கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
கலப்பின நாட்டுக்கோழிகள் அதிக முட்டைகளை இடும். குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும். நாட்டுக்கோழி முட்டைகளைப் போன்ற வடிவம், நிறத்தில் இருப்பதால் அதிக இலாபம் ஈட்டலாம். இவற்றை, வீட்டிலுள்ள பெண்கள் பொழுதுபோக்காக வளர்க்கலாம்,
வகைகள்
நந்தனம் கோழி1, நந்தனம் பிராய்லர்2, நாமக்கல் கோழி1. கிரிராஜா, வனராஜா, கிராம லட்சுமி, ஸ்வர்ணதாரா, கிராமப்பிரியா. இவற்றில் நந்தனம் கோழி1, நந்தனம் பிராய்லர்2, நாமக்கல் கோழி1 ஆகிய மூன்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக வெளியீடாகும். நந்தனம் கோழி1, நந்தனம் பிராய்லர்2 முறையே, நிறைய முட்டை மற்றும் இறைச்சியைத் தரும்.
நாமக்கல்1 கோழிகள் அடை காப்பதில்லை. இவற்றின் முட்டைகளை மற்ற நாட்டுக்கோழிகளில் அடை வைக்கலாம். அல்லது பொரிப்பான் மூலம் பொரிக்க வைக்கலாம். இந்தக் கோழி 4-5 மாதங்களில் 1-2 கிலோ எடையும், சேவல் 2 கிலோ எடையும் இருக்கும். இவற்றை, புறக்கடை மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை, ஆழ்கூளம் மற்றும் கூண்டு முறையில் வளர்க்கலாம்.
தீவன மேலாண்மை
தானியங்கள், புண்ணாக்கு, தவிடு கலந்த கலவையை, தினமும் வளர் பருவக் கோழிக்கு 50-100 கிராம், வளர்ந்த கோழிக்கு 100-150 கிராம் வீதம் கொடுக்க வேண்டும்.
தாக்கும் நோய்கள்
இராணிக்கெட் என்னும் வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், கோழி காலரா, சளி நோய், கழிச்சல் மற்றும் மஞ்சள் ஈரல் நோய், தலை வீக்க நோய், ஒட்டுண்ணி நோய்கள்.
அடை முட்டைப் பாதுகாப்பு
ஒரு பாத்திரத்தில் மணலை நிரப்பி லேசாக நீரைத் தெளித்து, அதன் மேல் சாக்கை விரித்து, அதில் முட்டைகளை வைக்க வேண்டும். பின்பு சுத்தமான பருத்தித் துணியால் மூடி வைக்க வேண்டும்,
இளங்குஞ்சுகள் பாதுகாப்பு
பாய், காகித அட்டை அல்லது தகரத்தைக் கொண்டு 1-1.5 அடி உயரத்தில் தடுப்பை அமைத்து அதற்குள் குஞ்சுகளை வளர்க்க வேண்டும். கோடையில் இரண்டு வாரத்துக்கு பதினாறு மணி நேரமும், குளிர் காலத்தில் 4 வாரத்துக்கு 22 மணி நேரமும் வெப்பத்தைக் கொடுக்க வேண்டும். நீரைக் காய்ச்சி ஆற வைத்தும், குளுக்கோசைக் கலந்தும் முதல் இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
பொது மேலாண்மை
சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை குடற்புழுக்களை நீக்க வேண்டும். வெளிப்புற ஒட்டுண்ணிகளை முறைப்படி நீக்க வேண்டும். நல்ல வேலி இருக்க வேண்டும். தினமும் எச்சம் மற்றும் எஞ்சிய தீவனப் பொருள்களை அகற்ற வேண்டும். சத்தில்லாக் கோழிகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டும்.
தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழி இறைச்சி, முட்டைத் தேவையை ஈடு செய்ய, வழக்கமான நாட்டுக் கோழிகளைக் காட்டிலும் தரம் உயர்த்தப்பட்ட வனராஜா, கிராமப்பிரியா நாட்டுக் கோழிகள் உகந்தவையாக உள்ளன. இக்கோழிகள் அதிக முட்டைகளை இடும். குறுகிய காலத்தில் அதிக எடையை அடையும். நாட்டுக்கோழி முட்டைகளைப் போன்றே இருப்பதால் அதிக இலாபம் ஈட்டலாம்.
வனராஜா, கிராமப்ரியா கோழிகள் அதிக உற்பத்தித் திறனை உள்ளவை. நோயெதிர்ப்புச் சக்தி மிகுந்துள்ளதால், இவற்றைப் பெரியளவிலும், சிறியளவில் வீட்டுக் கொல்லையிலும் வளர்க்கலாம்.
மருத்துவர் வ.குமரவேல்,
முனைவர் சு.செந்தூர்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம்.