் வால் அழுகிக் கிழிந்ததைப் போல இருக்கும். உரிய மருந்துகளை அலங்கார மீன் கடைகளில் வாங்கிக் குணப்படுத்தலாம். மேலும், கப்பி மீன்களுடன் வளர்ப்பதற்கான மற்ற இன மீன்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பதன் மூலமும், பாதிப்படைந்த வால் பகுதியைச் சேதப்படுத்தாத மீன்களுடன் வளர்ப்பதன் மூலமும், இந்நோயைத் தடுக்கலாம்.
நோய்களைக் குறைக்கும் வழிமுறைகள்
வளர்ப்புத் தொட்டியில் கப்பி மீனுக்கு ஏற்ற வகையில் நீரின் தரம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நீரை மாற்ற வேண்டும். நட்பாகப் பழகும் மீன் வகைகளை மட்டுமே கப்பியுடன் விட வேண்டும். வெவ்வேறு வகையான உணவைக் கொடுக்க வேண்டும். தொட்டியில் சரியான எண்ணிக்கையில் மீன்களை விட வேண்டும்.
முனைவர் சா.ஆனந்த்,
வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு நிலையம், பவானிசாகர், ஈரோடு.
ச.சுதர்சன், மத்திய மீன்வளக் கல்வி நிலையம், மும்பை.
சு.பாரதி, திட்ட உறுப்பினர், தானம் அறக்கட்டளை, மதுரை.