செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022
உறுதியான வருமானம் தரக்கூடிய துணைத் தொழிலாக மீன் வளர்ப்பு விளங்குகிறது. காரணம், சந்தை வாய்ப்பு மிகவும் எளிதாக உள்ளது. வணிகர்கள் மற்றும் இடைத் தரகர்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. மீன்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேடிச் சென்று வாங்குவதால் எளிதில் விற்றுக் காசு பார்க்கலாம். மேலும், பெரும்பாலும் விலை சரிவு ஏற்படுவதில்லை. எப்போதும் நிலையான விலை கிடைக்கிறது. குறிப்பிட்ட தேதிக்குள் அறுவடை செய்து விற்பனை செய்தே ஆக வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை.
மீன் வளர்ப்பில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய சிக்கல் ஏதும் இல்லை. இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும், ஆர்வமுள்ள அனைவராலும் கால் பதிக்க முடியாத சூழலே உள்ளது. இதற்குக் காரணம், குளம் கிடைப்பது பெரும் சவாலாக இருப்பதும், அதிகமாக நீர்த் தேவைப்படுவதும் ஆகும். இந்நிலையில் தான் நாம் நினைத்த இடத்தில் மீன் வளர்க்கக் கை கொடுக்கிறது பயோ பிளாக் தொழில் நுட்பம்.
இம்முறையில் தொட்டியில் மீன்களை வளர்த்து வருமானம் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யோரம் என்னும் பேராசிரியர் தான் இந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் பயோ பிளாக் முறையில் தொட்டிகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில், வட மாநிலங்களில் சில ஆண்டுகளாக இம்முறையில் இறால்களை வளர்க்கிறார்கள்.
ஆயிரம் லிட்டர் நீர் 40 கிலோ மீன்
இந்த முறையில் ஆயிரம் லிட்டர் நீரில் 35-40 கிலோ மீன்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தளவு நீரில் குளத்தில் வழக்கமான முறையில் வளர்த்தால் 5 கிலோ மீன்கள் தான் கிடைக்கும். காரணம், அதிக மீன்கள் வளரத் தேவையான ஆக்சிஜன் குளத்தில் கிடைக்காது. மேலும், மீன் தீவனக் கழிவும் மீன்களின் எச்சமும் நீரில் கலந்து, நச்சு அமோனியாவாக, நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாக மாறும். எனவே, குறைந்த அளவில் தான் மீன்களை வளர்க்க முடியும்.
ஆனால், பயோ பிளாக் முறையில் நாம் உருவாக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள்; மீன்களின் எச்சம் மற்றும் தீவனக்கழிவை உணவாகக் கிரகித்து, பயோ பிளாக் என்னும் துகள்களை வெளியிடும். இவை மீன்களுக்கு மிகவும் சத்தான உணவாகும். இந்தத் துகள்களில் 49% புரோட்டீன், 11% கார்போஹைட்ரேட், 5% கொழுப்பு உள்ளன.
மேலும், மீன்களுக்குத் தேவையான அமிலங்களும் நுண் சத்துகளும் உள்ளன. இந்தத் துகள்கள் 24 மணி நேரமும் நீரில் மிதந்து மீன்களுக்கு உணவாவதால், தீவனச் செலவும் குறையும். தொட்டிக்குள் எப்போதும் போதியளவில் ஆக்சிஜன் கிடைக்க, மோட்டார் மூலம் 24 மணி நேரமும் காற்றைச் செலுத்த வேண்டும்.
தொட்டித் தயாரிப்பு
இரும்புக் கம்பிகள் மற்றும் தார்ப்பாலின் தாள்கள் மூலம் ஒரு தொட்டியை அமைக்க ரூ.35,000 செலவாகும். இது, 5-8 ஆண்டுகள் உழைக்கும். இதற்கு நிழல் வலை அமைக்க ரூ.1,200 ஆகும். ஆக்சிஜனைச் செலுத்தும் 90 வாட்ஸ் மோட்டார், நீரிலுள்ள அமில காரநிலை, அம்மோனியா ஆகியவற்றின் அளவை அறிய உதவும் கருவிகளை வாங்க ரூ.14,000 செலவாகும்.
வளர்ப்பு முறை
நான்கு மீட்டர் சுற்றளவு, 1.5 மீட்டர் உயரமுள்ள தொட்டியை அமைத்து அதில் 13,000 லிட்டர் நீரை நிரப்ப வேண்டும். இதில், 100 மி.லி. குளோரினை இட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து அயோடின் நீக்கப்பட்ட 8-10 கிலோ கல்லுப்பை இட வேண்டும். நீரின் அமில கார நிலையைச் சோதிக்க வேண்டும்.
அது 6.5 க்குக் குறைவாக இருந்தால், 500 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பைத் தனியாக 20 லிட்டர் நீரில் கலந்து, தொட்டியில் பரவலாக ஆங்காங்கே ஊற்ற வேண்டும். அது 8 க்கு மேல் இருந்தால், 330 கிராம் சமையல் சோடாவைத் தனியாக 20 லிட்டர் நீரில் கலந்து தொட்டியில் ஆங்காங்கே பரவலாக ஊற்ற வேண்டும்.
எத்தனை குஞ்சுகளை விடலாம்?
இந்தத் தொட்டியின் கொள்ளளவு 15,000 லிட்டர் ஆகும். எனவே, இதில் 800-1200 மீன் குஞ்சுகளை விடலாம். குறிப்பாக, ஐந்து கிராம் எடையுள்ள 900 குஞ்சுகளை விடலாம். ஏரி வெளவால், திலேப்பியா, ரூப் சந்த் மற்றும் ரோகு, கட்லா, மிர்கால் போன்ற சாதாரணக் கெண்டை மீன் குஞ்சுகளை விடலாம். ஒரு தொட்டியில் ஒரே இரகக் குஞ்சுகளைத் தான் விட வேண்டும்.
சராசரியாக ஒரு கிலோ மீன் உற்பத்திக்கு ரூ.53 செலவாகும். அதில், இரு குஞ்சுகளின் விலை ரூ.7 ஆகும். தீவனச் செலவு ரூ.36 ஆகும். மின் கட்டணம் ரூ.4. இதர செலவினம் ரூ.6 ஆகும். எனவே, ஒரு தொட்டியில் 420 கிலோ மீன்களை உற்பத்தி செய்ய 22,260 ரூபாய் செலவாகும்.
தீவனம்
முதல் ஆறு வாரங்களுக்குத் தினமும், மீன் குஞ்சுகளின் மொத்த எடையில் 15% அளவில் தீவனம் தரப்பட வேண்டும். இதைப் பிரித்து ஐந்து தடவையில் தர வேண்டும். பிறகு, மூன்று மாதம் வரை 3-4% தீவனமும், நான்காம் மாதத்தில் இருந்து ஆறாம் மாதம் வரை ஒரு சதத் தீவனமும் தரப்பட வேண்டும். தீவனம் கடைகளில் கிடைக்கும். அதில், கடலைப் புண்ணாக்கு 30%, அரிசித் தவிடு 36%, மரவள்ளிக் கிழங்கு மாவு 14%, கருவாட்டுத்தூள் 19% தாதுப்புகள் 1% கலந்திருக்கும்.
சோதனைக் கருவிகள் மூலம் அவ்வப்போது நீரிலுள்ள அமில கார நிலையை அளந்து பார்க்க வேண்டும். கார அமில நிலையை முறையாகப் பேண வேண்டும். சோதனை செய்வது கடினமில்லை. எளிதாகச் செய்ய முடியும்.
பயோ பிளாக் முறையில் தொட்டியில் மீன்களை வளர்க்க ஆர்வம் உள்ளோர், முதலில் இரண்டு தொட்டிகளில் மட்டும் வளர்க்கலாம். பிறகு, இதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, படிப்படியாக 4 தொட்டிகள், 6 தொட்டிகள் எனக் கூட்டலாம். தினசரி மேலாண்மை அவசியம். தொழிலாளர்களை மட்டும் நம்பி விட முடியாது.
நுண்ணுயிரிகளுக்கான கலவைத் தயாரிப்பு
குளத்தில் பாசி படிந்த நீர் 400 மில்லி, குளத்து மண் 500 கிராம், நாட்டுச் சர்க்கரை 50 கிராம், தயிர் 100 மில்லி, கோதுமை மாவு 1 கிலோ, வைட்டமின் சி மாத்திரை 4 ஆகியவற்றை 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். இப்படிச் செய்து 48 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் உருவாகி விடும். ஒரு துளையின் வழியாக அவ்வப்போது காற்றைச் செலுத்த வேண்டும். இந்தக் கலவையை அடுத்த ஐந்து நாட்கள் கழித்துத் தொட்டியில் ஊற்ற வேண்டும். இது ஒரு தொட்டிக்கான அளவாகும்.
அடுத்த ஏழு நாட்களில் நுண்ணுயிரிகள் நீரில் பரவலாகக் கலந்து விடும். பிறகு, நீரைச் சோதிக்க வேண்டும். அமில கார நிலை 7-8 இருக்க வேண்டும். அம்மோனியா 0.5 பி.பி.எம். இருக்க வேண்டும். அம்மோனியம் அதிகமாக இருந்தால், காலை 9-10 மணிக்குள் 200 கிராம் நாட்டுச் சர்க்கரையைப் போட வேண்டும்.
மாடியிலும் வளர்க்கலாம்
இந்த முறையில் மீன் வளர்க்க குறைந்தளவு நீரே பயன்படுவதால் எங்கே வேண்டுமானாலும் அமைக்கலாம். மாடித்தோட்டம் உள்ளவர்களும் செய்யலாம். வீட்டின் தோட்டப் பகுதிகளிலும் மாடியிலும் மீன்களை வளர்க்க முடியும். அதன் மூலம் பெண்கள் வீட்டிலிருந்து வருமானம் ஈட்ட முடியும்.
ஓர் அறுவடைக் காலத்துக்கு நீரை மாற்றத் தேவையில்லை. அல்லது நீரைக் குறைந்தளவில் மாற்றினால் போதும். இது சத்துகள் நிறைந்த நீரென்பதால், அறுவடை முடிந்ததும் தொட்டியில் உள்ள நீரை வயல் அல்லது வீட்டுத் தோட்டப் பயிர்களுக்குப் பாய்ச்சினால் அவை செழிப்பாக வளரும்.
குஞ்சுகளைத் தொட்டியில் இட்ட நான்காம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். 350-400 கிராம் எடையுள்ள மீன்களை மட்டும் பிடித்து விற்கலாம். ஆறாம் மாதம் 500 கிராமுக்கு மேலுள்ள மீன்களை அறுவடை செய்யலாம். 4 முதல் 6 மாதங்களில் 420 கிலோவுக்கு அதிகமான மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ 120-150 ரூபாய் விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. குறைந்தது ரூ.100 என்று கணக்கு வைத்தாலும் 42,000 ரூபாய் வருமானம் எடுக்கலாம்.
மீன் குஞ்சுகள், நுண்ணுயிரிக் கரைசல், தீவனம், ஆக்சிஜன், மோட்டார் மின் கட்டணம், மீன் அறுவடை என 22,260 ரூபாய் செலவாகி விடும். அதுபோக 19,740 ரூபாய் இலாபம் கிடைக்கும். ஒரு தொட்டியில் இருந்து ஆண்டுக்கு இருமுறை மகசூல் எடுப்பதன் மூலம் 39,480 ரூபாய் இலாபம் பார்க்கலாம்.
டாக்டர் பா.இளங்கோவன்,
பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,
பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம்,
துவாக்குடி, திருச்சி-15.